செத்த கிரியைகள் என்கிற வார்த்தையை நாம் கிறிஸ்தவ வட்டாரத்தில், முக்கியமாக பிரசங்கங்களில் அடிக்கடி கேட்டிருப்போம். அதென்ன செத்த கிரியைகள் என்று கேட்போமானால் சில உதாரணங்களை கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் மலைப்பிரசங்கத்திலிருந்து நாம் காணலாம். அவர் பார்வைக்காக ஜெபிக்கிறவர்கள், மற்றவர்கள் பார்க்க வேண்டும் என்பதற்காக உபவாசம் பண்ணுகிறவர்கள், தங்களுக்கு பெருமை உண்டாக வேண்டும் என்பதற்காக தானதர்மம் பண்ணுகிறவர்களைப் பற்றி பேசியிருப்பார். அதேபோல அதிக வசனிப்பினால்தான் ஜெபம் கேட்கப்படும், நீண்ட நேரம் ஜெபித்தால்தான் ஜெபம் அங்கீகரிக்கப்படும் போன்ற தவறான நம்பிக்கைகள் பற்றியும் சொல்லியிருப்பார்.
இதுபோன்ற பயனற்ற சடங்குகள், தவறான நோக்கத்தில் செய்யப்படும் கிரியைகளைத்தான் வேதம் செத்த கிரியைகள் என்று சொல்லுகிறது. அதாவது சரியான காரியங்களை சரியான நோக்கத்துக்காக செய்யும்பொழுது நமது வாழ்க்கை சிறப்பாகத்தான் இருக்கும்.தெய்வீகமான ஆசீர்வாதங்கள் தெய்வீகமான முறையில்தான் வரும். நோக்கம் சிதறினால் விளைவுகள் மாறிவிடும். வேறு சிலர் இந்த குறிப்பிட்ட நாளுக்குள் தேவன் இதை எனக்குச் செய்து தரவேண்டும் என்று அவருக்கு கெடு வைப்பார்கள். இதுவும் ஒருவிதத்தில் செத்த கிரியை ஆகும். செத்த கிரியைகள் நமக்கு ஒரு பலனையும் கொண்டுவராது, அப்படி ஒரு பலனும் ஏற்படாத போது அப்படி அந்தக் காரியம் நடவாதபோது தேவன் மீது ஏமாற்றமும், பிசாசின் மீது பயமும், சக மனிதர்கள் மீது கோபமும், பின்னர் தன்மீதே ஒரு வெறுப்பும் ஏற்பட்டு விடும். கடைசியில் கர்மேல் பர்வதத்தில் பாகாலின் தீர்க்கதரிசிகள் தங்களைத் தாங்களே காயப்படுத்திக் கொண்ட நிலைமைக்கு நம்மை ஆளாக்கிவிடும்.
1 இராஜாக்கள் 18- ஆம் அதிகாரத்தில் பாகாலின் தீர்க்கதரிசிகள் தங்களைத் தாங்களே காயப்படுத்திக்கொள்வதற்கு முன்னர் என்ன எல்லாம் செய்து கொண்டு இருந்தார்கள் என்பதை வாசிக்கலாம். அவர்கள் மந்திரங்களை திரும்பத் திரும்ப ஓதிக்கொண்டிருந்தார்கள். வெகு நேரமாகியும் கேட்கப்படவில்லை என்பதால் மிகவும் சத்தமாக ஓதத் துவங்கினார்கள், பின்பு ஆடிப்பாடி குதித்துக் கொண்டிருந்தார்கள். இவையெல்லாம் செத்த கிரியைகள்தான். எதுவும் பலனளிக்கவில்லை என்றவுடன் தங்களைத் தாங்களே காயப்படுத்தியேனும் பாகாலிடமிருந்து பதிலைப் பெறமுடியுமா என்று எண்ணத் துணிந்துவிட்டார்கள். ஆனால் எலியா செய்த காரியத்தைப் பாருங்கள். தான் சொல்வதை தேவன் கேட்கவேண்டும் என்பதல்ல, தேவன் சொல்வதற்கு தான் கீழ்ப்படிய தயாராக இருப்பதே அவரது அணுகுமுறையாக இருந்தது, காரணம் அவர் தேவன், நாம் அவருடைய பிள்ளைகளாக இருக்கிறோம். நோக்கமும், அணுகுமுறையும் சரியாக இருந்தால் விளைவும் சரியாகவே இருக்கும்.
செத்த கிரியைகளின் நோக்கம் பெரும்பாலும் சுயத்தைச் சுற்றியதாகவும், தவறாகவும் இருக்கிறது. இந்த விழுந்துபோன மனநிலையிலிருந்து நாம் சுத்திகரிக்கப்பட வேண்டும். இதை நாமே செய்துகொள்ள முடியாது. கர்த்தராகிய இயேசுவின் இரத்தமே நமக்கு இதைச் செய்து நம்மை மீட்கிறது. நித்திய ஆவியினாலே தம்மைத்தாமே பழுதற்ற பலியாக தேவனுக்கு ஒப்புக்கொடுத்த கிறிஸ்துவினுடைய இரத்தம் ஜீவனுள்ள தேவனுக்கு ஊழியஞ்செய்வதற்கு உங்கள் மனச்சாட்சியைச் செத்த கிரியைகளறச் சுத்திகரிப்பது எவ்வளவு நிச்சயம்! என்று எபிரேயர் 9:14 சொல்லுகிறது.
கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் இரத்தம் என்றைக்கு நம்மை சுத்திகரிக்கிறதோ அன்றைக்குத்தான் நாம் சரியான நோக்கமுள்ளவர்களாக, சரியானவைகளைச் செய்து, சிறப்பானதை வாழ்வின் அனுபவமாக மாற்றிக்கொள்ள முடியும். அவரது உதவியில்லாமல் நம்மால் ஒன்றும் செய்ய முடியாது. சுயமுயற்சி இளைப்பாறுதலற்ற நிலையைத் தந்து, கடைசியில் நமது இருதயமே நம்மைக் குற்றவாளியாகத் தீர்த்துவிடும். கர்த்தராகிய இயேசுவின் இரத்தம் நமக்கு ஜீவனைக் கொடுக்கிறதாகவும், நம்மைச் சுத்திகரிக்கிறதாகவும், நமக்கு பாவத்தின் மீதான எதிர்ப்பு சக்தியை அளிக்கிறதாகவும் இருப்பதால் அது நமது உள்ளந்திரியங்களுக்குள் பாயும்போது அங்கு ஜீவனும், பரிசுத்தமும் உண்டாகிறது. அவரது இரத்தம் பாவத்தைப் பரிகரித்து, சாத்தானை முறியடித்து, அவருக்கு ஊழியம் செய்ய நம்மைச் சுத்திகரித்து, ஆளுகை செய்ய நம்மை ஆசீர்வதித்திருக்கிறது.
செய்தி: பாஸ்டர் சார்லஸ் ஃபின்னி அருமைநாயகம்
செய்தியின் காணொளி இணைப்பு: https://youtu.be/W0nd7XG-Bpo