விசுவாசம் என்பது கண்முடித்தனமான நம்பிக்கை அல்ல, அது கண் திறக்கப் பட்டவர்களின் நம்பிக்கை ஆகும். நான் விசுவாசிக்கிறவர் இன்னார் என்று அறிந்திருக்கிறேன் என்பதே வெற்றியுள்ள தேவ மனிதர்களின் முழக்கமாக இருந்திருக்கிறது. இதை இன்னொரு விதமாக சொல்ல வேண்டும் ஆனால் “அறிந்திருக்கிறேன், ஆகையால் விசுவாசிக்கிறேன்” என்றும் கூறலாம். சாதாரண மனிதர்களால் கிரகிக்கக்கூட முடியாத காரியங்களை விசுவாசிப்பது என்பது தேவனுடைய சத்தியத்தை புரிந்துகொள்ளுதல் என்ற புள்ளியிலிருந்தே செயல்படுகிறது. வசனத்தை புரிந்துகொண்டு கீழ்ப்படிவதன் வாயிலாக நாம் முதலாவதாக பலன் அடைகிறோம், நம்மைச் சுற்றியுள்ளவர்களும் நன்மையடைகிறார்கள், நாம் சார்ந்திருக்கும் சபையும் வளர்ச்சியடைகிறது.
சரீரத்துக்கு உணவு அவசியமோ அதுபோலவே ஆத்துமாவுக்கு வார்த்தை அவசியம். உட்கொண்ட உணவு செரித்தால் தான் அது உடலுக்கு பயன் விளைவிக்கும், அதே போல பெற்றுக்கொண்ட தேவ வார்த்தையை புரிந்துகொண்டால் தான் அது ஆத்துமாவுக்கு நன்மை விளைவிக்கிறதாக இருக்கும். உம்முடைய வார்த்தைகள் கிடைத்தவுடனே அவைகளை உட்கொண்டேன் என்று எரேமியா 15:16 சொல்லுகிறது. அவருடைய வாயின் வார்த்தைகளை எனக்கு வேண்டிய ஆகாரத்தைப் பார்க்கிலும் அதிகமாய்க் காத்துக்கொண்டேன் என்று தாசனாகிய யோபு 23:12- ஆம் வசனத்தில் கூறுகிறார்.
அடுக்குமாடிக் கட்டிடங்களில் இருக்கும் லிஃப்ட்டை முன்பின் பார்த்திராத ஒரு நபருக்கு அந்த லிஃப்ட்டில் ஏறுவது மிகுந்த பயத்தைத் தரும் ஆனால் அதன் பயன்பாட்டை அறிந்த ஒருவருக்கோ லிஃப்ட்டில் பயணிப்பது மிகவும் எளிதான, வசதியான ஒரு காரியமாகும். அதுபோலத்தான் சத்தியம் விளங்கிவிட்டால் அதற்குக் கீழ்ப்படிவது மிகவும் எளிதாகும். மனதில் புரிதல் ஏற்பட்டால் மனவிருப்பத்தோடு கீழ்ப்படிதலும் சுலபமாக ஏற்பட்டுவிடும். அவர் விளையச்செய்கிற தேவன் என்ற புரிதலில் உறுதி இருக்குமானால் நடுவதும், நீர்ப்பாய்ச்சுவதும் நமக்கு விருப்பமான செயலாகிவிடும்.
இந்தப் புரிதல் இல்லாத இடத்தில் சகல குழப்பங்களும், மாறுபாடுகளும், தடுமாற்றங்களும் இருந்தேதான் தீரும். எனவேதான் அப்போஸ்தலனாகிய பவுல், நாம் இனிக் குழந்தைகளாயிராமல், மனுஷருடைய சூதும் வஞ்சிக்கிறதற்கேதுவான தந்திரமுமுள்ள போதகமாகிய பலவித காற்றினாலே அலைகளைப்போல அடிபட்டு அலைகிறவர்களாயிராமல், அன்புடன் சத்தியத்தைக் கைக்கொண்டு, தலையாகிய கிறிஸ்துவுக்குள் எல்லாவற்றிலேயும், நாம் வளருகிறவர்களாக இருக்கவேண்டும் என்று எபேசியர் 4:14,15- இல் அறிவுறுத்துகிறார்.
எனவே வார்த்தையாகிய உணவை தேனை உட்கொள்ளுவதுபோல மகிழ்ச்சியாக உட்கொள்ளுங்கள். அது உங்களுக்கு அறிவையும், புரிதலையும், பெற்றுக்கொண்ட அந்த அறிவை அப்பியாசப்படுத்தும் ஞானத்தையும் தரும். வசனத்தை எந்தவித தர்க்கிப்பும் முறுமுறுப்பும் இல்லாமல் சாந்தமாக ஏற்றுக்கொள்ளும்போது அது நமக்கு வாழ்க்கை முறையாக மாறிவிடுகிறது.
பிதாவாகிய தேவனுடைய முன்னறிவின்படியே, ஆவியானவரின் பரிசுத்தமாக்குதலினாலே, கீழ்ப்படிதலுக்கும்..என்று அப்போஸ்தலனாகிய பேதுரு எழுதுகிறார். (1 பேதுரு 1:2) அதாவது நமக்குள் வாசமாயிருக்கும் பரிசுத்த ஆவியானவர் தமது பரிசுத்தமாக்குதலினாலே நமக்குள் கீழ்ப்படிதலை உண்டாக்குகிறார் என்று அந்த வேதபகுதி சொல்லுகிறது. ஆகவே தேவன் நமக்கு வசனத்தை எழுதித் தந்ததுமட்டுமல்ல, அதை நாம் வாசித்து, புரிந்துகொண்டு கீழ்ப்படிவதற்கு ஏற்ற சகல காரியங்களையும் நமக்கு செய்து தந்திருக்கிறார்.
முன்னே நீங்கள் பாவத்திற்கு அடிமைகளாயிருந்தும், இப்பொழுது உங்களுக்கு ஒப்புவிக்கப்பட்ட உபதேச சட்டத்திற்கு நீங்கள் மனப்பூர்வமாய்க் கீழ்ப்படிந்ததினாலே தேவனுக்கு ஸ்தோத்திரம். பாவத்தினின்று நீங்கள் விடுதலையாக்கப்பட்டு, நீதிக்கு அடிமைகளானீர்கள். (ரோமர் 6:17,18)
செய்தி: பாஸ்டர் சார்லஸ் அருமைநாயகம்
செய்தியின் காணொளி இணைப்பு: https://youtu.be/wwCqzEE2ybg