கர்த்தராகிய தேவன் தம்முடைய வார்த்தையைக் கொண்டுதான் நம்முடைய வாழ்க்கை முறையை மாற்றுகிறார். உடற்பயிற்சிக் கூடங்களில் நமது உடலின் ஒவ்வொரு உறுப்பையும் செம்மையாக்குவதற்குத் தேவையான வெவ்வேறு கருவிகளும், உடற்பயிற்சி முறைகளும் இருப்பதுபோல நமக்குள் ஒவ்வொரு தெய்வீக சுபாவத்தையும் வளர்க்க அதற்கேற்ற வார்த்தைகளை தேவன் வைத்திருக்கிறார்.
2 பேதுரு 1:5-7ல் தெய்வீக சுபாவங்கள் நமக்குள் வளரும் முறைமையைப் பற்றி அப்போஸ்தலன் கூறுகிறார். ஒரு சங்கிலித் தொடர்போல விசுவாசத்தோடு தைரியம், தைரியத்தோடு ஞானம், ஞானத்தோடு இச்சையடக்கம், இச்சையடக்கத்தோடு பொறுமை, பொறுமையோடு தேவபக்தி, தேவபக்தியோடே சகோத சிநேகம் என்று இயந்திரங்களில் பற்சக்கரங்கள் இயங்குவதுபோல, அதாவது ஒரு சக்கரம் மற்றொன்றை இயக்குவதுபோல, ஒரு தெய்வீக சுபாவம் இன்னொரு தெய்வீக சுபாவத்தை முடுக்கிவிடும்படி நமது ஆவிக்குரிய வளர்ச்சி வடிவமைக்கப்பட்டுள்ளது. அப்படியானால் சகோதர சிநேகமாகிய அன்பு வெளிப்பட தேவபக்தி அவசியமாய் இருக்கிறது.
ஒரு பத்து மாடிக் கட்டிடத்தின் வெவ்வேறு தளங்கள் ஒன்றையொன்று இணைப்பதை இதற்கு இன்னொரு உதாரணமாகக் கொள்ளலாம். இதில் இந்த குணம் வேண்டும், இது வேண்டாம் என்று நாம் தெரிவு செய்ய முடியாது. நாம் கிறிஸ்துவுக்கு ஒப்பான பூரண புருஷராக வளர இந்த அத்தனை குணங்களும் நமக்குத் தேவை.
இதில் இன்னொரு முக்கியக் காரியம் இந்த குணாதிசயங்கள் அனைத்தும் நமக்குள் இயங்க வேண்டுமானால் நமக்கு தேவனுடைய துணை வேண்டும். இன்று ஜனங்கள் தேவன் தருவது வேண்டும், ஆனால் தேவன் வேண்டாம் என்ற மனநிலையில் இருக்கிறார்கள். ஆனால் தேவன் கொடுப்பது தேவன் இல்லாமல் வேலை செய்யாது. கர்த்தராகிய இயேசு இந்த சுபாவங்களை நமக்குக் கொடுத்ததோடும், அதை நமக்குள்ளிருந்து இயக்குவதோடும் மட்டுமல்லாமல், அந்த சுபாவங்களை அப்பியாசப்படுத்துவது எப்படி என்பதற்கு நமக்கு அவர் ஒரு முன்மாதிரியுமாக இருக்கிறார்.
கர்த்தராகிய இயேசு சகோதர சிநேகத்துக்கு முன்னுதாரணமாக வாழ்ந்தவர். தன் சிநேகிதனுக்காக ஜீவனைக் கொடுப்பதிலும் மேலான அன்பு ஒன்றுமில்லை என்று சொல்லி அதை செய்தும் காட்டியவர். சகோதரர்கள் ஒருவருக்கொருவர் எப்படி இருக்கவேண்டும் என்பதற்கு அவர்களது கால்களைக் கழுவி ஒரு அழகான பாடத்தை அவர்களுக்கு நடத்திக் காட்டினார். சகோதர சிநேகத்தில் குறைவுள்ளவர்களாக தங்களுக்குள் யார் பெரியவன் என்று வாதிட்டுக்கொண்டிருந்த சீஷர்கள். கர்த்தருடைய நடத்துதாலால் காலப்போக்கில் அந்த அன்பில் படிப்படியாக வளர்ந்து, தங்கள் ஆண்டவருக்காக தங்கள் ஜீவனையும் கொடுக்க ஆயத்தமாகுமளவுக்கு மறுரூபம் அடைந்தார்கள்.
நாமும் இப்பொழுது குறைவுள்ளவர்களாக இருந்தாலும் நமக்குள்ளிருந்து, நம்மை ஆட்கொண்டு, நம்மை வழிநடத்தும் கிறிஸ்துவின் தயவால் நம்மால் விசுவாசம் தொடங்கி, சகோதர சிநேகம்வரை அத்தனை தெய்வீக சுபாவங்களிலும் வளர்ந்து அவரைப்போல இவ்வுலகில் வெளிச்சமாக வாழ இயலும். ஆம், அவருடைய தயவினாலேயே அது சாத்தியம்!
செய்தி: பாஸ்டர் சார்லஸ் அருமைநாயகம்
செய்தியின் காணொளி இணைப்பு: https://youtu.be/vatQXtgGJWY