ஆறுதல்: கண்களைத் தெளிவிக்கிறது

Home » ஆறுதல்: கண்களைத் தெளிவிக்கிறது

ஆறுதல்: கண்களைத் தெளிவிக்கிறது

கண்ணானது சரீரத்தின் விளக்காயிருக்கிறது; உன் கண் தெளிவாயிருந்தால், உன் சரீரம் முழுவதும் வெளிச்சமாயிருக்கும்.உன் கண் கெட்டதாயிருந்தால், உன் சரீரம் முழுவதும் இருளாயிருக்கும்; இப்படி உன்னிலுள்ள வெளிச்சம் இருளாயிருந்தால், அவ்விருள் எவ்வளவு அதிகமாயிருக்கும் என்று மத்தேயு 6:22,23 வசனங்கள் சொல்லுகின்றன.

இங்கே “கண்” என்று ஒருமையில் குறிப்பிடப்பட்டிருப்பது எதைக் குறிக்கிறது? இருதயம், மனசாட்சி, உள்ளான மனிதன், மனித ஆவி என்ற ஒன்றுக்கொன்று தொடர்புடைய ஆவிக்குரிய நிலைகளைக் குறிக்கிறது. இந்தக் கண்தான் நமக்கு ஒரு காரியத்தின் ஆவிக்குரிய உண்மை நிலையைக் காட்டி, எது சரி எது தவறு என்பதையும் வரையறுத்து, சரியான திசையை நமக்குக் காட்டுகிறதாயிருக்கிறது. இந்தக் கண் வெளிச்சமாயிருந்தால் நமது வாழ்க்கை வெளிச்சமாயிருக்கும், இது இருளாயிருந்தால் வாழ்க்கையும் இருளடைந்துவிடும்.

நீதிமான்களுடைய பாதை நடுப்பகல்வரைக்கும் அதிகமதிகமாய்ப் பிரகாசிக்கிற சூரியப்பிரகாசம்போலிருக்கும். துன்மார்க்கருடைய பாதையோ காரிருளைப் போலிருக்கும்; தாங்கள் இடறுவது இன்னதில் என்று அறியார்கள் என்று சாலோமோன் ஞானி சொல்லுகிறார். (நீதிமொழிகள் 4:18,19) தெய்வீகக் கண்ணோட்டமுள்ளவன் அத்தனையும் விசுவாசக் கண்கொண்டு பார்க்கும் தெளிவுள்ளவனாக இருக்கிறான். ஆனால் கண் கெட்டுப்போன நிலையில் இருக்கிறவனோ உலகத்தின் மாயையில் சிக்குண்டு, பணத்தை தன் எஜமானாக வைத்து கவலை எனும் நுகத்தை தன் கழுத்தில் தானே பூட்டிக்கொள்கிறான். அந்தக் கவலை அவனை பயத்துக்கு நேராக நடத்துகிறது. பயமானது அவன் வாழ்க்கையையே இருளாக்கிவிடுகிறது.

தேவன் நம் கண்களை எப்படித் தெளிவிக்கிறார் என்பதை நாம் படைப்பின் வரலாற்றின் மூலம் அறிந்துகொள்ளலாம். வெறுமையும், இருளும் கவ்விக்கொண்டிருந்த இடத்தில் வெளிச்சம் உண்டாகக்கடவது என்ற ஜீவனுள்ள தேவவார்த்தை வெளிச்சத்தைக் கொண்டுவந்தது. சிருஷ்டிப்பில் மட்டுமல்ல புது சிருஷ்டிப்பாகிய நமக்குள் நடக்கும் ஆவிக்குரிய கிரியையிலும் தேவன் அதையே செய்கிறார். அவருடைய ஜீவனுள்ள வார்த்தை நமக்குள் வெளிச்சத்தைக் கொண்டுவருகிறது. நாம் உருவாக்கப்படுவதற்கு முன்பாகவே நமக்கு தேவையானவைகளை வார்த்தை உருவாக்கியிருக்கிறது. அவருடைய வார்த்தையின் வெளிச்சம் நம்மை அவர் விரும்பும் வகையில் மாற்றக்கூடியதாகவும் இருக்கிறது.

இருளிலிருந்து வெளிச்சத்தைப் பிரகாசிக்கச்சொன்ன தேவன் இயேசு கிறிஸ்துவின் முகத்திலுள்ள தமது மகிமையின் அறிவாகிய ஒளியைத் தோன்றப்பண்ணும்பொருட்டாக, எங்கள் இருதயங்களிலே பிரகாசித்தார் (2 கொரிந்தியர் 4:6) என்று தேவனுடைய வார்த்தை சொல்லுகிறதுபோல தேவனுடைய வார்த்தைதாமே நமக்குள்ளே பிரகாசித்து, நமக்கு பிரகாசமான மனகண்களைக் கொடுத்து நம்மை அடுத்தடுத்த ஆவிக்குரிய வளர்ச்சியின் படிநிலைகளுக்குள் அழைத்துச் செல்லுகிறது.

செய்தி: பாஸ்டர் சார்லஸ் அருமைநாயகம்

செய்தியின் காணொளி இணைப்பு: https://youtu.be/cPlrtWweiCQ

>