பலன் அளிக்கிறவர்: நட்பு

Home » பலன் அளிக்கிறவர்: நட்பு

பலன் அளிக்கிறவர்: நட்பு

கர்த்தராகிய தேவன் தமது தாசனாகிய ஆபிரகாமை தன்னுடைய சிநேகிதன் என்று வேதத்தில் பல இடங்களில் சொல்லுவதை நாம் வாசித்திருப்போம். ஆபிரகாம் எப்படி தேவனுக்கு சிநேகிதனானான்? யாக்கோபு 2:23 இல் இதற்கான பதில் இருக்கிறது. ஆபிராகாம் தேவனை விசுவாசித்து, அவருடைய நீதியைப் பெற்றுக்கொண்டபடியால் அவன் அவருக்கு சிநேகிதன் ஆனான். தேவனே அவனுடைய நம்பிக்கையின் நங்கூரமாக இருந்தபடியால் அவனால் அவரை விசுவாசிக்க முடிந்தது.

தேவனுக்கு நண்பனாக இருப்பது என்பது தலைசிறந்த சிலாக்கியமாகும். தேவனோடு உள்ள அந்த நட்பை எப்படி நம்முடைய வாழ்க்கையில் அனுபவிக்க முடியும் என்றால் தெய்வீகமான உறவுகளின் மூலமாகத்தான் தேவனோடு உள்ள உறவின் சிறப்பை நம்மால் அனுபவிக்க முடியும். தேவனோடு இருக்கிற உறவு மனிதரோடு இருக்கிற உறவை சீர்படுத்தக்கூடியதாகவும், சிறப்பாக்ககூடியதாகவும் இருக்கிறது. நாம் அவர்மீது விசுவாசம் வைத்திருக்கிறபடியினால் நம் நம்பிக்கை ஒருநாளும் வீண்போகாது.

சம மனிதர்களோடு உள்ள நட்பை சிறப்பாக்குவது எதுவென்றால் நட்பில் இணைந்திருக்கிற இருவருக்கிடையே தேவனே அவர்கள் நட்புக்கு சாட்சியாகவும், ஆதாரமாகவும் இருப்பதாகும். தாவீதும் யோனத்தானும் கொண்டிருந்த தெய்வீக நட்பு தேவனுடைய சத்தியத்தையும், அவரது சித்தத்தையும் அடிப்படையாகக் கொண்டிருந்தபடியினால் யோனாத்தானால் தனது கிரீடம் தன்னிடத்திலிருந்து தாண்டி தாவீதைச் சென்றடைந்ததை ஏற்றுக்கொள்ள முடிந்தது. ஏற்றுக்கொள்ள முடிந்ததோடு மட்டுமல்லாமல் அவனால் தாவீதை உயிருக்கு உயிராக நேசிக்கவும் முடிந்தது.

வேதம் திருமண உறவை மிகவும் முக்கியப்படுத்துகிறது. கர்த்தர், கணவன், மனைவி மூவரும் முப்புரிநூலாக பிணைந்திருக்கும்போது அங்கே இல்லறம் சிறக்கிறது. வேதம் மனைவியை தோழி எனவும், உடன்படிக்கையின் மனைவி என்றும் முக்கியப்படுத்திச் சொல்லுகிறது. கடைசி மட்டும் கணவனும் மனைவியும் கர்த்தருக்கு சாட்சியாக வாழ்வதற்கு கர்த்தரே அவர்கள் உறவுக்கு ஆதாரமாகவும், சாட்சியாகவும் இருக்கிறார். கணவன் மனைவிக்கிடையே பிணக்கு ஏற்படும்போது கர்த்தரைச் சார்ந்துகொண்டு, அவருடைய கிருபையினால் ஆதியில் கொண்டிருந்த அன்பையும், கிரியைகளையும் திரும்பக் காட்டி மீண்டும் அந்நியோனிய உறவுக்குள் திரும்ப வேண்டும். கர்த்தர்தாமே நம்மை ஆசீர்வதிப்பாராக!

செய்தி: பாஸ்டர் சார்லஸ் அருமைநாயகம்

செய்தியின் காணொளி இணைப்பு: https://youtu.be/6R55UC4Z_9c

>