ஆங்கிலத்தில் 26 எழுத்துக்கள் உண்டு. ஒரு ஆரம்பப் பள்ளியில் படிக்கும் ஒரு குழந்தைக்கு இந்த 26 எழுத்துக்களைத்தான் தெளிவாக முதலில் கற்றுக் கொடுப்பார்கள். பிறகு அடுத்தடுத்த வகுப்புகளுக்கு முன்னேறிச் செல்லச் செல்ல சிறிய வார்த்தைகளையும், பெரிய வார்த்தைகளையும் பின்னர் வாக்கியங்களையும் வாசிக்க அந்தக் குழந்தை கற்றுக்கொள்ளும். அந்த சிறு குழந்தையும், ஒரு முனைவர் பட்டம் பயிலும் ஒரு மனிதரும் அதே 26 எழுத்துக்களைத்தான் பயன்படுத்துவார்கள். ஆனால் அந்த 26 எழுத்துக்களை கொண்டு லட்சக்கணக்கான வார்த்தைகளையும், கோடிக்கணக்கான கோர்வைகளையும் உருவாக்க முடியும்.
நாம் வசனத்தைக் கற்றுக்கொள்வதும் அப்படித்தான். வசனத்தையும் வசனத்தின் கோர்வையையும் நன்றாகப் புரிந்துகொள்ளும்போது நமக்கு பல புதுப்புது விஷயங்கள் புலனாகின்றன. எவ்வளவாக வசனத்தைக் கற்றுக்கொள்கிறோமோ அவ்வளவாக நமது மனம் சத்தியத்தில் தெளிவுபடும். நமது மனம் தெளிவுபடும்போது அது விசுவாசத்தில் உறுதிப்படும். அப்படி விசுவாசத்தில் உறுதிப்பட்டு ஜெபிக்கிறவர்கள் ஜெயிக்கிறவர்கள் எப்படி ஜெபிப்பார்களோ அப்படி ஜெபிப்பார்கள்.
எனவேதான் யூதா 1:20 நீங்களோ பிரியமானவர்களே, உங்கள் மகா பரிசுத்தமான விசுவாசத்தின்மேல் உங்களை உறுதிப்படுத்திக்கொண்டு, பரிசுத்த ஆவிக்குள் ஜெபம்பண்ணி என்று நமக்கு அறிவுறுத்துகிறது. நாம் விருத்தியடைய வேண்டுமானால் ஆழப்பட வேண்டும். எனவேதான் விசுவாசிகள் மீது தேவையற்ற பாரங்களைச் சுமத்தாமல் அவர்களுக்கு எது தேவையோ அதை மாத்திரம் படிப்பிப்பது நல்லது என்று ஆதி அப்போஸ்தலர்கள் தீர்மானம் பண்ணினார்கள். (அப்போஸ்தலர் 15:10) அதுவே பரிசுத்த ஆவியானவருக்கும் நலமென்று பட்டது என்று அந்த வேதப்பகுதி சொல்லுகிறது.
போதிப்பதில் பவுலுக்கு இணையானவராகக் கருதப்பட்டவர் அப்பல்லோ. கொரிந்து சபையில் சிலர் நான் பவுலைச் சேர்ந்தவனென்று, சிலர் நான் அப்பொல்லோவைச் சேர்ந்தவனென்றும் பிரிந்திருந்தார்கள் என்றெல்லாம் நாம் வேதத்தில் வாசிக்கிறோம். அந்த அளவுக்கு தாக்கத்தை உருவாக்கிய மனிதன்தான் அப்பல்லோ. ஆனால் இந்த அப்பொல்லோ தனது ஆரம்ப நாட்களில் யோவான் கொடுத்த ஸ்நானத்தை மாத்திரம் அறிந்திருந்து அது குறித்துப் பிரசங்கித்து வந்தார் என்று அப்போஸ்தலர் நடபடிகள் 18 ஆம் அதிகாரம் குறிப்பிடுகிறது.
ஆனால் அவர் பேசுகிறதைக் கேட்ட ஆக்கில்லாவும், பிரிஸ்கில்லாளும் அவரைச் சேர்த்துக்கொண்டு தேவனுடைய மார்க்கத்தை அதிக திட்டமாய் அவனுக்கு விவரித்துக் காண்பித்தார்கள் என்று வேதம் சொல்லுகிறது. அதன் விளைவாக அப்பொல்லோ வெளியரங்கமாக யூதர்களுடனே பலமாய்த் தர்க்கம்பண்ணி, இயேசுவே கிறிஸ்து என்று வேதவாக்கியங்களைக்கொண்டு திருஷ்டாந்தப்படுத்தினபடியால், கிருபையினாலே விசுவாசிகளானவர்களுக்கு மிகவும் உதவியாயிருந்தார் என்று வாசிக்கிறோம்.
ஆம், நாமும் கூட அப்படி விசுவாசிகளுக்கு உதவியாய் இருக்கிறதில் பெருகுகிறவர்களாக இருக்க வேண்டுமென்று கர்த்தர் விரும்புகிறார். எனவேதான் நாம் களங்கமில்லாத ஞானப்பாலாகிய வேதவசனத்தின் மேல் வாஞ்சையாக இருக்க வேண்டும் என்று அப்போஸ்தலனாகிய பேதுரு ஆலோசனை சொல்லுகிறார். அந்த ஞானப்பாலாகிய வசனம் அப்போஸ்தலர் தீர்க்கதரிசிகளென்னும் அஸ்திபாரத்தின்மேல் கட்டப்பட்டது, கிறிஸ்து இயேசுவை மூலைக்கல்லாகக் கொண்டது. கிறிஸ்து இயேசுவே வேதம் முழுவதும் நிறைந்திருக்கிறார், அனைத்துக்கும் மூலமும், ஆதாரமுமாக இருக்கிறார். அவரைப் பற்றிய அறிவில் வளரும்போதுதான் விசுவாசத்தில் நாம் உறுதிப்பட்டவர்களாக நிற்க முடியும். அப்படி நிற்கும்போது நமது வாழ்வும், வழிகளும் சுகமானதாக, இளைப்பாறுதல் மிகுந்ததாக இருக்கும்.
செய்தி : பாஸ்டர் சார்லஸ் ஃபின்னி அருமைநாயகம்
செய்தியின் காணொளி இணைப்பு: https://youtu.be/DcBwChOwRjI