வார்த்தையென்னும் நுகம்

Home » வார்த்தையென்னும் நுகம்

வார்த்தையென்னும் நுகம்

நீங்கள் கல்யாணத்துக்கு வர வேண்டாம் ஆனால் மொய்ப் பணத்தை மாத்திரம் அனுப்பிவிடுங்கள் என்று ஒருவர் கூறினால் எப்படி இருக்கும். அதுபோலத்தான் இன்று தங்கள் வாழ்க்கையில் கர்த்தர் வேண்டாம் ஆனால் அவர் தரும் நன்மைகள் மட்டும் வேண்டும் என்று நினைக்கிறார்கள். ஆனால் அது சாத்தியமல்ல. ஏனெனில் அவரோடு கூடத்தான் அவர் தரும் பலன்கள் அனைத்தும் வருகிறது. ஆசீர்வாதமும், இளைப்பாறுதலும், சமாதானமும் அவர் இருக்கும் இடத்தில்தான் இருக்கும்.

வருத்தப்பட்டுப் பாரஞ்சுமக்கிறவர்களே! நீங்கள் எல்லாரும் என்னிடத்தில் வாருங்கள்; நான் உங்களுக்கு இளைப்பாறுதல் தருவேன். என் நுகத்தை உங்கள்மேல் ஏற்றுக் கொண்டு, என்னிடத்தில் கற்றுக் கொள்ளுங்கள்; அப்பொழுது, உங்கள் ஆத்துமாக்களுக்கு இளைப்பாறுதல் கிடைக்கும் என்று கர்த்தராகிய இயேசு கிறிஸ்து மத்தேயு 11:28,29- இல் சொல்லுகிறார். அப்படியானால் உங்கள் பாரத்தை என்னிடம் இறக்கி வைத்துவிட்டு நான் உங்களுக்குத் தரும் பாரத்தை சுமந்துகொண்டு போங்கள் என்பது அர்த்தமல்ல. அவருடைய நுகம் என்பது அவருடைய வார்த்தைதான். நாம் அவருடைய வார்த்தையை ஏற்றுக்கொண்டு கற்றுக்கொள்ளும்போது நமது ஆத்துமாவுக்கு இளைப்பாறுதல் கிடைக்கிறது.

இங்கு “ஆத்துமாவுக்கு இளைப்பாறுதல்” என்ற வார்த்தையை நாம் கவனிக்க வேண்டும். நமது ஆத்துமாவுக்குத்தான் இளைப்பாறுதல் தேவை. நமது ஆத்துமா என்பது சிந்தனை, சித்தம், உணர்ச்சி இவற்றாலானது. தவறான சிந்தை தவறான உணர்ச்சிக்கு நேராகவும், தவறான உணர்ச்சி தவறான தீர்மானங்களுக்கு நேராகவும் நம்மை இழுத்துச் செல்லுகிறது. இதுவரை நமது வாழ்வில் நடந்து முடிந்த அத்தனை குழறுபடிகளுக்கும் வேர் அதுவே. எனவே நிரந்ததமான மாற்றம் நம் வாழ்வில் ஏற்பட வேண்டுமானால் வேரைத்தான் சரிசெய்ய வேண்டும், அதாவது ஆத்துமாவில்தான் மாற்றத்தைக் கொண்டுவரவேண்டும்.

கர்த்தராகிய தேவன் நமது ஆத்துமாவில் கிரியை செய்து நமது சிந்தையையும், சித்தத்தையும், உணர்ச்சிகளையும் சீர்படுத்தி செம்மையாக்குகிறார். அதன் விளைவாக நமது ஆத்துமா வாழ்ந்து செழிக்க ஆரம்பிக்கிறது. ஆத்துமா செழித்தவுடன் அந்த ஆத்துமா வாழ்கிறதுபோல நாம் எல்லாவற்றிலும் வாழ்ந்து சுகமாயிருக்கத் தொடங்குகிறோம். ஆம், நம் ஆத்துமாவில் உள்ளதே நமது வாழ்வில் பிரதிபலிக்கிறது.

இந்த படிநிலைகளுக்குள் நாம் கடந்துவரவேண்டுமானால் நாம் அவரது வார்த்தையை ஏற்றுக்கொண்டு, அவரைச் சார்ந்துகொண்டு, நம்மை அவருக்கும் முழுவதுமாக அர்ப்பணிக்க வேண்டும். நம்மால் எதையுமே கட்டுப்படுத்த முடியாத சூழலில் சகலத்தையும் கட்டுபடுத்த வல்லவருக்கு கட்டுப்பட்டு நடப்பதே அறிவுடைமையாகும்.

அவர் நமது ஆத்துமாவில் கிரியை செய்யும்போது ஒரு மொபைல் போன் reset செய்யப்பட்டால் அது எப்படி அது இருக்க வேண்டிய முன்னிலைக்கு திரும்புமோ அப்படியே நாமும் மாறவேண்டிய விதமாக மனமாற்றத்தை அடைவோம். அது சீக்கிரமே நமது புறம்பான வாழ்விலும் பிரதிபலிக்கத் துவங்கும்.

அதைவிடுத்து நாம் நமது பிரச்சனைகளுக்கு சூழ்நிலைகளையோ, மனிதர்களையோ காரணம் என்று எண்ணிக்கொண்டிருப்போமானால் நம்மால் அந்தப் பிரச்சனையில் இருந்து விடுபட்டு வெளியே வர முடியாது. தேவன் நாம் சுட்டிக்காட்டும் மனிதர்களையல்ல, நமக்குள்தான் ஒரு உள்ளான மாற்றத்தை ஏற்படுத்த விரும்புகிறார். அவரை மாற்றும்… இவரை மாற்றும் என்றெல்லாம் ஜெபிப்பதை விட, நமக்குள்ளான மாற்றமே நமக்குத் தேவையானதாக இருக்கிறது. அந்த மாற்றம் நிகழ்ந்தவுடன் நாமே வியக்கும் வண்ணம் நமது பிரச்சனைகள் மாறுவதை நாம் கண்கூடாகப் பார்க்க முடியும்.

அவருடைய நுகத்துக்குட்படும் யாவருக்கும் சமாதானம் நிச்சயமுண்டு. அவரது நுகம் அவருடைய வார்த்தைதான். அந்த வார்த்தையை அவர் நமக்குள் முழுவதுமாக பதிவிறக்கம் செய்ய அவர் விரும்புகிறார். அந்த வார்த்தை நமக்குள் நிலைப்படும் வரைக்கும் அவர் நமக்குள் கிரியை செய்துகொண்டே இருக்கிறார். அவருடைய வார்த்தைதான் ஜீவன், அது மட்டும்தான் தீர்வு என்பதை உணர்ந்து மகிழ்ச்சியுடன் அவருடைய வார்த்தை எனும் நுகத்துக்கு உட்படுவோமாக!

செய்தி: பாஸ்டர் சார்லஸ் ஃபின்னி அருமைநாயகம்

செய்தியின் காணொளி இணைப்பு: https://youtu.be/Krj7xBv3_Dg

>