ஞானத்தின் ஏழு தூண்கள்: தேவபக்தி – அடக்கம்

Home » ஞானத்தின் ஏழு தூண்கள்: தேவபக்தி – அடக்கம்

ஞானத்தின் ஏழு தூண்கள்: தேவபக்தி – அடக்கம்

ஞானத்தின் ஏழு தூண்களில் ஒன்று தேவபக்தி என்பதைப் பார்த்து வருகிறோம். தேவபக்திக்கு பல பரிமாணங்கள் உள்ளன. அதில் ஒரு முக்கியமான பரிமாணம் நாவடக்கம் என்பதாகும். அப்போஸ்தலனாகிய யாக்கோபு 1:26,27 வசனங்களில் சொல்லும் கருத்து என்னவென்றால், தேவபக்தி அடக்கத்தில் வெளிப்பட வேண்டும் என்பதாகும். பரிசுத்த ஆவியானவருக்கு கீழ்பட்டு அவரால் நடத்தப்படுவதே அடக்கம். இன்னும் எளிமையாகச் சொல்லப்போனால் தேவனுடைய வார்த்தைக்குக் கட்டுப்பட்டு வாழ்வதே அடக்கம்.

ஒரு இக்கட்டான சூழலில் நம்மால் சுயத்தில் செயல்பட முடியும், அதே நேரத்தில் பரிசுத்த ஆவியானவருக்கு ஒப்புக்கொடுத்தும் செயல்பட முடியும். நாம் தேவனுடைய சித்தத்தின்படி நடக்க வேண்டும் என்ற நிலைப்பாடு கொண்டவர்களானால். அந்த இக்கட்டான நேரத்தில் எப்படி நடந்துகொள்ள வேண்டும், என்ன செய்ய வேண்டும் என்பதை தேவனே நமக்கு நினைவுபடுத்துவார்.

நமக்கு தேவனுடைய வார்த்தை நன்றாகத் தெரியும். ஆகவே அறிவில் பிரச்சனை இல்லை, அந்த அறிவுக்கு அர்ப்பணிப்பதில்தான் பிரச்சனை இருக்கிறது. நாம் வசனத்தை சாந்தமாக ஏற்றுக்கொள்ளும்போது நமக்குள் ஒருவித முதிர்ச்சி வருகிறது. அந்த முதிர்ச்சியின் விளைவாக நாவடக்கம் வருகிறது. நாவடக்கம் இருந்தால் ஒரு உள்ளான தெய்வீக அமைதி எப்போதும் மனதில் குடிகொண்டிருப்பது சாத்தியமாகிறது.

உண்மையாய் தேவனை அறிந்தவர்கள் அடக்கம் நிறைந்தவர்களாகவே இருக்கிறார்கள். அந்த அடக்கத்துக்குத் தேவையான பெலனை அவரே நமக்குத் தருகிறார். அந்த அடக்கமே “பூரண புருஷர்கள்” என்று வேதத்தில் குறிப்பிடப்பட்டிருக்கும் நபர்களுக்கு அடையாளமாக இருக்கிறது. பூரண புருஷன் என்பது பாவமில்லாத நிலையைக் குறிப்பதல்ல, அது குணத்தில் தெய்வீகமான முழு வளர்ச்சிபெற்ற நிலையைக் குறிக்கிறது.

நல்ல மனுஷன் இருதயமாகிய நல்ல பொக்கிஷத்திலிருந்து நல்லவைகளை எடுத்துக்காட்டுகிறான், பொல்லாத மனுஷன் பொல்லாத பொக்கிஷத்திலிருந்து பொல்லாதவைகளை எடுத்துக்காட்டுகிறான் என்று மத்தேயு 12:35 சொல்லுகிறது. இருதயத்தின் நிறைவினால்தான் வாய் பேசுகிறது. எனவே எதைக்கொண்டு நமது இருதயத்தை நாம் நிறைக்கிறோம் என்பதைக் குறித்து நாம் மிகுந்த கவனமாக இருக்க வேண்டும். நம்முடைய இருதயத்தை இறைவார்த்தையினால் நிரப்பி வைக்கும்போது கேட்பவர்களுக்கு நன்மைகளைக் கொண்டுவரும் பலன் நிறைந்த வார்த்தைகளாக வெளிவருகிறது. நல்ல பேச்சுக்களைப் பேசும்போது நமது வீடுகளிலும் நல்ல சூழல் உண்டாகிறது.

ஒவ்வொரு நாளிலும் நம்முடன் மிகவும் அதிகமாகப் பேசுவது நாம்தான். நாம் நம்மிடம் பேசும் ஒவ்வொரு வார்த்தையும் நம்மைக் கட்டி எழுப்புவதாக இருக்க வேண்டுமே தவிர நம்மை சிதைப்பதாக இருக்கக்கூடாது. நாம் நம்மிடம் தேவன் சொல்வதையே பேசுவோமானால் நாம் தேவசித்தப்படி வாழ்கிற ஒரு வாழ்க்கையை வாழ்வதும், ஆசீர்வாதங்களால் நிறைந்த அனுபவங்களை அனுதினமும் பெறுவதும் எளிதாகும்.

இனிய சொற்கள் தேன்கூடுபோல் ஆத்துமாவுக்கு மதுரமும், எலும்புகளுக்கு ஒளஷதமுமாகும். நீதிமொழிகள் 16:24

செய்தி: பாஸ்டர் சார்லஸ் அருமைநாயகம்

செய்தியின் காணொளி இணைப்பு: https://youtu.be/VC-DZxxgrBI

>