தேவத்துவத்தின் பரிபூரணம் எல்லாம் சரீரப்பிரகாரமாக கிறிஸ்துவுக்குள் வாசமாயிருக்கிறது என்று கொலோசேயர் 2:9 கூறுகிறது. அவர் பரிபூரணமுள்ளவராக இருக்கிற படியினால் நம்மையும் அவர் பரிபூரணமுள்ளவர்களாக மாற்ற விரும்புகிறார். அவர் தம்மைக்கொண்டே நம்மை நிரப்பி நம்மூலம் தம்மை இந்த உலகுக்குக் காட்ட விரும்புகிறார்.
நிறைவு என்று சொல்லும்பொழுது ஒருவேளை வெறுமை மாறியிருக்கலாம், ஆனால் குறைவு இன்னும் இருக்கக்கூடும். கர்த்தர் அளவில் மட்டுமல்ல, தரத்தில் இருக்கும் குறைவைப் போக்கும்படியும் நம்மை நிரப்ப சித்தமுள்ளவராக இருக்கிறார். அவர் சிலுவையில் எல்லாவற்றையும் முடித்து வெற்றி சிறந்தவராக இருக்கிறபடியால், நம்மை எல்லாவற்றாலும் நிரப்பி நிறைவாக்க அவரால் கூடும்.
அவர் நம்மை எப்படி நிறைவாக்குகிறார்? ஆவியின் நிறைவு, வார்த்தையின் பூரணம் இந்த இரண்டைக் கொண்டுதான் தேவன் நம்மை நிரப்ப ஆரம்பிக்கிறார். நாம் வசனத்துக்குக் கீழ்ப்படியும்போது தேவன் வாழ்க்கையில் இல்லாத அனுபவங்களை ஞானமாக நமக்குக் கொடுக்க வல்லவராக இருக்கிறார். வயதில் இளையவனான சாலோமோனை அவர் ஞானத்தினால் நிரப்பினபடியால் அவன் தன்னைவிட வயதில் முதிர்ந்தவர்களையும்விட ஞானத்தில் சிறந்தவனாக இருந்தான்.
அவர் நம்மை ஒருதரம் மட்டும் நிரப்பிவிட்டுக் கடந்து செல்லுகிறவரல்ல, அவர் நம்மை தொடர்ந்து நிரப்பிக்கொண்டே இருக்கிறபடியால் நம் பாத்திரம் நிரம்பி வழியக்கூடியதாக இருக்கிறது. அவரே நம் பாத்திரத்தின் பங்காக இருக்கிறபடியால் நிறைவு என்பது நமக்கு உரிமைச் சொத்தாக இருக்கிறது. அவரே நம்மை தம்மால் நிரப்பி தனிப்பட்ட வாழ்விலும், குடும்ப வாழ்விலும் பூரணத்தைத் தந்து நிறைவான சபையாக நம்மைக் கட்டி எழுப்புவாராக!
செய்தி: பாஸ்டர் சார்லஸ் அருமைநாயகம்
செய்தியின் காணொளி இணைப்பு: https://youtu.be/r5RDgbbJHH4