தேவபக்தி: கவனிப்பதும் கறைபடாமலிருப்பதும்

Home » தேவபக்தி: கவனிப்பதும் கறைபடாமலிருப்பதும்

தேவபக்தி: கவனிப்பதும் கறைபடாமலிருப்பதும்

அப்போஸ்தலனாகிய யாக்கோபு தாம் எழுதின நிருபத்தில் ஒரு காரியத்தை ஆணித்தரமாக எடுத்துரைக்கிறார். அதாவது நமது விசுவாசம் சரியாக இருக்கும் ஆனால் அதை நிரூபிக்கும் ஆதாரம் நமது வாழ்வில் காணப்படவேண்டும். அதை சுட்டிக்காட்டத்தான் அவர் யாக்கோபு 1:27ல் “திக்கற்ற பிள்ளைகளும் விதவைகளும் படுகிற உபத்திரவத்திலே அவர்களை விசாரிக்கிறதும், உலகத்தால் கறைபடாதபடிக்குத் தன்னைக் காத்துக்கொள்ளுகிறதுமே பிதாவாகிய தேவனுக்கு முன்பாக மாசில்லாத சுத்தமான பக்தியாய் இருக்கிறது” என்று எழுதி இருக்கிறார்.

நாம் தேவபத்தியுள்ளவர்களாய் இருந்தால் சிறுமைப்பட்டவர்களை கவனிப்பதும், உலகத்தால் கறைபடாமல் இருப்பதும் ஆகிய இந்த இரண்டு குணங்களும் நம்மிடம் அவசியம் இருக்க வேண்டும். இவைகளில் ஒன்றுக்கொன்று மாற்றல்ல, இவை இரண்டுமே சம முக்கியத்துவமுள்ளவைகள். இதுவும் ஒரு ஆராதனைதான். நாம் எதைச் செய்தாலும் கர்தருக்காக செய்யும் போது அது ஆராதனையாக மாறுகிறது.

தானதர்மம் செய்வது தேவபக்தியின் ஒரு முக்கிய அடையாளம் என்பதற்கு உதாரணமாக அப்போஸ்தலர் 10:2ல் கொர்நெலியு பற்றியும், அப்போஸ்தலர் 9:36ல் தொற்காள் பற்றியும் வேதம் சொல்லியிருப்பதை நாம் கவனிக்கலாம். இவர்கள் இருவரிடமுமே தனக்கானதை மற்றும் நோக்காமல், பிறருக்கானவைகளையும் நோக்கும் அரிய குணத்தை நாம் காணமுடியும். சங்கீதம் 41 சிறுமைப்பட்டவன்மேல் சிந்தையுள்ளவன் பல்வேறு ஆசீர்வாதங்களுக்கு சொந்தக்காரனாய் இருக்கிறான் என்பதை எடுத்துரைக்கிறது.

தானதருமங்கள் எவ்வளவு முக்கியமோ அதே அளவு முக்கியமுள்ளது உலகத்தால் கறைப்படாத பரிசுத்த வாழ்க்கையும் ஆகும். சுயத்தை மையமாகக்கொண்டு, சாத்தானால் ஆளப்படும் இந்த உலகமானது கண்களின் இச்சை, மாம்சத்தின் இச்சை, ஜீவனத்தின் பெருமை ஆகிய நமக்குள் இருக்கும் ஜென்ம சுபாவங்களின் வழியாக நம்மைத் தீட்டுப்படுத்துகிறது. இந்த உலகம் நம்மைக் கறைப்படுத்தக்கூடியது, தேவசித்தத்தை செய்யவிடாமல் நம்மை தடுத்து வைக்கக்கூடியது. நாம் உலகத்துக்குரிய வேஷத்தை தரியாமல் தேவனுடைய நன்மையும் பிரியமுமான சித்தம் இன்னதென்று தேடுகிறவர்களாய் இருந்தால் மட்டுமே இந்த உலகத்தின் கேட்டுக்குத் தப்ப முடியும்.

இந்த உலகத்தை ஜெயிக்க வழி கிறிஸ்துவின் வார்த்தையைப் பற்றிக்கொள்வதே ஆகும். கிறிஸ்துவின் வார்த்தையைப் பற்றிக்கொள்வதே கிறிஸ்துவைப் பற்றிக்கொள்வது. அவரே உலகத்தை ஜெயித்தவர். அவர் மேல் நாம் கொண்ட விசுவாசம் ஆனது இந்த உலகத்தை ஜெயிக்கிற ஜெயமாக இருக்கிறது. கர்த்தரும் இரட்சகருமாயிருக்கிற இயேசுகிறிஸ்துவை அறிகிற அறிவினாலே உலகத்தின் அசுத்தங்களுக்குத் தப்பிக்க முடியும் என்று 2 பேதுரு 2:20 சான்று பகருகிறது. ஆகவே விசுவாசத்தை வர்த்திக்கப்பண்ணும் இறைவார்த்தையைக் கேட்டு, தியானித்து, புரிந்துகொண்டு இவ்வுலகத்தை ஜெயிப்போமாக. நாம் பரிசுத்தமாய் இருந்து தானதருமங்கள் முதலான நற்கிரியைகளைச் செய்யும்போது அது தேவனுக்குப் பிரியமாக இருக்கிறது.

செய்தி: பாஸ்டர் சார்லஸ் அருமைநாயகம்

செய்தியின் காணொளி இணைப்பு: https://youtu.be/-5Zp0_c6vyg

>