நீங்கள் அசதியாய் இராமல், வாக்குத்தத்தமான ஆசீர்வாதங்களை சுதந்தரித்துக்கொள்ள விசுவாசத்தினாலும் நீடியபொறுமையினாலும் பின் பற்றுகிறவர்களாய் இருந்து என்று எபிரேயர் 6:11- இல் சொல்லுகிறது. நம்முடைய சத்துருவாகிய சாத்தானோ நமது விசுவாசத்தை நிலைகுலைய வைத்து, பொறுமையை இழந்துபோகப் பண்ணுவதினிமித்தம் நாம் வாக்குத்தத்தமான ஆசீர்வாதங்களை சுதந்தரிக்கக்கூடாமல், அதை நம்மைவிட்டுப் பறிக்க இடைவிடாமல் முயன்று கொண்டிருக்கிறான். ஏனெனில் விசுவாசமும் பொறுமையும்தான் நம்மை வாக்குத்தத்தத்துக்கு நேராக அழைத்துச் செல்லுகின்றன.
அவனுக்கு எதிரான அந்த யுத்தமே நமது சிந்தை எனும் போர்க்களத்தில்தான் நடக்கிறது. வாக்குத்தத்தங்கள் நிறைவேறத் தாமதிக்கும்போது நமக்குள் கேள்விகளையும் சந்தேகங்களையும் எழுப்புவான். நம்மை வாக்குத்தத்ததைப் பார்க்கவிடாமல் சூழ்நிலைகளைப் பார்க்கும்படி திசைதிருப்ப முயல்வான். யாக்கோபு 4:7- இல் சொல்லுகிறபடி தேவனுக்கு கீழ்ப்படிவதன் மூலம் அவனுக்கு எதிர்த்து நின்று எண்ணங்களில் அவன் எய்யும் அக்கினி அஸ்திரங்களை எல்லாம் அவித்துப்போடத்தக்கதாக விசுவாசம் எனும் கேடயம் தூக்கிப் பிடித்தவர்களாக நாம் காணப்பட வேண்டும்.
இதை வாசிக்கும்போது “அவ்வளவு விசுவாசம் எனக்கு இருக்கிறதா?” என்ற கேள்வி உங்களுக்கு வரலாம். ஏனெனில் விசுவாசக் குறைவால் ஆசீர்வாதங்களையும் அற்புதங்களையும் இழந்தவர்களைப் பற்றி வேதத்தில் நிறைய வாசித்திருக்கிறோம். நமக்கும் அப்படியொரு துர்பாக்கியம் நேர்ந்துவிடுமோ என்ற பயம் உங்களுக்கு வேண்டாம். ஏனெனில் தேவன் நம்மில் விசுவாசக் குறைவைக் காணும்போது அவர் நம்மிடத்தில் ஒரு வித்தியாசமான அணுகுமுறையைக் கையாளுகிறார். அதாவது மாற்கு 6:6- இல் “அவர்களுடைய அவிசுவாசத்தைக்குறித்து ஆச்சரியப்பட்டு; கிராமங்களிலே சுற்றித்திரிந்து, உபதேசம்பண்ணினார்” என்று எழுதப்பட்டிருக்கிறது. ஆம், அவர் நம்மில் விசுவாசக் குறைவைக் காணும்போது அதை நீக்கும்பொருட்டு அவர் நமக்கு உபதேசம் பண்ணுகிறார். ஏனெனில் நாம் அவருடைய பிள்ளைகளாயும், வாக்குத்தத்தத்துக்கு சுதந்திரவாளிகளாயும் இருக்கிறோம்.
எனவே விசுவாசக் குறைவினால் எனது வாக்குத்தத்தங்களை இழந்துவிடுவேனோ என்ற கவலை இனி உங்களுக்கு வேண்டாம். ஆனால் அதே நேரத்தில் அவருக்கு செவிகொடுத்து விசுவாசத்தில் வளர்ந்து ஜெயங்கொள்ளுவதில் நாம் ஜாக்கிரதையாகக் காணப்பட வேண்டும். நம்மில் விசுவாசத்தை வேரூன்றச் செய்ய அவர் எடுக்கும் முயற்சிகளுக்கு ஒத்துழைப்பு நல்கும் வரையில் நாம் தொடர்ந்து அவருடைய வசனத்தைக் கேட்டுக்கொண்டே இருக்க வேண்டும், கேட்டவைகளைப் புரிந்துகொண்டே இருக்க வேண்டும். புரிந்து கொண்டவைகளை அறிக்கை செய்து பழக வேண்டும்.
இதைத்தான் என்னுடைய நுகத்தை ஏற்றுக்கொண்டு என்னிடத்தில் கற்றுக்கொள்ளுங்கள் என்கிறார். நுகத்தை ஏற்றுக்கொள்ளுதல் என்றால் அவரை ஆசிரியராக ஏற்றுக்கொள்ளுதல், இரட்சகராக சார்ந்து கொள்ளுதல் என்று அர்த்தம் ஆகும். அவருடைய வார்த்தைகளைக் கேட்டல், கேட்டதைப் புரிந்துகொள்ளுதல், புரிந்துகொண்டதை வைத்து விண்ணப்பம் செய்தல், விண்ணப்பம் செய்ததைப் பெற்றுக்கொண்டதாக அறிக்கை செய்தல் என்ற இந்த அத்தியாவசியமான விசுவாச முயற்சிகளை ஆர்வத்துடனும், விடாமுயற்சியுடனும் நாம் தொடர்ந்து செய்துகொண்டே இருக்க வேண்டும். இதில் நிலைத்திருக்கும்போது நமக்கு அசதியும், அவிசுவாசமும் வராது. நாம் ஆவியில் ஆரம்பித்து மாம்சத்தில் முடிக்க மாட்டோம்.
மேற்கண்ட காரியங்களை செய்யாமல் வெறும் வாக்குத்தத்ததை மாத்திரம் பெற்றுக்கொண்டு அதை வீட்டுக் கதவில் ஒட்டிவைத்துக் காத்திருப்போமானால் அது தாமதிக்கும்போது சோர்ந்துபோய் மாம்சீக முயற்சிகளில் இறங்கி சிக்கலில் மாட்டிக்கொள்வோம். வாக்குத்ததங்களைப் பெறுவதில் மட்டுமல்ல, அது நிறைவேறித் தீருமளவும் நாம் கர்த்தரோடு இசைந்து, அவருடைய வழிமுறைகளைப் பின்பற்றி, விசுவாசத்தோடு காத்திருந்து, வாக்கருளப்பட்டவைகளைப் பெற்றுக்கொள்வதில் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்.
சமாதானத்தின் தேவன் சீக்கிரமாய்ச் சாத்தானை உங்கள் கால்களின் கீழே நசுக்கிப்போடுவார். நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவினுடைய கிருபை உங்களுடனேகூட இருப்பதாக. ஆமென். (ரோமர் 16:20)
செய்தி: பாஸ்டர் சார்லஸ் ஃபின்னி அருமைநாயகம்
செய்தியின் காணொளி இணைப்பு: https://youtu.be/ZZAbP83jTN4