பலன் அளிக்கிறவர்: ஆறுதல் – செயல்முறை

Home » பலன் அளிக்கிறவர்: ஆறுதல் – செயல்முறை

பலன் அளிக்கிறவர்: ஆறுதல் – செயல்முறை

கர்த்தருடைய தாசனாகிய மோசே மரித்தபின் அவர் சுமந்துவந்த மிகப்பெரிய பொறுப்பு நூனின் குமாரனாகிய யோசுவாவின் தோள்களில் இறங்குகிறது. அதை எப்படி செய்து முடிக்கப்போகிறோம் என்று கலங்கின யோசுவாவிடம் கர்த்தர் பேசுகிறார். “பலங்கொண்டு திடமனதாயிரு; இந்த ஜனத்தின் பிதாக்களுக்கு நான் கொடுப்பேன் என்று ஆணையிட்ட தேசத்தை நீ இவர்களுக்குப் பங்கிடுவாய் (யோசுவா 1:6) என்று யோசுவாவை தைரியப்படுத்துகிறார்.

கர்த்தர் பலங்கொண்டு திடமனதாயிரு என்று நம்மை தைரியப்படுத்துகிறவர் மட்டுமல்ல, அந்த தைரியத்தையும் அவரே நமக்குத் தருகிறவராகவும் இருக்கிறார். நமிம்மிடம் இல்லாதது அவரிடம் இருக்கிறது, நமக்குத் தெரியாதவைகள் அவருக்குத் தெரியும். நம்மால் முடியாதது அவரால் முடியும். அவர் நம்முடையவர், நாம் அவருடையவர்கள் எனவே நாம் பலங்கொண்டு திடமனதாய் இருக்க முடியும்.

ஆவிக்குரிய உலகில் நமக்கு முன் இருக்கும் சவால்களை முறியடிக்க நம்மிடம் உள்ள பெலம் நிச்சயமாகப் போதாது. எனவேதான் எபேசியர் 6:10ல் அப்போஸ்தலாகிய பவுல் நம்மை கர்த்தரிலும் அவருடைய சத்துவத்தின் வல்லமையிலும் பெலப்படச் சொல்லுகிறார். அப்போதுதான் நாம் சாத்தானின் தந்திரங்களை முறியடிக்க முடியும்.

நாம் எப்போதெல்லாம் பாதுகாப்பற்ற தன்மையை உணருகிறோமோ அப்போதெல்லாம் அவர் நம்மைவிட்டு விலகுவதுமில்லை நம்மைக் கைவிடுவதுமில்லை என்ற வசனத்தை நாம் நினைவுகூர வேண்டும். நமது கவனம் முழுவதும் வசனத்தில் இருந்தால் அதுவே நமக்கு தியானமாக மாறிவிடும். அப்படி அது தியானமாக மாறும்போது ஆவியானவர் இன்னும் புதுப்புது வெளிப்பாடுகளைத் தந்து நம்மை மேலும் பெலப்படுத்துவார்.

மாறாக நாம் பிரச்சனைகளின் மீது நமது கவனத்தைக் குவித்தால் அது கவலையாக மாறி நம்மை மூழ்கடித்துவிடும். ஆகவே நமது கவனம் வாக்குத்தத்தங்களின் மீது குவியட்டும். அப்போது நம் வாழ்வின் சுக்கானானது அந்த வாக்குத்தத்தங்கள் நிறைவேறும் திசையை நோக்கி திரும்பி நமது வாழ்க்கைக் கப்பல் சரியான பாதையில் பயணிக்கத் தொடங்கும்.

செய்தி: பாஸ்டர் சார்லஸ் அருமைநாயகம்

செய்தியின் காணொளி இணைப்பு: https://youtu.be/2WXADN7ayow

>