சகோதரருக்குள் கருத்துவேறுபாடுகள் வர வாய்ப்பிருக்கிறது. ஆனால் அப்படி கருத்துவேறுபாடுகள் வரும்போது அதையும் தாண்டி எப்படி ஒருவரிலொருவர் ஊக்கமாய் அன்புகூருவது என்பதை வேதத்தின் வாயிலாக நாம் தியானிக்கப்போகிறோம். இதற்கு ஆதாரமாக புதிய ஏற்பாட்டிலிருந்து இரண்டு சம்பவங்களை எடுத்துக்கொள்ளலாம். முதலாவது அப்போஸ்தலனாகிய பவுலுக்கும் பர்னபாவுக்கும் மாற்குவின் விஷயத்தில் ஏற்பட்ட முரண்பாடு. இன்னொன்று உபதேச விஷயத்தில் பவுலுக்கும் பேதுருவுக்கும் இடையில் ஏற்பட்ட கருத்து வேறுபாடு.
அப்போஸ்த்தலர் 15 ஆம் அதிகாரத்தில் மாற்குவை ஊழியத்துக்கு அழைத்துக் கொண்டுபோவதில் பவுலுக்கும் பர்னபாவுக்கும் இடையே கடும் கோபம் மூண்டு இருவரும் பிரிந்தார்கள் என்று வாசிக்கிறோம். சகோதரருக்குள் பிரிவு என்பது தீர்வாகாது என்றாலும் அவர்கள் இருவரும் ஒருவரையொருவர் பிரிந்து, ஊழியப்பாதையில் வெவ்வேறு திசைகளில் பயணித்தார்கள் என்று பார்க்கிறோம். ஆனாலும் நம்முடைய கர்த்தராகிய தேவன் உறவுகளை சீர்படுத்தக்கூடியவர். எந்த மாற்குவின் நிமித்தம் பவுலுக்கும் பர்னபாவுக்கும் முரண்பாடு ஏற்பட்டதோ அதே மாற்குவை பின்நாட்களில் பவுல் மனதார ஏற்றுக்கொண்டு அவரை மனந்திறந்து பாராட்டி எழுதுவதையும் நாம் கொலோசேயர் 4:10, 2 தீமோத்தேயு 4:11 ஆகிய வேதபகுதிகளில் வாசிக்க முடிகிறது.
அதேபோல அந்தியோகியாவில் பவுல் தன்னைவிட ஊழிய அனுபவத்தில் மூத்தவரான பேதுருவை பலர் முன்னிலையில் எதிர்த்ததையும் நாம் கலாத்தியர் 2-ஆம் அதிகாரத்தில் வாசிக்கிறோம். ஆனாலும் பேதுரு அந்த வன்மத்தை மனதில் வைத்துக்கொள்ளவில்லை. தன்னை எதிர்த்த அதே பவுலைக் குறித்து பின்னாட்களில் மிகவும் பாராட்டியும், அவரை மேன்மையான ஸ்தானத்தில் வைத்தும் தனது நிருபத்தில் எழுதியிருக்கிறார். (2 பேதுரு 3:15,16)
ஆக எல்லா முரண்பாடுகளும் தீர்வுக்கு உட்பட்டதே! சகோதரருக்குள் தனிப்பட்ட ரீதியாக வேறுபாடுகள் பல இருந்தாலும். வசனம் என்று வந்துவிட்டால் ஒன்றிணைவதுதான் உத்தமம், ஏனெனில் நம்மைப் பிரிக்கக்கூடிய விஷயங்களைவிட இணைக்கக்கூடிய விஷயங்கள்தான் ஆவிக்குரிய வாழ்வில் அதிகம். நாமெல்லோரும் கிறிஸ்துவுக்குள் ஒரே சரீரமாக இருக்கிறோமல்லவா!
நாம் சொஸ்தமடையும்படி நம்முடைய குற்றங்களை ஒருவருக்கொருவர் அறிக்கையிட்டு, அறிக்கையிட்டதை சரிசெய்யும்படி ஒருவருக்காக ஒருவர் ஜெபம்பண்ண வேண்டுமென்று தேவன் எதிர்பார்க்கிறார். நமது சுயபெலத்தால் சகோதர சிநேகத்தில் நிலைத்திருக்க முடியாது. பரிசுத்த ஆவியானவர் மூலம் நாம் பெலனடைந்து, (அப்போஸ்த்தலர் 1:8) அவர் மூலமாக தேவ அன்பை நமது இருதயங்களில் பெற்று (ரோமர் 5:5), அவர் அருளும் ஞானத்தாலும், உணர்வாலும் (ஏசாயா 11:2), தெளிந்த புத்தியோடு (2 தீமோத்தேயு 1:7) நம்மால் ஒருவரையொருவர் ஊக்கமாக நேசிக்க முடியும்.
செய்தி: பாஸ்டர் சார்லஸ் அருமைநாயகம்
செய்தியின் காணொளி இணைப்பு: https://youtu.be/MNSE-o01M-w