தேவபக்தி – தெய்வீக ஆசீர்வாதம் 1

Home » தேவபக்தி – தெய்வீக ஆசீர்வாதம் 1

தேவபக்தி – தெய்வீக ஆசீர்வாதம் 1

கர்த்தர் யோசேப்போடே இருந்தார், அவன் காரியசித்தியுள்ளவனானான் என்று ஆதியாகமம் 39:2 சொல்லுகிறது. கர்த்தர் யோசேப்போடு இருந்தார் என்பது ஒருபுறமிருக்க, மறுபக்கம் யோசேப்பு கர்த்தர் தன்னோடு இருக்கிறார் என்பதைக் குறித்த விழிப்புணர்வு உள்ளவனாக இருந்தான். தனது பணியிலும், தனது பரிசுத்தத்துக்கு சவாலான நேரங்களிலும், பாடுகளில் உழன்றபோதும், உயர்பதவிக்கு உயர்த்தப்பட்ட பின்னும் எப்போதும், எல்லா நேரங்களிலும் கர்த்தர் விலகாமல் தன்னோடு இருந்து கொண்டிருப்பதை அவன் அறிந்தவனாக இருந்தான். இதுவே அவன் காரியசித்தி உடையவனாக இருந்ததற்கு காரணமாக இருந்தது.

நான் உன்னைவிட்டு விலகுவதுமில்லை, உன்னைக் கைவிடுவதுமில்லை என்று நமக்கு வாக்குப்பண்ணினவர் எல்லா நேரங்களிலும் நம்மோடிருப்பதைக் குறித்த விழிப்புணர்வு உள்ளவர்களாக நாம் இருக்கிறோமா? அந்த விழிப்புணர்வு இருக்கும்போதுதான் உயர்வுகளும், ஆசீர்வாதங்களும் நம்மிடம் தானாக வந்து ஒட்டிக்கொள்கிறது.

தன்னுடைய பிராணன் இரும்பில் அடைபட்டிருந்தபோது யோசேப்போடும், வனாந்திரவெளிகளில் உயிருக்கு பயந்து ஒளிந்து கொண்டிருந்தபோது தாவீதோடும், கானானை நோக்கிய பயணத்தில் வனாந்திரத்தில் இஸ்ரவேல் ஜனங்களோடும் கர்த்தர் விலகாமல் இருந்ததுதான் எதிர்மறையான சூழலிலிலும் அவர்களுக்கு மகாப்பெரிய பெலனாக அவர்களுக்கு இருந்தது. கர்த்தரை தெய்வமாகக் கொண்டிருக்கிற ஜனம் பாக்கியமுள்ளது என்பது இதனால்தான். கர்த்தருடைய வார்த்தை நமது வாயிலும், இருதயத்திலும் இருப்பதுபோல, கர்த்தரும் நமக்கு அவ்வளவு சமீபமாக இருக்கிறார். இத்தகைய சீரைப் பெற்ற ஜனமாகிய நாம் பாக்கியமுள்ளவர்கள் அல்லவா?

கர்த்தருடைய பிரசன்னம் நம்மோடிருக்கிறது என்பது மாறாத உண்மை. ஆனால் அந்த உண்மை எப்போது நம்வாழ்வில் கிரியை செய்யுமென்றால் அவரது பிரசன்னதைக் குறித்த விழிப்புணர்வு உள்ளவர்களாக நாம் இருக்கும்பொழுதே. எனவே உம்முடைய பிரசன்னத்துக்கு என்னை உணர்வுள்ளவனாக மாற்றும் என்று நாம் ஜெபிக்க வேண்டியதாக இருக்கிறது. நமது பரிசுத்தத்துக்கு சவாலான சோதனைகள் வரும் வேளையில் யோசேப்பைப் பாதுகாத்தது போல இந்த விழிப்புணர்வு நம்மையும் பாதுகாக்கும்.

அடுத்ததாக இந்த நியாயப்பிரமாணப் புஸ்தகம் உன் வாயைவிட்டு பிரியாதிருப்பதாக என்று கர்த்தர் யோசுவாவுக்கு கட்டளை கொடுத்ததுபோல (யோசுவா 1:8) தேவவார்த்தை நமது வாயில் இருக்கும்போது தேவபிரசன்னமும் நமக்கு அவ்வளவு சமீபமாக இருக்கிறது என்கிற உணர்வு நமக்கு வேண்டும். இது கர்த்தருடைய வார்த்தைக்கு நாம் எவ்வளவு முக்கியத்துவம் தரவேண்டும் என்பதை நமக்கு உணர்த்துவதாக இருக்கிறது.

கையின் பிரயாசங்கள் வாய்க்காமல் போவது இன்று பலருடைய வாழ்வில் பெரும் பிரச்சனையாக இருக்கிறது. நாம் செய்யும் வேலை அல்லது தொழிலானது சட்டரீதியாகவும், ஒழுக்கரீதியாகவும் சரியானதாக இருக்கும்பட்சத்தில் கர்த்தருடைய பிரசன்னத்தைக் குறித்த விழிப்புணர்வுடன் நமது வேலையை நாம் செய்யும்போது நம் கையின் பிரயாசங்கள் வாய்க்கும் அதிசயத்தை நம்மால் காணமுடியும்.

காரியசித்தி என்பது செழிப்பின் அடையாளமாகும். நம்மைக் குறித்த தேவசித்தம் நிறைவேறத் தேவையான அத்தனை தேவைகளையும் அது சந்திப்பதாக இருக்கிறது. ஆகவே தேவன் நம்மோடிருப்பதைக் குறித்த விழிப்புணர்வுள்ளவர்களாக இருப்போம். காரியசித்தி என்பது பின்னர் நம் வாழ்க்கையின் ஒரு அங்கமாகிவிடும். கர்த்தர்தாமே நம்மை ஆசீர்வதிப்பாராக! ஆமேன்.

செய்தி: பாஸ்டர் சார்லஸ் அருமைநாயகம்

செய்தியின் காணொளி இணைப்பு: https://youtu.be/wvoAApT7D70

>