பர்வதத்தில் பார்த்துக்கொள்ளப்படும் – உணர்வுள்ள இருதயம்

Home » பர்வதத்தில் பார்த்துக்கொள்ளப்படும் – உணர்வுள்ள இருதயம்

பர்வதத்தில் பார்த்துக்கொள்ளப்படும் – உணர்வுள்ள இருதயம்

லூக்கா 8- ஆம் அதிகாரத்தில் கர்த்தராகிய இயேசு கிறிஸ்து விதைக்கிறவன் உவமையைப் பற்றி பேசுகிறதை நாம் வாசிக்க முடியும். அதில் முள்ளுள்ள இடத்தில் விதைக்கப்பட்டவர்களைக் குறித்து அவர் சொல்லும் பொழுது “அவர்கள் வசனத்தைக் கேட்கிறவர்களாய் இருக்கிறார்கள்; கேட்ட உடனே போய், பிரபஞ்சத்திற்குரிய கவலைகளினாலும் ஐசுவரியத்தினாலும் சிற்றின்பங்களினாலும் நெருக்கப்பட்டு, பலன் கொடாதிருக்கிறார்கள்” (லூக்கா 8:14) என்று சொல்லுகிறதைப் பார்க்கிறோம்.

அதாவது எல்லோருமே வசனத்தைக் கேட்கிறார்கள் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை. ஆனால் கேட்டவுடன் என்ன செய்கிறார்கள் என்பதுதான் கேட்ட வசனம் அவர்களுக்குள் வினைபுரியுமா? புரியாதா என்பதைத் தீர்மானிக்கிறது. அதனால்தான் கர்த்தராகிய இயேசு இந்த உவமையைச் சொல்லி முடித்தபின்பு “நீங்கள் கேட்கிற விதத்தைக் குறித்து கவனியுங்கள்” (லூக்கா 8:18) என்று கூறுகிறார். கொடுக்கப்படுவதற்கும், இன்னும் அதிகம் கொடுக்கப்படுவதற்கும், இருக்கிறது என்று நினைக்கிறதுகூட பறிபோகிறதற்கும் நாம் கேட்கக்கூடிய விதம் மிகமிக முக்கியம்.

சரி, அப்படியெனில் “நல்லவிதமாகக் கேட்பது” என்றால் என்ன?

அப்போஸ்தலனாகிய பவுல் தெசலோனிகேயருக்கு எழுதின நிருபத்தில், “ஆகையால், நீங்கள் தேவ வசனத்தை எங்களாலே கேள்விப்பட்டு ஏற்றுக்கொண்டபோது, அதை மனுஷர் வசனமாக ஏற்றுக்கொள்ளாமல், தேவ வசனமாகவே ஏற்றுக்கொண்டதினாலே நாங்கள் இடைவிடாமல் தேவனுக்கு ஸ்தோத்திரஞ் செலுத்துகிறோம்; அது மெய்யாகவே தேவவசனந்தான், விசுவாசிக்கிற உங்களுக்குள்ளே அது பெலனும் செய்கிறது (1 தெசலோனிகேயர் 2:13) என்று எழுதுகிறார்.

அதாவது திறந்த மனதுடன், எதிர்ப்பின்றி, மனத்தாழ்மையோடு ஏற்றுக்கொண்டு, பெற்ற தேவ வசனத்தைப் புரிந்துகொள்வது அதை செயல்படுத்துவது இவையே நல்லவிதமாகக் கேட்பதும், அப்படிக் கேட்பதினால் ஏற்படும் விளைவுமாகும். நல்ல இருதயம் என்பதே செவிகொடுக்கிற இருதயம்தான். கர்த்தாவே சொல்லும், அடியேன் கேட்கிறேன் (1 சாமுவேல் 3:10) என்று குட்டி சாமுவேல் சொன்னதை இங்கு நினைவுபடுத்த விரும்புகிறேன். உம்முடைய வார்த்தைகள் கிடைத்தவுடனே அவைகளை உட்கொண்டேன். (எரேமியா 15:16)

