சகோதர சிநேகம்: ஆவிக்குரியவர்கள்- 4

Home » சகோதர சிநேகம்: ஆவிக்குரியவர்கள்- 4

சகோதர சிநேகம்: ஆவிக்குரியவர்கள்- 4

ஆவிக்குரியவன் தேவனிடமிருந்து அறிவையும், புத்தியையும், ஞானத்தையும் பெற்றுக் கொள்கிறான். கர்த்தர் ஞானத்தைத் தருகிறார்; அவர் வாயினின்று அறிவும் புத்தியும் வரும் என்று நீதிமொழிகள் 2:6 சொல்லுகிறது. அதை எப்படிப் பெற்றுக் கொள்ளுகிறானெனில் ஜெபத்தின் வழியாகவும், வார்த்தையின் வழியாகவும் பெற்றுக் கொள்கிறான். எனவேதான் ஒரு விசுவாசியின் வாழ்க்கையில் ஜெபமும், வேதவாசிப்பும் மிகவும் அவசியமானதாக இருக்கிறது.

கர்த்தர் தம்மை நம்புகிற தம்முடைய பிள்ளைகளுக்கு என்று மெய்ஞ்ஞானத்தை வைத்து வைத்திருக்கிறார்; உத்தமமாய் நடக்கிறவர்களுக்கு அவர் கேடகமாயிருக்கிறார். அவர் நியாயத்தின் நெறிகளைத் தற்காத்து, தம்முடைய பரிசுத்தவான்களின் பாதையைக் காப்பாற்றுகிறார். (நீதிமொழிகள் 2:7,8) எனவேதான் கர்த்தரிடம் இருந்து ஞானத்தைப் பெற்றுக்கொண்டு நடக்கிறவன் வாழ்க்கையில் பயம் என்பது துளியும் இருப்பதில்லை. ஏனெனில் அவனுக்குரிய பாதுகாப்பு அவரிடமிருந்தே வருகிறது.

எனவேதான் ஆவிக்குரியவன் குறுக்குவழிகளைப் புறக்கணித்து, தன்னை கர்த்தரே நேர்வழியில் நடத்தும்படி அவருடைய நேரத்துக்காகக் காத்திருக்கிறான். அவனுக்கென்று வைத்திருக்கிறதை கர்த்தர் நிச்சயம் அவனுக்கு அருளிச் செய்வார். அப்போது அந்த அனுபவமே அவனுக்கு இன்பகரமாக இருக்கும்.

ஆவிக்குரியவன் தேவனிடமிருந்து ஞானத்தைப் பெற்றுக்கொள்வதன் மூலம் அவன் வாழ்க்கை எப்படி மாறுபட்டதாகவும், மேம்பட்டதாகவும் இருக்கும் என்பதை கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் வாழ்க்கையிலிருந்து நாம் அறிந்துகொள்ளலாம். அவர் மனிதர்களைப் பற்றியும், அவர்களின் எண்ண ஓட்டங்களைப் பற்றியும் நன்கு அறிந்து வைத்திருந்ததால் ஒருவனையும் நம்பி இணங்கவில்லை என்பதை நாம் யோவான் 2:23,24 வசனங்களில் வாசிக்கிறோம். ஆவிக்குரியவன் ஒருபோதும் தவறான ஆட்களோடு ஐக்கியம் வைத்துக்கொள்ளமாட்டான். அவர்களுடைய கைப்பாவையாகவும் மாறமாட்டான்.

ஆவிக்குரியவனுக்கு எதிர்ப்பை எப்படி கையாள வேண்டும் என்பதும் தெரியும், புகழ் வரும்போது அதை எப்படி கையாள வேண்டும் என்பதும் தெரியும். எங்கே தரித்திருக்க வேண்டும், எங்கிருந்து விலகிச் செல்ல வேண்டும், யாருக்கு செவிகொடுக்க வேண்டும், யாருடைய யோசனைகளை நிராகரிக்க வேண்டும் என்பதை அவன் நன்கு அறிந்தவனாக இருக்கிறான். அந்த அறிவை தேவனே அவனுக்குத் தருகிறார். அப்படிப்பட்ட ஞானம் அருமையாக செயல்பட்ட விதத்தை நாம் ஆண்டவர் இயேசுவின் வாழ்வில் கண்கூடாகப் பார்க்கலாம். கர்த்தராகிய இயேசுவுக்கு அத்தகைய ஞானத்தை அருளி அவரை வழிநடத்தின தேவன் நம்மையும் அதே விதத்தில் போதித்து வழிநடத்த போதுமானவராக இருக்கிறார். நாம் நம்மை அவருக்கு ஒப்புக்கொடுத்து அவரோடு உறவாடவும், உரையாடவும், அவரது சத்தம் கேட்கவும் நம்மை ஒப்புக்கொடுப்போமா?

செய்தி: பாஸ்டர் சார்லஸ் அருமைநாயகம்

செய்தியின் காணொளி இணைப்பு: https://youtu.be/fP2dgrqIltA

>