அவர் சொன்னார், அவர் சொன்னபடியே ஆயிற்று, அது மிகவும் நன்றாயிருந்தது. இதைத்தான் ஆதியாகமம் கூறும் படைப்பின் வரலாற்றில் பார்க்கிறோம். அவர் இல்லாதவைகளை இருக்கிறவைகளைப் போல அழைக்கிறவர். அவர் அழைத்தவுடனே இல்லாமை நீங்கி இருத்தல் உண்டாயிற்று. அது எப்படி உண்டாயிற்று? அவர் தமது வார்த்தையைப் பயன்படுத்தி விசுவாசத்தைச் செயல்படுத்தினார். ஆம், வார்த்தையை வாய்க்கப்பண்ணும் வல்லமையே விசுவாசம்!.
சீஷன் தன் குருவுக்கு மேற்பட்டவனல்ல, தேறினவன் எவனும் தன் குருவைப்போலிருப்பான் என்று லூக்கா 6:40 சொல்லுகிறது. நம்முடைய குருவாகிய அவரிடத்தில் கற்றுக்கொண்டவைகளை நாமும் செயல்படுத்தி வெற்றிபெற அழைக்கப்பட்டிருக்கிறோம்.
ஜெபத்தில் இரண்டு பகுதிகள் உண்டு. முதலாவது நாம் அவரிடத்தில் சென்று நமது பிரச்சனைகளைச் சொல்ல வேண்டும். நமது மனதை அமிழ்த்தும் பாரங்களை அவரிடம் இறக்கி வைக்க வேண்டும். பின்னர் அவர் தமது வார்த்தையின் வாயிலாக நம்மிடம் சொல்லும் தீர்வை அந்தப் பிரச்சனையிடம் போய் தைரியமாக நின்று அறிக்கை செய்ய வேண்டும். நமது பிரச்சனையிடம் நாம் தேவனுடைய வார்த்தையைச் சொல்வதுதான் “கன்மலையை நோக்கிப் பேசுதல்” ஆகும். மாற்கு 11:13-24 வரை உள்ள பகுதியை வாசித்துப் பாருங்கள். இங்கு விசுவாச செயல்பாட்டு விதியை தேவன் நமக்குக் கற்றுத் தருகிறார்.
எவனாகிலும் இந்த மலையைப் பார்த்து: நீ பெயர்ந்து, சமுத்திரத்திலே தள்ளுண்டுபோ என்று சொல்லி, தான் சொன்னபடியே நடக்கும் என்று தன் இருதயத்தில் சந்தேகப்படாமல் விசுவாசித்தால், அவன் சொன்னபடியே ஆகும் என்று மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன். ஆதலால், நீங்கள் ஜெபம்பண்ணும்போது எவைகளைக் கேட்டுக்கொள்வீர்களோ, அவைகளைப் பெற்றுகொள்வோம் என்று விசுவாசியுங்கள், அப்பொழுது அவைகள் உங்களுக்கு உண்டாகும் என்று சொல்லுகிறேன். (மாற்கு 11:23,24)
நாம் தேவனிடத்தில் போய் ஒரு தேவைக்காக நிற்கும்போது அவர் நமது தேவையைக் குறித்த தமது தீர்வை ஓரு புதிய வெளிப்பாட்டின் மூலம் நமக்கு தெரியப்படுத்துகிறார் அல்லது ஏற்கனவே நமக்கு சொன்ன ஒன்றை நினைப்பூட்டுகிறார். அவர் சொல்லுவதை நாம் கேட்கும்போது நமக்கு விசுவாசம் வருகிறது, அவர் சொல்லுவதைக் கேட்டு நாம் அறிக்கை செய்யும்போது அந்த விசுவாசம் செயல்படுகிறது. ஆனால் இந்த இரண்டுக்கும் இடையே இன்னொரு முக்கியமான ஒன்று நடைபெற வேண்டும். அதுதான் அவர் சொன்னதைப் “புரிந்துகொள்ளுதல்” ஆகும். அவர் சொன்னதைப் புரிந்துகொள்ளாமல் நாம் அதைத் திரும்பத் திரும்ப அறிக்கையிடுவதால் எந்த பயனும் நேரிடாது. புரிந்துகொண்டு அறிக்கையிடும்போது அது செயல்படுவது மாத்திரமல்ல, அது செயல்படும் நேரம் வரை நமக்குப் பொறுமையும் உண்டாயிருக்கிறது.
சில நேரங்களில் நாம் ஜெபித்ததற்கு மாறாக சூழல்கள் மாறலாம். நமது விசுவாசித்ததற்கு முரணாக சம்பவங்கள் நடைபெறலாம். அந்த நேரங்களில் நாம் தளர்ந்துபோகாமல் திடநம்பிக்கையோடு நிலைத்திருக்க அந்தப் “புரிந்துகொள்ளுதல்” நமக்கு உதவுகிறது. எனவே நாம் தேவனிடத்தில் கேட்டதை புரிந்துகொண்டு பின்னர் அதை அறிக்கை செய்ய வேண்டும்.
நீங்கள் ஒரு அரசு அலுவலகத்துக்குச் செல்லுகிறீர்கள், அங்குள்ள ஒரு அலுவலர் உங்கள் பிரச்சனையைக் கவனிக்காமல் உங்களை அசட்டை செய்கிறார் என்று வைத்துக்கொள்ளுங்கள். அப்பொழுது நீங்கள் அவரைவிட உயரதிகாரியாகிய உங்கள் நண்பருடைய கவனத்துக்கு அதைக் கொண்டு செல்லுகிறீர்கள். உங்கள் நண்பர் சொல்லுகிறார், “அந்த நபரிடம் போய் என் பெயரைச் சொல்லி நான் சொன்னதாகச் சொல்” என்கிறார். நாம் அப்படியே செய்தவுடன் நமக்கான வேலை துரிதமாக முடிகிறது. இப்படித்தான் படைத்தவரின் பெயரைச் சொன்னவுடன் படைப்புகள் அத்தனையும் பணிந்தே தீரவேண்டும். அவருடைய வார்த்தையின் வல்லமை அதுதான். எனவே துளியும் ஐயமின்றி, மனத்தெளிவுடன் தேவனுடைய வார்த்தையை அறிக்கை செய்யுங்கள். ஜெபம் பண்ணும்போது விசுவாசியுங்கள். உங்கள் விசுவாசத்தின்படியே ஆகும்.
செய்தி: பாஸ்டர் சார்லஸ் ஃபின்னி அருமைநாயகம்
செய்தியின் காணொளி இணைப்பு: https://youtu.be/4-xc-cJdV8M