மன அழுத்தம் என்பது எல்லோருக்கும் வரும் ஒரு பிரச்சனைதான். ஆனால் மன அழுத்தம் வரும்போது சாதாரண மனிதர்கள் அதற்கு எப்படி எதிர்வினை ஆற்றுகிறார்கள். தேவமனிதர்கள் எப்படி எதிர்வினை ஆற்றுகிறார்கள் என்பதில்தான் வித்தியாசம் இருக்கிறது. தேவபிள்ளைகள் எப்படி எதிர்வினையாற்ற வேண்டும் என்பதை இந்த செய்தியில் கற்றுக்கொள்ளவிருக்கிறோம்.
மன அழுத்தத்தை முளையிலேயே கிள்ளி எறியாவிட்டால் அது பல்வேறு படிநிலைகளுக்குள் நம்மை இழுத்துச் செல்லுகிறது. மன அழுத்தத்தில் இருக்கும்போது தானாகவே நமது வாய் முறுமுறுக்க ஆரம்பிக்கிறது. பின்னர் அது எரிச்சலாக மாறுகிறது. அந்த எரிச்சல் கோபமாகவும் அந்த கோபத்தினால் பிரச்சனையை சரிசெய்ய முயன்று அது முடியாமல் போவதால் அது கசப்பாகவும் மாறுகிறது. அந்தக் கசப்பான வேர் பின்னர் கலகங்களை விளைவித்து அநேகரைத் தீட்டுப்படுத்துகிறது. முடிவில் அந்த ஆத்துமா நொந்து போய் தன்னால் எதையும் மாற்ற முடியாது எல்லாம் தலைவிதிப்படி நடக்கட்டும் என்ற முடிவுக்கு வந்து தோய்ந்துவிடுகிறது. மன அழுத்தத்துக்கு உட்படும் சாதாரண மனிதர்கள் ஆற்றும் எதிர்வினை இப்படித்தான் முடிவடைகிறது.
மன அழுத்தத்தை தேவபிள்ளைகள் எப்படி எதிர்கொள்ள வேண்டும்?
மன அழுத்தத்தை முளையிலேயே கிள்ளி எறிய வேண்டும். மன அழுத்தம் முறுமுறுப்பாக மாறுவதற்கு முன்னால் நாம் தேவனுக்கு செவிகொடுக்க வேண்டும். அப்படி செவிகொடுக்கும்போது நாம் அவரிடத்தில் கற்றுக்கொள்கிறோம். அவரிடத்தில் கற்றுக்கொள்ளும்போது நமக்கு இளைப்பாறுதல் கிடைக்கிறது.
மன அழுத்தத்தம் முறுமுறுப்பாக மாற இஸ்ரவேல் மக்கள் இடங்கொடுத்தார்கள். அவர்கள் செவிகொடுக்காமல் தங்கள் கூடாரங்களில் முறுமுறுத்துக் கொண்டிருந்தார்கள் என்று சங்கீதம் 106:25 சொல்லுகிறது. இதுதான் அவர்களில் பல்லாயிரம்பேர் விழுந்துபோகக் காரணமாக இருந்தது. நாற்பது வருடங்களாக முறுமுறுத்துக் கொண்டேயிருந்ததால் அவர்கள் குணமே அப்படி ஆகிவிட்டது. அவர்களுக்கு திரும்பத் திரும்ப கற்றுக்கொடுத்தும் அவர்கள் கற்றுக்கொள்ளாத கடின இருதயமுள்ளவர்களாக இருந்தபடியால் அவர்கள் என்னுடைய இளைப்பாறுதலில் பிரவேசிப்பதில்லை என்று கர்த்தர் சொன்னதாக சங்கீதம் 95:10,11 கூறுகிறது.
கர்த்தர் வசம் சாய்ந்து அவரிடம் கற்றுக்கொண்டவர்களின் நாட்கள் இளைப்பாறுதலில் கழியும். ஆனால் கற்றுக்கொள்ளாமல் முறுமுறுப்புக்கு இடங்கொடுத்து தன் வழியே செல்லுகிறவர்களின் நாட்கள் விருதாவாகவும், வருஷங்கள் பயங்கரங்களிலும் கழியும் என்று சங்கீதம் 78:33 சொல்லுகிறது.
இஸ்ரவேலருக்கு இருந்த பிரதான பிரச்சனை கர்த்தருடைய செய்கைகளை சீக்கிரமே மறந்துவிடுவது. கர்த்தர் செங்கடலைப் பிளந்து பேரதிசயத்தைக் காட்டிய மூன்றாம் நாளிலேயே தண்ணீர் இல்லை என்று முறுமுறுத்த ஜனங்கள் அவர்கள். எனவேதான் அவர் செய்த சகல உபகாரங்களையும் மறவாதே என்று நமது ஆத்துமாவுக்கு நினைப்பூட்டுவது அவசியமாயிருக்கிறது.
கர்த்தர் செய்த உபகாரங்களைக் கண்டு அவைகளுக்காக அவரைத் துதிக்கும் பழக்கம் இருக்கும்போது ஒரு நெருக்கடியான சூழல்வரும் சமயம் தீர்வுக்காக கர்த்தரிடம் செல்ல வேண்டும் என்ற ஒரு அறிவு இயல்பாகவே இருக்கும். ஆனால் ஆத்துமா அறிவில்லாதிருக்கும்போது நம் கால்கள் அவசரத்தில் துரிதமாக வழிதப்பி நடந்து, இடுக்கண்ணில் சிக்கி கடைசியில் நம் மனம் கர்த்தருக்கு விரோதமாக தாங்கலடையும் ஆபத்தில் போய் முடியும்!
எனவேதான் சங்கீதம் 107:43 சொல்லுகிறது “எவன் ஞானமுள்ளவனோ அவன் இவைகளைக் கவனிக்கக்கடவன்; ஞானவான்கள் கர்த்தருடைய கிருபைகளை உணர்ந்துகொள்வார்கள்”. இதை வேறுவிதமாகச் சொன்னால் நாம் கர்த்தரின் நடத்துதல்களைக் கூர்ந்து கவனித்தால் அவரது கிருபைகளை உணர்ந்துகொள்ளலாம். அவரோடு இணைந்து செல்லும்போது நாம் இளைப்பாறுதலில் மகிழ்வது உறுதி.
செய்தி: பாஸ்டர் சார்லஸ் ஃபின்னி அருமைநாயகம்
செய்தியின் காணொளி இணைப்பு: https://youtu.be/j95PVzUxeF0