சகோதர சிநேகம்: ஆவிக்குரியவர்கள்-5 (சாந்தமுள்ள ஆவி)

Home » சகோதர சிநேகம்: ஆவிக்குரியவர்கள்-5 (சாந்தமுள்ள ஆவி)

சகோதர சிநேகம்: ஆவிக்குரியவர்கள்-5 (சாந்தமுள்ள ஆவி)

சகோதரரே, ஒருவன் யாதொரு குற்றத்தில் அகப்பட்டால், ஆவிக்குரியவர்களாகிய நீங்கள் சாந்தம் உள்ள ஆவியோடே அப்படிப்பட்டவனைச் சீர்பொருந்தப் பண்ணுங்கள் என்று கலாத்தியர் 6:1ல் அப்போஸ்தலனாகிய பவுல் சபைக்கு ஆலோசனை சொல்லுகிறார். ஆவிக்குரியவர்கள் சாந்தமுடையவர்களாக இருக்கிறார்கள். அதுவே அவர்கள் ஆவிக்குரியவர்கள் என்பதற்கு ஆதாரமாக இருக்கிறது.

சகோதர சிநேகம் நிலைத்திருக்க ஒப்புரவாக்குதலின் ஊழியம் மிகுந்த அவசியமுள்ளதாக இருக்கிறது. பிதாவோடு நம்மை ஒப்புரவாக்கி, ஒப்புரவாக்குதலின் ஊழியத்துக்கு முன்னோடியாகத் திகழும் ஆண்டவராகிய இயேசுகிறிஸ்து சாந்தமும் மனத்தாழ்மையும் உள்ளவராக இருக்கிறார் என்று நாம் வேதத்தில் வாசிக்கிறோம். அவரை நெருங்க நெருங்கத்தான் அவருடைய சுபாவங்களான சாந்தத்தையும், மனத்தாழ்மையையும் நாம் கற்றுக்கொள்ள முடியும். நமக்கு அப்பேற்பட்ட சுபாவங்கள் வேண்டும் என்பது நமது ஜெபமாகவே மாற வேண்டும்.

சாந்த குணத்தை அழியாத அலங்கரிப்பு என்று அப்போஸ்தலனாகிய பேதுரு கூறுகிறார். (1 பேதுரு 3:4) ஆவிக்குரியவனெவனும் சாந்த குணத்தால் அலங்கரிக்கப்பட்டவனாக இருக்கிறான். அவனுக்கு எப்போது பேசவேண்டும், என்ன பேசவேண்டும், எப்போது பேசக்கூடாது, என்ன பேசக்கூடாது என்பது நன்கு தெரியும். அவனுடைய நிதானிப்பே வித்தியாசமானதாக இருக்கும். அவன் பெலவீனரைக் கையாளக்கூடிய விதமே அவனுடைய பெலத்தை வெளிப்படுத்தக்கூடியதாக இருக்கும். சபை அப்படிப்பட்டவர்களால் நிறைந்திருக்கும்போது அங்கு ஒப்புரவாக்குதலின் ஊழியம் செவ்வனே நடைபெறுகிறது.

ஆவிக்குரியவர்களின் குணமாகிய சாந்தம் எப்படி சீர்பொருந்துதலில் உதவி செய்கிறது என்றால், சாந்தகுணமுள்ளவர்கள் மரியாதையோடும், கண்ணியத்தோடும் பாதிக்கப்பட்டவர்களை அணுகி அவர்களிடம் ஞானமாகப் பேசி அவர்களை கர்த்தரிடத்தில் திரும்பப்பண்ணுகிறார்கள். ஒரு மனிதனுக்கு திருச்சபையின் உதவி இங்குதான் அதிகம் தேவைப்படுகிறது. ஏனெனில் சபையில்தான் தேவன் அப்பேற்பட்ட support சிஸ்டத்தை வைத்திருக்கிறார்.

செய்தி: பாஸ்டர் சார்லஸ் அருமைநாயகம்

செய்தியின் காணொளி இணைப்பு: https://youtu.be/yA3uCbJzcos

>