நல்லவிதமாக கேட்பது என்பதற்கு கர்த்தராகிய இயேசுவின் தாயாராகிய மரியாள் சிறந்த உதாரணமாக இருக்கிறார். அவர் தனக்கு திருமணமாகும் முன்னே தன்னிடம் தோன்றி “நீ கர்ப்பவதியாகி ஒரு குமாரனைப் பெறுவாய்” என்று சொன்ன தூதனிடம் “இது எப்படியாகும்? நான் புருஷனை அறியேனே” (லூக்கா 1:34) என்று கேட்டார். இது எதிர்வாதமான கேள்வி அல்ல. அதாவது புரிந்துகொள்ளும் நோக்கில் கேட்கப்படும் கேள்வி. இப்படி நாம் கேள்விகள் எழுப்புவது நல்லது.

முதலில் தூதனுடைய வார்த்தைகளால் கலங்கின மரியாள் அதற்குப் பிறகு தூதன் சொன்ன விளக்கங்களைக் கேட்டவுடன் அதைப் புரிந்துகொண்டு, தன்னை தேவசித்தத்துக்கு ஒப்புக்கொடுக்கிறார். அதே அதிகாரத்தில் “இதுமுதல் எல்லாச் சந்ததிகளும் என்னைப் பாக்கியவதி என்பார்கள்” என்று அகமகிழ்ந்து துதிப்பதை நாம் பார்க்கமுடியும்.

நாம் எதையும் கண்மூடித்தனமாக ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று தேவன் எதிர்பார்ப்பதில்லை. அவர் நாம் பிரகாசமான மனக்கண்களுள்ளவர்களாக சொல்லப்பட்ட வார்த்தைகளைப் புரிந்து அதற்கு நம்மை ஒப்புக்கொடுக்க வேண்டும் என்று விரும்புகிறார். தேவனுடைய வார்த்தையைப் புரிந்து, ஏற்றுக்கொண்டு அதை உள்வாங்கிக் கொள்ளும்பொழுது பயம், கவலை, அலட்சியம் ஆகியவைகளுக்கு இடமில்லாமல் போய்விடுகிறது. களிகூறுதலும், விசுவாசமும் ஆவலோடு எதிர்பாக்கிறதற்குரிய ஒரு மனநிலையும் ஏற்படுகிறது. நாம் சரியாகப் புரிந்துகொண்டால்தான் சரியாக மறுமொழியும் கொடுக்க முடியும்.

நெகேமியா 8- ஆம் அதிகாரத்தில் அழுதுகொண்டிருந்த மக்களுக்கு இறைவார்த்தை உரைக்கப்படுகிறது, “அழாதிருங்கள், இந்த நாள் பரிசுத்தமான நாள், விசாரப்படவேண்டாம்” என்று சொல்லப்பட்டவுடன் ஜனங்கள், “தங்களுக்கு அறிவிக்கப்பட்ட வார்த்தைகளை உணர்ந்துகொண்டபடியால், புசித்துக் குடிக்கவும், பங்குகளை அனுப்பவும், மிகுந்த சந்தோஷம் கொண்டாடவும் போனார்கள் (நெகேமியா 8:12) என்று வாசிக்கிறோம்.

பிரியமானவர்களே! வசனத்தை ஏற்றுக்கொண்டு அதற்கு நாம் நம்மை விட்டுக்கொடுக்க புரிந்துகொள்ளுதல் மிகவும் அவசியமாக இருக்கிறது. அப்படிப் புரிந்துகொள்ளும் ஒரு உணர்வுள்ள இருதயத்தை கர்த்தர் நமக்குத் தருவாராக!

செய்தி: பாஸ்டர் சார்லஸ் அருமைநாயகம்

செய்தியின் காணொளி இணைப்பு: https://youtu.be/XHb4CDVBNWs

>