என்ன செய்ய வேண்டும் என்று தெரியாதபோது எதைச் செய்தாலும் அது தவறாகிவிடும் என்று சொல்வார்கள். குழப்பம் இருக்கும்போது இயல்பாகவே அங்கு பயம் வந்து நம்மைப் பிடித்துவிடுகிறது. ஆனால், வேத வார்த்தைகளின் அடிப்படையிலான ஒரு தெளிவு வரும்போது, இருண்ட மேகங்கள் விலகி சூரிய ஒளிக்கிரணம் பூமியில் பிரகாசிப்பது போல பயங்கள் நீங்கி மனம் குளிர்வடைகிறது.
விவேகி குளிர்ந்த மனம் உள்ளவன் என்று நீதிமொழிகள் 17:27 ல் எழுதியிருக்கிறது. ஆம், கர்த்தருடைய சித்தத்தைக் குறித்து ஒருவன் தெளிவாக இருக்கும் போது குளிர்ந்த மனம் உடையவனாக இருப்பான். அவனுக்குள் வார்த்தையின் வெளிச்சம் இருக்கும். அவன் நற்செய்தியைக் கேட்டு நீதியை பெற்றுக் கொண்டவனாகையால் எந்தத் துர்ச்செய்தியைக் கேட்டாலும் பயப்படான். அவன் இருதயம் கர்த்தரை நம்பி திடனாயிருக்கும்.
கர்த்தருடைய வார்த்தை என்ன சொல்கிறது என்ற புரிதல் இருக்கும்போது, அதன் அடிப்படையில் ஜெபிக்கும் ஒரு மனத்தெளிவு நமக்கு உண்டாயிருக்கும். யூதாஸ்காரியோத்து மரித்தபின்னர் அவன் இடத்துக்கு வேறொருவனை ஏற்படுத்த வேண்டும் என்ற முடிவைப் பேதுரு எடுத்தார். யூதாஸின் இடத்தில் வேறொருவனை நியமிக்க வேண்டும் என்று பேதுருவால் எப்படி முடிவெடுக்க முடிந்தது?
சங்கீத புஸ்தகத்திலே: அவனுடைய வாசஸ்தலம் பாழாகக்கடவது, ஒருவனும் அதில் வாசம்பண்ணாதிருப்பானாக என்றும்; அவனுடைய கண்காணிப்பை வேறொருவன் பெறக்கடவன் என்றும் எழுதியிருக்கிறது (அப்போஸ்தலர் 1:20) என்று பேதுரு சங்கீதங்களின் புத்தகத்திலுள்ள ஒரு தீர்க்கதரிசன வசனத்தை மேற்கோள் காட்டுகிறார். வேதத்தை வாசித்து அறிந்திருந்ததால்தான் பேதுருவால் ஒரு மூத்த அப்போஸ்தலனாக தெளிவான முடிவு எடுக்க முடிந்தது.
அதேபோல, பெந்தேகொஸ்தே நாளில் பரிசுத்த ஆவியானவர் ஊற்றப்பட்டபின் அனைவரும் ஆவியில் நிறைந்து பற்பலபாஷைகளைப் பேசுவதைக் கேட்டு சிலர் பரியாசம் செய்தனர், வேறு சிலர் பயந்தனர், இன்னும் சிலர் கலங்கினர். ஆனால் அங்கும் பேதுரு கம்பீரமாக எழுந்து நின்று:
அவர்களை நோக்கி, உரத்த சத்தமாய்: யூதர்களே, எருசலேமில் வாசம்பண்ணுகிற ஜனங்களே, நீங்களெல்லாரும் அறிந்துகொள்வீர்களாக, என் வார்த்தைகளுக்குச் செவிகொடுங்கள். நீங்கள் நினைக்கிறபடி இவர்கள் வெறிகொண்டவர்களல்ல, பொழுது விடிந்து மூன்றாம் மணி வேளையாயிருக்கிறதே. தீர்க்கதரிசியாகிய யோவேலினால் உரைக்கப்பட்டபடியே இது நடந்தேறுகிறது (அப்போஸ்தலர் 2:14-16) என்று தெளிவாய் பேசினதை நாம் வேதத்தில் வாசிக்கிறோம்.
வேதத்தை அறியாதவர்களது கண்களும், வேதத்தை அறிந்தவர்கள் கண்களும் ஒரே காரியத்தை வெவ்வேறு விதமாகப் பார்க்கும் என்பதற்கு மேற்கூறிய சம்பவங்கள் உதாரணங்கள் ஆகும். கர்த்தராகிய இயேசுவானவர் தாம் பரமேறிச் செல்லும் முன்பு பரிசுத்த ஆவியானவரை ஊற்றப்போகிறேன் என்றும் அவருக்காக காத்திருங்கள் என்றும் சொல்லிச்சென்றார்.
அவரது வார்த்தையின் அடிப்படையில் அவர்கள் காத்திருந்தார்கள் கர்த்தர் சொன்ன காரியம் அங்கு நிறைவேறியது. எனவேதால் அப்போஸ்தலனாகிய பேதுருவால் தெளிவாய் பேச முடிந்தது. கர்த்தர் என்ன சொல்லியிருக்கிறார் என்பதை அறிந்தால்தான் என்ன ஜெபிக்க வேண்டும் என்ற தெளிவு நமக்கு இருக்கும்.
எனவேதான், வேதத்தை வாசித்து ஆவியானவர் ஒத்தாசையுடன் அதை தியானிப்பது என்பது நமக்கு நிச்சயமாக இருக்க வேண்டிய ஒரு அனுபவமாக இருக்கிறது. நாம் வாசித்ததைத்தான் அவர் நமக்கு நினைப்பூட்டுவார். நாம் வாசிக்காதவைகள் நமக்கு வெளிப்பாடுகளாக கிடைக்கக்கூடியதாக இருக்கிறது.
வேதத்தை அறிந்து அதை புரிந்து கொள்ளும்போது நமக்குள் ஒரு மனத்தெளிவு ஏற்படுகிறது. அந்தத் மனத்தெளிவின் அடிப்படையில் நாம் அவரிடம் தைரியமாக விண்ணப்பிக்க முடிகிறது. ஒரு காரியத்தைக் குறித்து நாம் நிச்சயத்துடன் அவரிடம் தைரியமாக விண்ணப்பிக்க நம்மால் முடியுமானால் அவர் அதை நிறைவேற்றுவார் என்பதே நமக்கு அருளப்பட்ட நிச்சயமாக இருக்கிறது.
செய்தி: பாஸ்டர் சார்லஸ் ஃபின்னி அருமைநாயகம்
செய்தியின் காணொளி இணைப்பு: https://youtu.be/OhViXN3fO1I