“நீர் என்ன நினைக்கிறீரோ, அதைத்தான் செய்வீர்..நான் என்ன தடுக்கவா முடியும்? நீர் செய்ய நினைப்பது தடைப்படாது எனவே நீர் செய்ய நினைத்ததைச் செய்து தொலையும்…”
மேற்சொன்ன தொனியிலா பக்தன் யோபு பேசியிருப்பார்? நிச்சயமாக இல்லை.
“தேவரீர் சகலத்தையும் செய்ய வல்லவர்; நீர் செய்ய நினைத்தது தடைபடாது என்பதை அறிந்திருக்கிறேன்” (யோபு 42:2) என்று பக்தனாகிய யோபு சொல்லும் தொனி இன்னதென்பதை அறிந்தால்தான் அவர் என்ன சொல்லவருகிறார் என்பதை நாம் அறிந்துகொள்ள முடியும்.
தேவனைப் பற்றி நன்கு அறிந்திருந்தபடியால் “தேவரீர் சகலத்தையும் செய்ய வல்லவர்” என்று யோபு சொல்லும்போது அவருக்குள்ளிருந்த விசுவாசம் ஒரு அணுகுண்டைப்போல வெடித்துக் கிளம்பியிருக்கும். தேவன் நமக்கு செய்ய நினைத்திருப்பது நன்மையானதுதான் என்ற நம்பிக்கை முதலாவது ஒரு விசுவாசிக்கு வேண்டும்.
தேவசித்தம் செய்வதை சிலர் தியாகம் செய்வதுபோல கருதிக் கொள்ளுகிறார்கள். அதாவது தேவசித்தம் என்பது தேவனுக்கு பிடித்ததாகவும், நமக்குப் பிடிக்காததாகவும்தான் இருக்கும். எனவே தேவசித்தம் செய்ய ஒரு தியாகமனப்பான்மை வேண்டும் என்பது அவர்களது எண்ணம். ஆனால் அது முற்றிலும் தவறு!
அவருடைய தீர்மானத்தின்படி அழைக்கப்பட்டவர்களாய் தேவனிடத்தில் அன்புகூருகிறவர்களுக்குச் சகலமும் நன்மைக்கு ஏதுவாக நடக்கிறதென்று ரோமர் 8:28 சொல்லுகிறது. எனவே அவரது தீர்மானமே நமக்கு நன்மைக்கேதுவானதுதான். நமக்கு நன்மை உண்டாக்குவதே அவருக்கு இன்பமாக இருக்கிறது.
தேவனுடைய பிரதான நோக்கமே அவரது மகிமையும், நம்முடைய நன்மையும்தான்!
நமக்கு நன்மை செய்வதன் மூலம் அவர் மகிமையடைகிறார். அவரது மகிமையை மட்டும் தேடுவதன் மூலம் நாம் நன்மைகளைப் பெற்றுக்கொள்கிறோம். இந்த உண்மையைப் புரிந்துகொள்ளாதபடியால்தான் அஞ்ஞானிகள் நன்மைகளைத் துரத்திக்கொண்டு ஓடுகிறார்கள். ஆனால் தேவனுடைய பிள்ளைகளுக்கோ அவர்கள் ஜீவனுள்ள நாளெல்லாம் நன்மையும் கிருபையும் அவர்களைத் துரத்திக்கொண்டு வரும். (சங்கீதம் 23:6)
தேவன் பல நேரங்களில் நமக்குப் பிடித்ததை அல்ல, நமக்கு நலமானவைகளைக் கொடுக்கிறார். அவர் நமக்கு நலமானதைத்தான் கொடுக்கிறார் என்ற உண்மை நமக்குப் புரியுமானால் அவர் கொடுப்பதின்மேல் நமக்குப் பிரியம் ஏற்படும். தேவன் எனக்கு நன்மையை மட்டுந்தான் தருகிறார் என்பதை நம்பாதவர்கள் அடுத்தவர் எவற்றை நன்மை, தீமை என்கிறார்களோ அதின்படி வாழும் நிர்பந்தத்துக்கு ஆளாகிறார்கள். அவர்களது மதிப்பீடுகள் மாறிக்கொண்டே இருக்கும், அது மாற, மாற நாமும் நம்மை மாற்றிக்கொள்ள வேண்டியது இருக்கும். ஆனால் தேவன் மாறுவதில்லை, எனவேதான் அவரை நம்புகிறவர்கள் அசைக்கமுடியாத கன்மலையைப் போல இருக்கிறார்கள்.
தேவன் தன்னை சார்ந்துகொள்ளுகிறவர்களை திருப்தியாக்குகிறார், எப்படியெனில் அவருக்கு பிரியமானதைச் செய்ய விருப்பத்தை நமக்குள் ஏற்படுத்தி அந்த விருப்பத்தை செயல்படுத்த அவர் நமக்கு பெலனையும், ஆலோசனைகளையும் வழங்கி அதற்கான வழிகளையும் திறந்துவிடுகிறார். இப்படிச் செய்வதன் மூலம் அவர் நம்மைத் திருப்தியாக்குகிறார். அதாவது நம்மால் முடியாததை நம்மைக்கொண்டே தேவன் செய்துமுடிப்பதுதான் அவருக்கு மகிமையாக இருக்கிறது.
நம்மை ஆசீர்வதிப்பதே கர்த்தருக்குப் பிரியம் என்பதை அறிந்துகொள்வோமானால் அவருக்கு இசைவதும், இணங்குவதும் எளிது. நமது சூழ்நிலைகள் ஒருவேளை எதிர்மறையாக இருக்கலாம். அல்லது யோபுவைப்போல நாம் சில இழப்புகளைச் சந்தித்திருக்கலாம். ஆனால் தேவனுடைய பிள்ளைகளுக்கு அந்த துன்பங்களின் மத்தியிலும் ஒரு நங்கூரம் போன்ற நம்பிக்கை இருக்கிறது. அது நித்தியப்பிதாவாகிய என் தேவன் எனக்கு நன்மையான ஈவுகளை மட்டுமே தனது தீர்மானத்தில் வைத்திருக்கிறார் என்பதும், அவர் அதை செய்துமுடிக்க வல்லவர், அவர் செய்ய நினைத்தது தடைப்படாது என்பதுமே அந்த மகா மேன்மையான நம்பிக்கை ஆகும்.
செய்தியின் காணொளி இணைப்பு: https://youtu.be/BLNCSZgq544