யோவான் 8- ஆம் அதிகாரத்தில் விபச்சாரத்தில் கையும் மெய்யுமாகப் பிடிபட்ட ஒரு பெண்ணை கர்த்தராகிய இயேசுவின் முன்னால் நிறுத்துகிறார்கள். அதற்குப் பின்னால் நடந்த சம்பவங்கள் நாம் அறிந்ததுதான். கர்த்தராகிய இயேசு அந்தப் பெண்ணிடம் “நானும் உன்னை ஆக்கினைக்குள்ளாகத் தீர்க்கிறதில்லை; நீ போ, இனிப் பாவஞ்செய்யாதே” என்று சொல்வதை நாம் வாசிக்கிறோம். இங்கே உலகப்பிரகாரமான ஒரு கண்கொண்டு பார்க்கும் ஒரு நபருக்கு ஒரு பாவியை ஆக்கினையை விட்டு விடுவிக்க இவர் யார்? இவள் விடுவிக்கப்பட்டால் இவளால் இதுவரை நடந்த சேதங்களுக்கும், இவளால் பாதிக்கப்பட்ட நபர்களுக்கும், குடும்பங்களுக்கும் யார் பொறுப்பு என்ற கேள்வி எழும்.
நானும் உன்னை ஆக்கினைக்குள்ளாகத் தீர்க்கிறது இல்லை என்பதை கர்த்தராகிய இயேசு வெறும் வாய் வார்த்தையாகச் சொல்லவில்லை. அந்த பாவத்தையும், அதன் விளைவுகள் அத்தனைக்குமான நிவாரணம் முழுவதையும், இயேசு சிலுவையில் சுமந்து பாவத்தைப் போக்குவதாலேயே அவரால் அப்படி திட்டவட்டமாகச் சொல்ல முடிந்தது. அதுமட்டுமன்றி நீ போ, இனிப் பாவஞ்செய்யாதே என்ற அறிவுறுத்தலோடு அவளை அவர் அனுப்பி வைப்பதையும் நாம் பார்க்கமுடிகிறது.
கிறிஸ்துவே நமது பாவங்களுக்காக மரித்தவராகவும், நாம் பாவத்துக்கு மரித்து நீதிக்கு பிழைத்திருக்கும்படி உயிர்தெழுந்தவராகவும் என்றன்றைக்கும் உள்ள சதாகாலங்களுக்கும் ஜீவிக்கிறவராகவும் இருக்கிறார். அவர் நம்முடைய பாவங்களுக்கான நிவாரணத்தை சிலுவையில் செலுத்தியது மட்டுமல்லாமல் அதனுடைய வல்லமையிலிருந்து நம்மை மீட்டு நாம் பரிசுத்தமாக வாழ நமக்கு உதவி செய்கிறவராகவும் அவர் இருக்கிறார். அதை அவர் எவ்வாறு செய்கிறார் என்பதை நாம் இந்த செய்தியில் தியானிக்கவிருக்கிறோம்.
கிறிஸ்து நமக்காக பாடுபட்டு நாம் அடைய வேண்டிய ஆக்கினையை அவர் அடைந்து நம்மை சட்டப்படி விடுவித்தது மெய்தான். ஆனாலும் நாம் செய்த பாவங்களையும் நமது தகுதியின்மையையும் நாம் அறிந்திருக்கிறோமே. அதை அடிக்கடி நமக்கு நினைப்பூட்டி குற்றப்படுத்துபவை மூன்று விஷயங்கள். அவையன:
முதலாவதாக பிரமாணம் நமது குற்றங்களை சுட்டிக்காட்டுகிறபடியால் அது நம்மை குற்றவாளிகளென தீர்க்கிறது. ஆனால் கிறிஸ்து நமக்காக சாபமாகி நியாயப்பிரமாணத்தின் சாபத்துக்கு நம்மை நீங்கலாக்கி மீட்டுக்கொண்டார் என்று வேதம் சொல்லுகிறது. பிரமாணம் பாவத்துக்கு தண்டனை கொடுக்கச் சொல்லுகிறது. கிறிஸ்து இயேசுவின் இரத்தமோ நம்மை மன்னிக்கச் சொல்லுகிறது.
