தேவபக்தியாய் நடக்க மனதாயிருக்கிற யாவரும் துன்பப் படுவார்கள் என்று 2 தீமோத்தேயு 3:12 சொல்லுகிறது. இதே கருத்தை உறுதிப் படுத்தும் பல வசனங்கள் வேதத்தில் உண்டு. ஆனால் அந்த துன்பத்திலேயே உழன்று மரிப்பது தான் நம் தலை எழுத்து என்று எந்த வசனமும் சொல்லவில்லை. துன்பமும் உபத்திரவமும் உண்டு தான், ஆனாலும் கர்த்தர் தேவ பக்தியுள்ளவர்களைச் சோதனையிலிருந்து இரட்சிக்க அறிந்திருக்கிறார் என்று 2 பேதுரு 2:9 சொல்லுகிறது. உலகத்தில் உங்களுக்கு உபத்திரவம் உண்டு என்று உறுதியாகச் சொல்லும் கர்த்தர் ஆனாலும் திடன் கொள்ளுங்கள்; நான் உலகத்தை ஜெயித்தேன் என்றும் சொல்லுகிறார். ஆம், உபத்திரவம் உண்டு என்பது எவ்வளவு உறுதியாய் இருக்கிறதோ, ஜெயம் உண்டு என்பதும் அவ்வளவு உறுதியாக இருக்கிறது.
உபத்திரவமும், அதிலிருந்து வெற்றியும் மட்டுமல்ல, அந்த உபத்திரவத்தின் பாதையில் கடந்து போனதின் நிமித்தம் நமக்கு மறுமையில் உன்னதமான வெகுமதிகளும் காத்திருக்கிறது. அதைத் தான் நீதியின் நிமித்தம் துன்பப் படுகிறவர்கள் பாக்கியவான்கள்; பரலோகராஜ்யம் அவர்களுடையது என்று மத்தேயு 5:10 சொல்லுகிறது. கர்த்தராகிய இயேசு கிறிஸ்து மட்டுமல்ல, வேதத்தில் நாம் கண்டு வியக்கும் அத்தனை சரித்திர புருஷரும் இவ்வழியாகவே கடந்து சென்று வெற்றிக்கனியை ருசித்திருக்கிறார்கள்.
கர்த்தராகிய இயேசுகிறிஸ்து தாம் வையப்படும்போது பதில்வையாமலும், பாடுபடும்போது பயமுறுத்தாமலும் இருந்ததாக 1 பேதுரு 2:23 சொல்லுகிறது. தாசனாகிய தாவீதும்கூட தனக்கு மனிதர்களால் நேரிட்ட மிகுந்த இடுக்கண்களின் மத்தியில் என்னோடு வழக்காடுகிறவர்களோடு, நீர் வழக்காடுவீராக என்று சொல்லுவதை நாம் வேதத்தில் வாசிக்க முடியும். தேவனுடைய பிள்ளைகள் வாக்குவாதங்களில் ஈடுபடக்கூடாது. வாக்குத்தத்தம் பெற்றவர்கள் வாக்குவாதம் செய்யவேண்டிய அவசியமேயில்லை. ஏனெனில் வாக்குத்தத்தம் செய்தவர் அதை நிறைவேற்ற வல்லமையுள்ளவராக இருக்கிறார்.
வியாதியின் நிமித்தமோ, அல்லது பணநெருக்கடி போன்ற அன்றாடப் பிரச்சனைகளின் நிமித்தமோ வரும் சோதனைகளுக்கு தப்பிச்செல்ல, அவைகளை வெல்ல வாக்குத்தத்தங்கள் வேதத்தில் நிறைய கொடுக்கப்பட்டுள்ளது. ஆனால் கர்த்தராகிய இயேசுவின் நிமித்தம் நமக்கு நேரிடும் உபத்திரவங்களை நாம் சந்தோஷமாக சகித்துக்கொள்ள வேண்டும் என்றுதான் வேதம் நமக்கு அறிவுறுத்துகிறது. ஆனாலும் அந்த துன்பங்கள் தற்காலிகமானவைதான். அவைகளுக்கு நிச்சயம் ஒரு முற்றுப்புள்ளி உண்டு. அந்த முற்றுப்புள்ளி வைக்கப்பட்டவுடன் நமக்கு வரப்போகும் உயர்வும் ஆசீர்வாதங்களும் வார்த்தைகளால் விவரிக்க முடியாத அளவில் இருக்கும். எனவே கர்த்தர்மீது நாம் கொண்டு அன்பின் நிமித்தம் நமக்கு வரும் பாடுகளைக் கண்டு பயந்து ஓடாமல், அவைகளைச் சகித்து இம்மையில் வெற்றியையும், மறுமையில் வெகுமதிகளையும் சுதந்தரித்துக்கொள்வோம்.
செய்தி: பாஸ்டர் சார்லஸ் அருமைநாயகம்
செய்தியின் காணொளி இணைப்பு: https://youtu.be/Zj3n9voAwWc