தேவபக்தியோடே சகோதர சிநேகத்தையும், சகோதர சிநேகத்தோடே அன்பையும் கூட்டி வழங்குங்கள் (2 பேதுரு 1:7) என்று அப்போஸ்தலனாகிய பேதுரு சபைக்கு புத்தி சொல்லுகிறார். அன்பை நம்மால் எப்படி கூட்டி வழங்க முடியும்? கர்த்தர் நம்மில் முந்தி அன்புகூர்ந்ததால் நாம் அவரிடத்தில் அன்புகூருவதுமட்டுமல்ல, அந்த அன்பை மற்றவர்களுக்கும் வழங்க முடியும். அவருடைய அன்பை ருசிக்காமல் நம்மால் அன்பை வெளிப்படுத்த முடியாது.
அன்பில் அறிவும், உணர்வும் இருக்கிறது. அது இன்னும் அதிகதிகமாக பெருக வேண்டும் என்று அப்போஸ்தலனாகிய பவுல் பிலிப்பியர் 1:9ல் கூறுகிறார். அன்பில் அறிவும், உணர்ச்சியும் இருக்க வேண்டும். அவை நம்மை ஒரு தீர்மானத்தை நோக்கி நகர்த்த வேண்டும். அதாவது நம்முடைய ஆத்துமாவின் அங்கங்களாகிய சிந்தனை, சித்தம், உணர்ச்சி இந்த மூன்றும் இங்கு செயல்பட வேண்டும். இந்த மூன்றில் ஒன்று இல்லாவிட்டாலும் அங்கு அன்பின் கிரியை முழுமையாக செயல்படமுடியாது.
இவ்வாறாக அன்பில் அறிவும், உணர்வு, தீர்மானமும் இணைந்து செயல்படும்போது நம்மால் தேவனிடத்தில் ஊக்கமாக அன்புகூரமுடியும். அப்படி தேவனிடத்தில் அன்புகூர்ந்தால் மட்டுமே மனிதர்களிடத்தில் அன்புகூருவதும் சாத்தியமாகும்.
இது எப்படி சாத்தியமாகும்?
நாம் அன்பில் நிலைகொள்ள வேண்டுமென்றால், வார்த்தையில் வேர்கொள்ள வேண்டும். வார்த்தையில் வேர்கொள்வதென்பது கிறிஸ்துவில் வேர்கொள்வதாகும். ஏனெனில் கிறிஸ்துவே வார்த்தையாக இருக்கிறார். நாம் வார்த்தையைப் புரிந்துகொள்ளும்போதுதான் அதில் வேர்கொள்ள முடியும்.
நீங்கள் பரிசுத்த ஆவியானவர் மூலமாக தேவ அன்பினால் நிரப்பப்படும்போது (ரோமர் 5:5) அந்த அறிவுக்கெட்டாத பேரன்பை அனுபவிப்பதன் மூலம் அதை ஓரளவுக்குப் புரிந்துகொள்ளலாம். ஆவியானவர் நமக்குள்ளே அன்பையும் வல்லமையையும் ஊற்றுவதால் நம்மால் அந்த தெய்வீக அன்பை மற்றவர்களுக்கும் கூட்டி வழங்க முடியும்.
செய்தி: பாஸ்டர் சார்லஸ் அருமைநாயகம்
செய்தியின் காணொளி இணைப்பு: https://youtu.be/T8M-ZEJEsjY