தேவன் தன் படைப்புகள் மீதும், விசேஷமான நம்மீதும் எவ்வளவு அக்கறையும் பொறுப்பும் உள்ளவராக நடந்து கொள்கிறார் என்பதை வேதத்தில் நாம் பல இடங்களில் பார்க்கிறோம். அடைக்கலான் குருவிகளைகளையும், காட்டுப் புஷ்பங்களையும், ஆகாயத்துப் பறவைகளையும் உதாரணமாக வைத்து ஆண்டவர் இயேசு நமக்கு அதை அழகாக எடுத்துக் காட்டியுள்ளார். இதிலிருந்து தேவன் பொறுப்புள்ளவர் என்பதை நாம் அறிந்துகொள்கிறோம். அவர் பொறுப்புள்ளவராக இருப்பதுபோல அவரை சேவிக்கும் நாமும் பொறுப்புள்ளவர்களாக நடந்துகொள்வதில் தான் நமது தேவபக்தி வெளிப்படுகிறது.
நாம் பொறுப்புள்ளவர்கள் என்பதை நாம் நமது குடும்பவாழ்வில்தான் முதலாவதாக விளங்கப்பண்ண வேண்டும். நாம் தேவபக்திக்கேதுவான முயற்சியையும் பயிற்சியையும் நமது வீட்டில்தான் செய்யவேண்டும். பொருளாதார ஆசீர்வாதங்களை தனது பின் சந்ததிக்கு வைத்துப் போவதும், ஒரு நல்ல பெயரை தனது தலைமுறைக்கு விட்டுச்செல்வதும் ஒரு குடும்பத் தலைவன் தன் பொறுப்பை சரியான முறையில் குடும்பத்தில் நிறைவேற்றியிருக்கிறான் என்பதை தெளிவுபடுத்துகிறது. ஒரு குடுவனத் தலைவன் தன் வீட்டில் தகப்பனாகவும், தீர்க்கதரிசியாகவும், ராஜாவாகவும், ஆசாரியனாகவும் நடந்துகொள்ள வேண்டும்.
ஒரு நல்ல தகப்பனாகவும், தீர்க்கதரிசியாகவும், ராஜாவாகவும், ஆசாரியனாகவும் கர்த்தராகிய இயேசு நமக்கு மிகச் சிறந்த முன்னுதாரணமாக இருக்கிறார். அவர் ஒரு நல்ல மகனாகவும் நடந்து கொண்டதை நாம் வேதத்தில் வாசிக்கிறோம். சிலுவையில் தனது தாயாகிய மரியாளை யோவான் என்னும் ஒரு நல்ல அன்பான மகன் வசம் விட்டுச்சென்றார். 1 தீமோத்தேயும் 5:4 பெற்றோர் செய்த நன்மைகளுக்குப் பதில் நன்மைகளைச் செய்ய பிள்ளைகள் கற்றுக்கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்துகிறது.
குடும்பத்தில் பொறுப்புகளை நிறைவேற்றுவது என்பது சவால் நிறைந்த பணி தான் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை. பொறுப்புகளை நிறைவேற்றுவதை கடமையாக நினைத்தால் கஷ்டமாகத்தான் இருக்கும். சிலாக்கியமாக நினைத்தால்தான் பாக்கியமாக இருக்கும். பொறுப்பை சரியான முறையில் செய்வதற்கு பொறுப்பை கொடுத்தவரிடத்தில்தான் உதவி பெற வேண்டும். அவரே நம் பொறுப்புகளை நாம் சரிவர நிறைவேற்றுவதற்குத் தேவையான பண்பையும், பணத்தையும், பொறுமையையும் கொடுக்கிறவர்.
இறுதியாக நமது குடும்பத்தில் “வேதம் சொல்லுகிறபடி உன் பொறுப்பை நிறைவேற்று” என்று மற்றவர்களை நிர்பந்திப்பதைவிட, அல்லது அவர்களைக் குற்றம்சாட்டுவதைவிட நமது பொறுப்பின் மீது நாம் கவனமுள்ளவர்களாக இருப்பதே நலமானதாகும். மற்றவர்கள் நமக்கு இது செய்ய வேண்டும், அது செய்ய வேண்டும் என்று எதிர்பார்ப்பதைவிட நம் கண்கள் நமது பரமத்தகப்பனாகிய கர்த்தர் மேல் நோக்கமாயிருப்பதே சாலச்சிறந்ததாகும்.
செய்தி: பாஸ்டர் சார்லஸ் அருமைநாயகம்
செய்தியின் காணொளி இணைப்பு: https://youtu.be/GlqWDCi41bs