பரிசுத்தம் என்றவுடன் வெளியரங்கமான பரிசுத்தம்தான் பலருடைய நினைவுக்கு வருகிறது. உங்களைப் பரிசுத்தம் பண்ணிக் கொள்ளுங்கள் என்று யோசுவா 3:5- இல் குறிப்பிடப்படும் பழைய ஏற்பாட்டுப் பரிசுத்தம் வெளியரங்கமான பரிசுத்தத்தைத்தான் குறிக்கும் என்றாலும் அது நிழலாட்டமான அர்த்தம் கொண்டதாகும். எனவேதான் அவைகள் வருங்காரியங்களுக்கு நிழலாய் இருக்கிறது; அவைகளின் பொருள் கிறிஸ்துவைப் பற்றினது என்று கொலோசேயர் 2:17 சொல்லுகிறது. ஆம், பரிசுத்தம் என்றதும் நமது நினைவுக்கு வரவேண்டியவர் கர்த்தரும் இரட்சகருமாகிய இயேசுகிறிஸ்து தான்.
உங்களைப் பரிசுத்தம் பண்ணிக்கொள்ளுங்கள் என்று யோசுவா 3:5 சொல்லுகிறது, கர்த்தராகிய தேவனை உங்கள் இருதயங்களில் பரிசுத்தம்பண்ணுங்கள் என்று 1 பேதுரு 3:15 சொல்லுகிறத். கிறிஸ்துவே தேவனால் நமக்கு ஞானமும் நீதியும் பரிசுத்தமும் மீட்புமானார் என்று 1 கொரிந்தியர் 1:31 சொல்லுகிறது. இதை எப்படிப் புரிந்துகொள்வது? பரிசுத்தம் என்றாலே அது கிறிஸ்துவை மையப்படுத்தினதுதான். அவரை இருதயத்தில் அங்கீகரித்து அவருக்கு பிரதான இடத்தைத் தருவதுதான் அவரை இருதயத்தில் பரிசுத்தம் பண்ணிக்கொள்வதாகும். கர்த்தர் என்ன செய்தார், என்ன செய்துகொண்டிருக்கிறார் என்பதைப் புரிந்து கொண்டால் பரிசுத்தம் எனும் விஷயத்தில் நாம் என்ன செய்யவேண்டும் என்பது தெளிவாகிவிடும். அது புரியாததால்தான் பரிசுத்தமாகிறேன் என்ற பெயரில் சரீர ஒடுக்கத்தால் அநேகர் தங்களை வதைத்துக்கொண்டிருக்கிறார்கள்.
நாம் பாவம் செய்து, பின்னர் சுவிசேஷத்தை அறிந்து மனந்திரும்பி கர்த்தராகிய இயேசுவின் இரத்தத்தால் கழுவப்பட்டு பரிசுத்தமாவது ஒன்று. அதுவும் உண்மைதான். ஆனால் வேதம் இன்னொருவிதமான பரிசுத்தம் குறித்தும் பேசுகிறது. அதுதான் பிரித்தெடுத்தல்.
தேவன் நாம் நமது தாயின் கர்ப்பத்தில் இருக்கும்போதே தமது அநாதி தீர்மானத்தால் நம்மைத் தெரிந்துகொண்டு நம்மைப் பிரித்தெடுத்து பரிசுத்தப்படுத்தினார் என்று எரேமியாவின் வாழ்வின் உதாரணத்திலிருந்து வாசிக்கிறோம். (எரேமியா 1:5) தேவன் நம்மைப் பிரித்தெடுத்ததன் காரணம் என்ன? அவருக்கு நம்மைக்குறித்த ஒரு நோக்கம் இருக்கிறது. அதை நிறைவேற்றுவதற்காகவே அவர் நம்மைப் பிரித்தெடுத்தார். நாம் பிரித்தெடுக்கப்பட்டதன் நோக்கத்தை உணர்ந்துகொண்டு, அதை நிறைவேற்றும்படி நமது வாழ்வை ஒப்புக்கொடுப்பதே பரிசுத்தமாகுதலாகும். நாம் பிரித்தெடுக்கப்பட்ட நோக்கத்தை ஆவியானவர் நமக்கு வெளிப்படுத்துகிறவராகவும் இருக்கிறார்.
நம்மை தமது நோக்கத்துக்கென்று பிரித்தெடுத்த தேவன் நம்மை பாதுகாக்கவும், பராமரிக்கவும், வழிநடத்தவும் வல்லவராக இருக்கிறார். அதைப் புரிந்துகொண்டு அவரது கைக்குள் அடங்கியிருப்பதே தேவன் நம்மிடம் எதிர்பார்க்கும் காரியமாகும்.
செய்தி: சார்லஸ் அருமைநாயகம்
செய்தியின் காணொளி இணைப்பு: https://youtu.be/RnNiaykfvm0