சகோதர சிநேகம்: ஆவிக்குரியவர்கள் – 3

Home » சகோதர சிநேகம்: ஆவிக்குரியவர்கள் – 3

சகோதர சிநேகம்: ஆவிக்குரியவர்கள் – 3

நீங்கள் எல்லா ஞானத்தோடும், ஆவிக்குரிய விவேகத்தோடும் அவருடைய சித்தத்தை அறிகிற அறிவினாலே நிரப்பப்படவும், சகலவித நற்கிரியைகளுமாகிய கனிகளைத் தந்து, தேவனை அறிகிற அறிவில் விருத்தி அடைந்து, கர்த்தருக்குப் பிரியமுண்டாக அவருக்குப் பாத்திரராய் நடந்துகொள்ளவும், சந்தோஷத்தோடே கூடிய எல்லாப் பொறுமையும் நீடியசாந்தமும் உண்டாவதற்கு, மகிமையான அவருடைய வல்லமையின்படி, எல்லா வல்லமையாலும் பலப்படுத்தப் படவும், உங்களுக்காக வேண்டுதல் செய்கிறோம் என்று பவுல் கொலேசே சபையாருக்காக விண்ணப்பம் பண்ணுகிறார். (கொலோசெயர் 1:9-11)

ஆவிக்குரிய ஞானம் வேண்டும் என்று விண்ணப்பம்பண்ண வேண்டுமா? என்று கேட்டால், தேவன் எதைச் செய்தாலும் அதை ஜெபத்துக்கு விடையாகவே செய்கிறார். அவர் வைத்திருக்கும் முறைமையே அப்படி இருப்பதால்தான் “கேளுங்கள் தரப்படும்” என்று அவரே சொல்லியிருக்கிறார். ஆவிக்குரிய ஞானம் வேண்டும் என்று சாலோமோன் ஜெபித்த ஜெபம் தேவனுடைய பார்வைக்கு உகந்ததாக இருந்தது என்று 1 இராஜாக்கள் 3:10 சொல்லுகிறது. ஆவிக்குரிய ஞானமானது கிருபை தரும் ஈவாக இருக்கிறபடியால் அதை விசுவாசத்தின் வழியாக விண்ணப்பம் செய்வதன் மூலம் பெற்றுக்கொள்ள வேண்டும் என்பதை வேதம் நமக்கு அறிவுறுத்துகிறது.

தேவ ஞானம் என்பது நமக்கு ஏன் தேவை? தேவனுடைய சித்தத்தை அறிந்துகொள்ள நமக்கு தேவனுடைய ஞானம் அவசியமாக இருக்கிறது. ஏனெனில் உலகத்தின் போக்கில் தேவன் தன்னுடைய காரியங்களைச் செய்வதில்லை. அவருடைய முறைமைகள் உலகத்தின் போக்கிலிருந்து முற்றிலும் வேறுபட்டதாக இருக்கிறபடியால் அதை அறிந்துகொள்ள நமக்கு தேவஞானம் அவசியமாக இருக்கிறது. உதாரணமாக சொல்லப்போனால் உலகத்தின் போக்கு எப்போதும் தன்னை மையப்படுத்துவதாகவே இருக்கிறது. அதனால்தான் அது எப்போதும் ஏமாற்றத்தில் முடிவடைகிறது. தேவனுடைய முறைமையோ தேவனை மையப்படுத்தி மற்றவர்களை முக்கியப்படுத்துவதாக இருக்கிறது, அதை அறிந்து அதைச் செயல்படுத்தும் தேவபிள்ளைகளின் வாழ்வில் தெய்வீக திருப்தி நிரந்தரமாகத் தங்குகிறது.

அதுமட்டுமல்ல தேவ ஞானமானது நம்மை தேவனைச் சார்ந்துகொள்ளும்படி செய்கிறது. தேவனை அறியாமல் அவரை நாம் சார்ந்துகொள்ள முடியாதல்லவா? தேவனை அறிந்தவன் அவசரப்படமாட்டான், எதையும் வேதத்தின் வெளிச்சத்தில் தேடி ஆராய்கிறவனாக இருக்கிறான். தேவனைச் சார்ந்துகொள்ளுதல் அவனுக்குள் பொறுமையையும், அடக்கத்தையும் உருவாக்குகிறது. ஆம், தேவனை அறியும் அறிவு நமக்குள் கிருபையையும், சமாதானத்தையும் பெருகச் செய்கிறது. அல்லேலூயா!

செய்தி: பாஸ்டர் சார்லஸ் அருமைநாயகம்

செய்தியின் காணொளி இணைப்பு: https://youtu.be/hu7XoFCvcoI

>