அதெப்படியெனில், மாம்சத்தினாலே பலவீனமாயிருந்த நியாயப்பிரமாணம் செய்யக்கூடாததை தேவனே செய்யும்படிக்கு, தம்முடைய குமாரனைப் பாவமாம்சத்தின் சாயலாகவும், பாவத்தைப் போக்கும் பலியாகவும் அனுப்பி, மாம்சத்திலே பாவத்தை ஆக்கினைக்குள்ளாகத் தீர்த்தார் (ரோமர் 8:3)
அதாவது நம்மை ஆக்கினைக்குள்ளாகத் தீர்த்து அழிக்கக்கூடிய வல்லமையை படைத்த பாவத்தையே அவர் கல்வாரி சிலுவையிலே அவர் ஆக்கினைக்குள்ளாகத் தீர்த்து அழித்திருப்பதன் மூலமாக அவர் நம்மை முற்றிலும் விடுவித்திருக்கிறார். எனவே திரும்பவும் அடிமைத்தன நுகத்துக்கு உட்படாதபடிக்கு கிறிஸ்து உங்களுக்கு உருவாக்கிக் கொடுத்த சுயாதீன நிலையிலே நிலை கொண்டிருங்கள். (கலாத்தியர் 5:1)
இரண்டாவதாக பிசாசானவன் நம்மீது இரவும் பகலும் குற்றஞ்சாட்டுகிறவன் என்று வெளிப்படுத்தல் 12:10,11 வசனங்கள் சொல்லுகின்றன. “அப்பொழுது வானத்திலே ஒரு பெரிய சத்தமுண்டாகி: இப்பொழுது இரட்சிப்பும் வல்லமையும் நமது தேவனுடைய ராஜ்யமும், அவருடைய கிறிஸ்துவின் அதிகாரமும் உண்டாயிருக்கிறது; இரவும் பகலும் நம்முடைய தேவனுக்குமுன்பாக நம்முடைய சகோதரர்மேல் குற்றஞ் சுமத்தும்பொருட்டு அவர்கள் மேல் குற்றஞ்சாட்டுகிறவன் தாழத் தள்ளப்பட்டுப்போனான். மரணம் நேரிடுகிறதாயிருந்தாலும் அதற்குத் தப்பும்படி தங்கள் ஜீவனையும் பாராமல், ஆட்டுக்குட்டியின் இரத்தத்தினாலும் தங்கள் சாட்சியின் வசனத்தினாலும் அவனை ஜெயித்தார்கள்.
பிசாசு நம்மைக் குறித்து நன்கு அறிந்தவனாகையால் அவன் நம்மைக் குற்றம் சாட்டும்போது அதை மறுக்க நம்மால் இயலாது. அதற்கு மாறாக நாம் என்ன செய்தோம் என்று அவன் நம்மிடம் சொல்லும் போது நாம் அவனிடம் சிலுவையில் கிறிஸ்து எனக்காக என்ன செய்தார் என்பதை சொல்லும் போது அவன் நம்மைவிட்டு ஓடிப்போகிறான்.
மூன்றாவதாக நம்முடைய இருதயமே நம்மைக் குற்றப்படுத்துகிறது என்று பார்க்கிறோம். “நம்முடைய இருதயமே நம்மைக் குற்றவாளிகளாகத் தீர்க்குமானால், தேவன் நம்முடைய இருதயத்திலும் பெரியவராயிருந்து சகலத்தையும் அறிந்திருக்கிறார்” என்று 1 யோவான் 3:20- இல் வாசிக்கிறோம். நமது இருதயம் சொல்லும் குற்றச்சாட்டு உண்மையென நாம் அறிந்திருக்கிறோம், ஆனாலும் நமது இருதயம் நம்மை அறிந்திருக்கிறதை விட அதிகமாக நம்மை அறிந்திருக்கும் நமது கர்த்தர் நமது மனசாட்சியை செத்த கிரியைகளற சுத்திகரித்திருக்கிறார் என்று எபிரேயர் 9:14 சொல்லுகிறது.
ஏற்கனவே நீக்கப்பட்டு, கடலின் ஆழத்திலும், அவரது முதுகுக்குப் பின்பாகவும் தூக்கி எறியப்பட்ட நமது குற்றங்களை நாம் நினைவுகூர வேண்டிய அவசியம் இனி இல்லை. கர்த்தராகிய இயேசுவே நமக்காக அடிக்கப்பட்டார், அவரே நமக்காக உயிர்த்தெழுந்தார், அவரே நமக்காக பிதாவின் வலதுபாரிசத்தில் சகல அதிகாரங்களுடனும் வீற்றிருக்கிறார், அவரே நமக்கு உதவி செய்கிறவருமாக இருக்கிறார்.
இதை அறிந்தவர்களாக நாம் குற்றமனசாட்சியை உதறிவிட்டு நடுப்பகல் போல அதிகதிகமாக பிரகாசிக்கும் சூரியப்பிரகாசமான நீதியின் பாதையிலே கிறிஸ்துவின் கிருபையோடு, ஆவியானவரின் பெலத்தோடு நடைபோடுவோமாக. அனைவருக்கும் கிறிஸ்து உயிர்த்தெழுந்த திருநாளின் வாழ்த்துக்கள்!
செய்தி: பாஸ்டர் சார்லஸ் ஃபின்னி அருமைநாயகம்
செய்தியின் காணொளி இணைப்பு: https://youtu.be/ArfIR840Y7c