மன அழுத்தம் – இந்த வார்த்தை இன்று குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை சகஜமாக பயன் படுத்தும் வார்த்தை ஆகிவிட்டது. காரணம் இன்று மன அழுத்தம் என்பது அனைத்துத் தரப்பினரையுமே பாதிக்கக் கூடிய சூழலில் வாழ்ந்து வருகிறோம். கர்த்தராகிய இயேசுகிறிஸ்து தாம் இந்த பூமியில் ஊழியம் செய்த நாட்களில் திரளான ஜனங்களைக் கண்டு, அவர்கள் மேய்ப்பன் இல்லாத ஆடுகளைப் போலத் தொய்ந்து போனவர்களும், சிதறப் பட்டவர்களுமாய் இருந்த படியால், அவர்கள் மேல் மனதுருகினார் என்று மத்தேயு 9:36 சொல்லுகிறது.
தொய்ந்து போன, சிதறடிக்கப்பட்ட மனநிலையைத் தான் இன்றைய நாகரீக மொழியில் stress அல்லது மன அழுத்தம் என்று சொல்லுகிறோம். மேய்ப்பன் இல்லாத ஆடுகள் மன அழுத்தத்துக்கு ஆளாகின்றன. நல்ல மேய்ப்பனைக் கொண்ட ஆடுகள் எப்படி கொழுமையாகவும், குதூகலமாகவும் இருக்கும் என்பதை நாம் சங்கீதம் 23- இல் வாசிக்க முடியும்.
மேய்ப்பனற்ற, மன அழுத்தத்துக்கு ஆளான ஆடுகளை நோக்கித்தான் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து அன்புடன் அழைக்கிறார். வருத்தப்பட்டுப் பாரஞ்சுமக்கிறவர்களே! நீங்கள் எல்லாரும் என்னிடத்தில் வாருங்கள்; நான் உங்களுக்கு இளைப்பாறுதல் தருவேன். நான் சாந்தமும் மனத்தாழ்மையுமாய் இருக்கிறேன்; என் நுகத்தை உங்கள்மேல் ஏற்றுக்கொண்டு, என்னிடத்தில் கற்றுக்கொள்ளுங்கள்; அப்பொழுது, உங்கள் ஆத்துமாக்களுக்கு இளைப்பாறுதல் கிடைக்கும். என் நுகம் மெதுவாயும் என் சுமை இலகுவாயும் இருக்கிறது. (மத்தேயு 11:28-30) அழுத்தங்கள் நம்மை அழிக்க விரும்புகிறது. ஆனால் தேவன் அந்த அழுத்தங்களைப் பயன்படுத்தி நம்மை ஆசீர்வதிக்க விரும்புகிறார்.
தேவன் நம்மை மன அழுத்தத்தில் இருந்து இளைப்பாறுதலுக்கு கொண்டு செல்லும்படி விரும்புகிறார். அதை எப்படிச் செய்கிறாரென்றால் நமக்கு சத்தியத்தைக் கற்றுக்கொடுப்பதன் மூலம் செய்ய விரும்புகிறார். என்னிடத்தில் கற்றுக்கொள்ளுங்கள்; அப்பொழுது, உங்கள் ஆத்துமாக்களுக்கு இளைப்பாறுதல் கிடைக்கும் என்று அவர் சொல்லும் வார்த்தைகளைக் கவனியுங்கள். நமக்கு அவர் உடனடியாக ஒரு அற்புதத்தை செய்து நம்மை விடுவியாமல், நமக்கு கற்றுக்கொடுத்து தெளிவடையச்செய்து விடுவிப்பதன் நோக்கம் நம்மை அந்த விடுதலையிலேயே நிலைத்திருக்கப் பண்ண வேண்டும் என்பதுதான். எதையும் கற்றுக்கொள்ளாமல் வெறும் அற்புதத்தின் மூலம் மட்டும் விடுதலை பெற்றவர்கள் மீண்டும் மீண்டும் அந்த அடிமைத்தனத்துக்குள் சிக்க வாய்ப்பிருக்கிறது.
