அழைப்பே ஆசீர்வாதம்

Home » அழைப்பே ஆசீர்வாதம்

அழைப்பே ஆசீர்வாதம்

தேவன் ஒரு மனிதனை ஆசீர்வதிக்க விரும்பினால் முதலாவதாக அவனை அழைக்கிறார். நாம் ஆசீர்வாதத்தை சுதந்தரிக்கும்படி அழைக்கப்பட்டவர்கள் என்று 1 பேதுரு 3:9 கூறுகிறது. தேவன் ஆபிரகாம் ஒருவனாயிருக்கையில் அவனை அழைத்து, ஆசீர்வதித்து, பெருகப்பண்ணினார் என்று ஏசாயா 51:2- இல் வாசிக்கிறோம். நாம் அழைக்கப்பட்டதே ஆசீர்வதிக்கப்படத்தான்! அழைப்பே ஆசீர்வாதம்தான்!

அழைப்பிற்கும் பரிசுத்தத்துக்கும் நெருங்கிய பிணைப்பு உண்டு. ஆவிக்குரிய ரீதியில் “அழைப்பு” என்றால் மற்றவர்களிடமிருந்து தேவன் நம்மைப் பிரித்தெடுத்தல் என்று பொருள்படும். பரிசுத்தம் என்ற வார்த்தையின் பொருளே அதுதான். ஆம், பரிசுத்தமுள்ள தேவன் தனக்கென்று எதையெல்லாம் பிரித்து எடுத்துக்கொள்ளுகிறாரோ அதுவெல்லாம் பரிசுத்தமாக இருக்கிறது. பரிசுத்தத்துக்கு எதிர்ப்பதம் commonness என்பதாகும். பரிசுத்தம் விசேஷமானது. அதற்கு எதிராக இருப்பது எந்த விசேஷமும் இல்லாதது. பொதுவான ஒன்று!

இதைச் செய்தால் அல்லது அதைச் செய்யாதிருந்தால்தான் பரிசுத்தம் என்பது பொதுவான புரிதல். ஆனால் நாம் எதைச் செய்கிறோம் (doing) என்பதன் அடிப்படையில் அல்ல, நாம் யாராக இருக்கிறோம் (being) என்பதில் தான் பரிசுத்தம் இருக்கிறது. உதாரணத்துக்கு மீன்கள் எல்லாம் நீந்தும் ஆனால் நீந்துவதெல்லாம் மீனல்ல. அதாவது பரிசுத்தவான்கள் எல்லோரும் நற்கிரியை செய்கிறார்கள், ஆனால் நற்கிரியை செய்வோரெல்லாம் பரிசுத்தவான்களல்ல.

நாம் ஏதோ ஒரு குறிப்பிட்ட நாளில் ஒரு நற்கிரியை செய்ததன் விளைவாகவோ, அல்லது மதச் சடங்காச்சாரம் ஒன்றைச் செய்ததன் விளைவாகவோ பரிசுத்தமாக்கப்படவில்லை. கர்த்தர் நம்மை தாயின் கர்ப்பதிலேயே தெரிந்துகொண்டு பரிசுத்தப்படுத்தினார் என்று எரேமியா 1:5 சொல்லுகிறது. நாம் பிரித்தெடுக்கப்படுவதும், பரிசுத்தமாக்கப்படுவதற்கான அழைப்பும் நமக்கு சுய உணர்வு வரும்முன்னமே தாயின் கர்ப்பதிலேயே நடந்துவிடுகிறது. ஆக, நாம் நமது கிரியைகளின்படியல்ல, தேவனுடைய தீர்மானத்தின்படியே அழைக்கப்பட்டோம், பரிசுத்தமாக்கப்பட்டோம்.

தேவனுடைய அழைப்பு நமக்குள் கிரியை செய்து நமது ஆள்தத்துவத்தை மாற்றக்கூடியதாய் இருக்கிறது. சபைக்கு உள்ளேயும், சபைக்கு வெளியேயும் மாய்மாலமில்லாமல் நம்மை நடந்துகொள்ளச் செய்கிறது. நாம் எந்த நோக்கத்துக்காக அழைக்கப்பட்டோமோ அந்த நோக்கத்தை நிறைவேற்றுபவர்களாக நம்மை மாற்றுகிறது. தேவ அழைப்பு அற்பமானதை அதிசயமானதாகவும், ஆசீர்வாதமானதாகவும் மாற்ற வல்லதாக இருக்கிறது.

தொலைந்து போன கழுதையைத் தேடி அலையும் ஒரு சாதாரணமான மனிதனாக வேதாகமத்தில் அறிமுகமாகும் சவுல் அழைப்பைப் பெற்றபின் அசாதாரணமானவனாக மாறுகிறான். அழைப்பைப் பெற்றுக்கொண்டவனுக்கு தேவன் விசேஷித்த மூன்று காரியங்களைத் தருகிறார். அழைப்பைப் பெற்ற சவுலில் வாழ்க்கையிலிருந்து அதைப் பார்ப்போம்.

முதலாவதாக, அழைக்கப்பட்ட அந்த மனிதனை தேவன் அவன் இருந்த இடத்திலிருந்து இருக்க வேண்டிய இடத்துக்குக் கொண்டு வருகிறார். கழுதையைத் தேடி வந்த சவுலை சாமுவேல் தீர்க்கதரிசி அழைத்துக் கொண்டுபோய் போஜனசாலையில் தலைமையான இடத்தில் அமரவைத்தார். (1 சாமுவேல் 9:22)

இரண்டாவதாக, தலைமையான இடத்தில் அமரவைக்கப்பட்டிருந்த சவுலுக்கு தான் ஏற்கனவே விஷேசமாக ஆயத்தம் செய்துவைத்திருந்த சிறப்பான விருந்தை சாமுவேல் பரிமாறினார். (1 சாமுவேல் 9:24) ஆம், பிரித்தெடுக்கப்பட்டிருக்கும் நமக்கென்று நேர்த்தியான இடங்களில் சிறப்பான பங்கை தேவன் நியமித்து வைத்திருக்கிறார்.

மூன்றாவதாக, சாமுவேல் தைலக்குப்பியை எடுத்து, சவுலின் தலையின்மேல் வார்த்து, அவனை முத்தஞ்செய்தார் என்று பார்க்கிறோம். இது ஆவியானவரின் பிரசன்னத்தைக் குறிப்பதாக இருக்கிறது. அபிஷேகத் தைலமாக ஆவியானவரின் பிரசன்னம் நமக்குள் இருப்பதே எல்லாவற்றிலும் மேலான சிறப்பாகும்.

இவ்விதமாக தேவன் நமக்கு ஒரு சிறப்பான நோக்கத்தை ஏற்படுத்தி நம்மை அழைத்து பரிசுத்தப்படுத்தி கனப்படுத்துகிறவராக இருக்கிறார். அப்படிச் செய்வதுதான் அவருக்கு மகிமையாக இருக்கிறது. கர்த்தருக்கே ஸ்தோத்திரமுண்டாவதாக!

செய்தி: பாஸ்டர் சார்லஸ் ஃபின்னி அருமைநாயகம்
செய்தியின் காணொளி இணைப்பு: https://youtu.be/zhaJXa5IVEU

>