தேவன் தம்முடைய தயவுள்ள சித்தத்தின்படி நமக்குள் விருப்பங்களை உண்டுபண்ணி அதை நிறைவேற்றி முடிக்கும் வல்லமையையும் அவரே நமக்குத் தருகிறார் என்பதைப் பார்த்துக்கொண்டு வருகிறோம். தேவன் தம்முடைய சித்தத்தை வற்புறுத்தி நம்மைச் செய்ய வைப்பதில்லை. நாம் விரும்பி அதை செய்யவேண்டும் என்பதே அவருடைய சித்தமாக இருக்கிறது.
தேவன் நம்மில் விருப்பத்தை உண்டுபண்ணி, அவர் தரும் பலத்தினால் நாம் அந்த விருப்பத்தை நிறைவேற்றி முடிப்பதில் நமக்கும் 100% பொறுப்பு இருக்கிறது, அவருக்கும் 100% பொறுப்பு இருக்கிறது. மாற்கு 16:20 சொல்லுகிறபடி அவர்கள் (சீஷர்கள்) புறப்பட்டுப்போய், எங்கும் பிரசங்கம்பண்ணினார்கள். கர்த்தர் அவர்களுடனே கூடக் கிரியையை நடப்பித்து, அவர்களால் நடந்த அடையாளங்களினாலே வசனத்தை உறுதிப்படுத்தினார். ஆம், நாமும் தேவனும் இணைந்தே இசைந்து அதைச் செய்து முடிக்கிறோம்.
விருப்பத்தையும் செய்கைகளையும் நமக்குள் தேவனே உண்டுபண்ணுகிறபடியால் நாம் விருப்பத்தோடே செயல்பட தேவன் நமக்கு உதவி செய்கிறார். அப்போது தான் பிலிப்பியர் 2:16 சொல்லுகிறது போல முறுமுறுப்பும் தர்கிப்பும் இல்லாமல் நாம் அதைச் செய்துமுடிக்க முடியும். ஆகவே தேவனிடத்தில் விரும்பினது கிடைக்கவேண்டும் என்று விரும்புவதைவிட, தேவனிடத்திலிருந்து நமக்கு விருப்பங்கள் வரவேண்டும் என்று விரும்புவது நல்லது.
நாம் கர்த்தரிடத்தில் மனமகிழ்ச்சியாக இருக்கும் போது அவருடைய மனவிருப்பங்களை நம்முடைய மனவிருப்பங்களாக தேவன் மாற்றுகிறார். சில நேரங்களில் நமக்குள் விருப்பத்தை உண்டுபண்ணுவது போலவே, சில காரியங்கள் மீது வெறுப்பையும் தேவனே உண்டுபண்ணுகிறார். அதன் மூலம் நாம் செய்யக்கூடாதவைகளை செய்யாமல் இருக்கவும் முடியும். மாத்திரம் அல்ல சாதகமானவைகளையும், சந்தோஷமானவைகளையும் செய்வது போல, சவாலானதை செய்துமுடிக்கவும் தேவன் நம்மை பெலப்படுத்துகிறார். அவர் அதைச் செய்யாவிடில், நம்முடைய சுயபெலத்தினால், நம்மை நாமே வெறுத்து, நம்முடைய சிலுவையைச் சுமந்து அவருக்குப் பின்னே செல்ல முடியாது.
ஏன் நமக்கு அவர் சிலுவையின் பாதையில் நடக்கும் விருப்பத்தைத் தந்து, அப்பாதையில் நடந்து முடிக்கவும் பெலன் தருகிறாரென்றால், அந்தச் சிலுவைக்குப் பின் நமக்கு சிங்காசனம் காத்திருக்கிறது. அந்த சிங்காசனத்தில் நம்மை அமரவைக்கும் உயரிய நோக்கத்துடனும், உன்னத அன்புடனும் தான் தேவன் நம்மை அந்தப் பாதையில் நடத்துகிறார். அவருக்கே மகிமையுண்டாவதாக!.
செய்தி: பாஸ்டர் சார்லஸ் அருமைநாயகம்
செய்தியின் காணொளி இணைப்பு: https://youtu.be/oYsQV1v1uzA