பலன் அளிக்கிறவர்: மன தைரியம்

Home » பலன் அளிக்கிறவர்: மன தைரியம்

பலன் அளிக்கிறவர்: மன தைரியம்

நாம் பாவம் செய்யாமல் இருக்க மட்டுமல்ல, பிதாவின் நன்மையும், பிரியமும், பரிபூரணமுமான சித்தத்தை செய்யவும் கர்த்தர் நமக்கு சுதந்திரம் கொடுத்திருக்கிறார். ஏனெனில் பிள்ளைகள் தான் தகப்பனுடைய சித்தத்தை செய்ய வேண்டும். அவர் தமது தயவுள்ள சித்தத்தின்படி அவருக்கு சுவிகார புத்திரராகும்படி அவர் நம்மை முன்குறித்திருக்கிறார் என்று வேதம் சொல்லுகிறது. அதை இன்னொருவிதமாக சொல்லப் போனால் சுவிகார புத்திரராகிய நமக்கு தயவுள்ள திட்டத்தை அவர் வைத்திருக்கிறார்.

அந்த நன்மையும், பிரியமும், பரிபூரணமுமான சித்தம் என்னவென்று தெரிந்தால் தான் நாம் அதை சுதந்திரமாகவும், சந்தோஷமாகவும் நிறைவேற்ற முடியும். அந்த திட்டம் மகா மேன்மையும், மகத்துவமுள்ளது என்பதில் எள்ளளவும் நமக்கு சந்தேகம் இருக்க வேண்டியதில்லை. ஏனெனில் வேதம் தெளிவாகச் சொல்லுகிறது, நீங்கள் எதிர்பார்த்திருக்கும் முடிவை உங்களுக்குக் கொடுக்கும்படிக்கு நான் உங்கள் பேரில் நினைத்திருக்கிற நினைவுகளை அறிவேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்; அவைகள் தீமைக்கல்ல, சமாதானத்துக்கேதுவான நினைவுகளே. (எரேமியா 29:11)

ஒரு வேளை அது நாம் நினைத்ததுபோல இல்லாமல் இருக்கலாம், அல்லது நாம் நினைத்த நேரத்தில் நடவாமல் இருக்கலாம். ஆனால் ஏசாயா 55:9 சொல்வது போல என் நினைவுகள் உங்கள் நினைவுகள் அல்ல; உங்கள் வழிகள் என் வழிகளும் அல்லவென்று கர்த்தர் சொல்லுகிறார். பூமியைப் பார்க்கிலும் வானங்கள் எப்படி உயர்ந்திருக்கிறதோ, அப்படியே உங்கள் வழிகளைப் பார்க்கிலும் என் வழிகளும், உங்கள் நினைவுகளைப் பார்க்கிலும் என் நினைவுகளும் உயர்ந்திருக்கிறது. ஆகவே தேவன் நமக்கென்று ஆயத்தம் செய்து வைத்திருக்கும் திட்டமானது நமது எல்லா கற்பனைகளையும், ஆசைகளையும்விட சிறந்ததாகும்!

நம்முடைய அறிவுக்கும் ஆற்றலுக்கும் எல்லை உண்டு. நம்மிடம் என்ன இருக்கிறது, நம்மால் என்ன முடியும், நமக்கு என்ன தெரியும் என்பதைப் பொறுத்து அது அமைகிறது. ஆனால் தேவனுடைய அறிவுக்கும் ஆற்றலுக்குமோ எல்லையே இல்லை. அவர் சகலத்தையும் செய்ய வல்லவர். இல்லாதவைகளை இருக்கிறவைகளைப் போல அழைக்கிறவர். அவரால் எல்லாம் கூடும்.

அப்பேற்பட்ட தேவன் நம்மீது கண்ணாயிருக்கிறார். நமக்கு எதை ஆயத்தம் செய்துவைத்திருக்கிறாரோ அதை அவரது கண்கள் ஏற்கனவே பார்த்துவிட்டன. வாக்குத்தத்தத்தில் இருக்கும் அந்த ஆசீர்வாதம் நம் வாழ்க்கையில் வந்து சேரும் நேரத்தையும், விதத்தையும் அவர் முன்குறித்திருக்கிறார். அது அப்படியே ஆகும்.நாம் நம்முடைய சூழ்நிலைகளைப் பார்க்காமல் அந்த வட்டத்தை விட்டு முதலாவது வெளியேறி, நம்மை நடத்தும் கர்த்தர் மீது நமது நம்பிக்கையையும், விசுவாசத்தையும், கவனத்தையும் வைக்கும்போது நன்மையானதையும், அனுகூலமானதையும், லாபகரமானதையும் நம் பிதா நமக்குக் கொடுப்பது அதிக நிச்சயமாயிருக்கிறது.

செய்தி: பாஸ்டர் சார்லஸ் அருமைநாயகம்

செய்தியின் காணொளி இணைப்பு: https://youtu.be/hYP0aw6ZU7g

>