தண்ணீருக்குள் விழுந்தவனை உடனடியாக தூக்கிவிட்டால் அவன் மீண்டும் தண்ணீருக்குள் விழ நேரிட்டால் மறுபடியும் தூக்கிவிட்டவரின் உதவியை எதிர்பார்ப்பான். ஆனால் அவனைத் தண்ணீருக்குள்ளேயே வைத்து நீச்சல் கற்றுக்கொடுத்துவிட்டால் அவன் இனி தண்ணீரைக் கண்டு ஒருபோதும் பயப்பட மாட்டான். அவனுக்கு இனி தண்ணீரால் பாதிப்பில்லை. தேவனுடைய கற்றுக்கொடுத்தலும் இது போன்றதுதான். சீஷன் என்றாலே மாணவன் அல்லது கற்றுக்கொள்ளுகிறவன் என்று அர்த்தம். ஆம், சீஷத்துவம் மிகுந்த ஆசீர்வாதமான அனுபவம்.
தேவன் நம்மீது உள்ள பரிதாபத்தினால் மாத்திரம் நமக்கு இதைச் செய்வதில்லை. அவர் நம்மேல் பிரியமாக இருப்பதினாலும், நாம் கடந்து வந்த அதே பாதைகளில் அவரும் கடந்து வந்து, நம்மைப் போலவே எல்லாவிதத்திலும் சோதிக்கப்பட்டபடியினாலும் நம்முடைய மனக்கிலேசங்களைப் புரிந்துகொண்டு அவர் நமக்கு உதவி செய்கிறார்.
அவர் நமக்கு கற்றுக்கொடுக்க விரும்புவதன் நோக்கம் அவரது வார்த்தையில்தான் நமக்கு தீர்வு உள்ளது என்பதால்தான். எகிப்திலிருந்து கானானுக்கு பயணப்பட்ட இஸ்ரவேல் ஜனங்களை நாற்பது வருஷமாக வழிநடத்தி என்னத்தைக் கற்றுக்கொடுத்தார் என்று வேதம் சொல்லுகிறது? “அவர் உன்னைச் சிறுமைப்படுத்தி, உன்னைப் பசியினால் வருத்தி, மனுஷன் அப்பத்தினால் மாத்திரம் அல்ல, கர்த்தருடைய வாயிலிருந்து புறப்படுகிற ஒவ்வொரு வார்த்தையினாலும் பிழைப்பான் என்பதை உனக்கு உணர்த்தும்படிக்கு… (உபாகமம் 8:3) ஆம் அவருடைய வார்தையில்தான் நமக்கான அத்தனை தீர்வுகளும் உண்டு என்பதால்தான் அவர் நமக்கு கற்றுக்கொடுத்து நம்மை இளைப்பாற்ற விரும்புகிறார்.
இன்று எல்லோருக்கும் தங்கள் பிரச்சனைகள் உடனடியாக தீரவேண்டும் என்பதுதான் வாஞ்சையே தவிர யாரும் கற்றுக்கொள்ள ஆயத்தமாக இருப்பதில்லை என்பது தேவனுக்குத் தெரியும். ஆனால் இதுவே ஒரே தீர்வாக இருப்பதால் அவரே நமக்கு கற்றுக்கொள்ளும் வாஞ்சையையும், ஞானத்தையும் கொடுத்து நம்மை நடத்துகிறார். காலைதோறும் என்னை எழுப்புகிறார்; கற்றுக்கொள்ளுகிறவர்களைப்போல, நான் கேட்கும்படி என் செவியைக் கவனிக்கச்செய்கிறார். (ஏசாயா 50:4)
அவரே தம்முடைய தயவுள்ள சித்தத்தின்படி நமக்குள் கற்றுக்கொள்ள வேண்டும் என்ற வாஞ்சையையும், விருப்பங்களையும் உண்டாக்குகிறார். அந்த விருப்பத்தோடு கற்றுக்கொண்டவைகளை செயல்படுத்தவும் அவரே நமக்கு உதவி செய்கிறார். ஏனெனில் அவர் நமக்கு வாக்களித்தது தற்காலிகமான இளைப்பாறுதல் அல்ல, நிரந்ததமான இளைப்பாறுதல். அதற்கு இந்தப் பாதை வழியே பயணித்தால் மட்டுமே சாத்தியம் ஆகும்.
செய்தி: பாஸ்டர் சார்லஸ் ஃபின்னி அருமைநாயகம்
செய்தியின் காணொளி இணைப்பு: https://youtu.be/0o-2mjpi_DI