தேவபக்தி – தெய்வீக ஆசீர்வாதம் 3

Home » தேவபக்தி – தெய்வீக ஆசீர்வாதம் 3

தேவபக்தி – தெய்வீக ஆசீர்வாதம் 3

அன்றியும், அவருடைய தீர்மானத்தின்படி அழைக்கப்பட்டவர்களாய் தேவனிடத்தில் அன்புகூருகிறவர்களுக்குச் சகலமும் நன்மைக்கு ஏதுவாக நடக்கிறதென்று அறிந்திருக்கிறோம் என்று அப்போஸ்தலனாகிய பவுல் ரோமர் 8:28ல் சொல்லுகிறார். பல நேரங்களில் காரியங்கள் நமது கட்டுப்பாட்டில் இருப்பதில்லை. அதை நினைக்கும்போதும், எதிர்மறையான சூழல்களை சந்திக்கும்போதும் நமக்கு ஒரு சோர்வு ஏற்படுகிறது. ஆனால் நமது கைக்கு மிஞ்சினதெல்லாம் கர்த்தருடைய கைக்கு உட்பட்டதாகவே இருக்கிறது. அவர் அதை நன்மைக்கேதுவாகவே நடத்தித் தருவார் என்ற அறிவு நமக்கு இருக்கும்போது நமது மனதை ஒரு சமாதானம் ஆட்கொள்ளுகிறது.

நாம் போகும் வழியை அவர் அறிவார், நாம் அறியாவிட்டாலும் சகலமும் அவருக்கு முன்பாக வெளியரங்கமாக இருக்கிறது. எனவே நாம் அவரை விசுவாசிக்க வேண்டும். இங்கு வித்தியாசமான சூழல் ஒன்றை தியானிப்போம். கர்த்தருக்கு கீழ்ப்படிந்தால் இருளாயிருப்பதுகூட வெளிச்சமாகத்தானே மாற வேண்டும். ஆனால் யோசேப்பின் வாழ்க்கையில் பாருங்கள், அப்படியே தலைகீழாக நடந்தது. ஆனால் அவன் கர்த்தரை நம்பி அவரைச் சார்ந்துகொண்டான். உங்களில் எவன் கர்த்தருக்குப் பயந்து, அவருடைய தாசனின் சொல்லைக் கேட்டு, தனக்கு வெளிச்சமில்லாததினால் இருட்டிலே நடக்கிறானோ, அவன் கர்த்தருடைய நாமத்தை நம்பி, தன் தேவனைச் சார்ந்துகொள்ளக்கடவன் என்று ஏசாயா 50:10 சொல்லுகிறது.

தான் போகும் வழி தனக்குப் புரியாமல் இருந்தாலும் யோசேப்பு கர்த்தரைச் சார்ந்துகொண்டபடியால் ஒரு குறிப்பிட்ட நேரம் வந்தபொழுது தேவன் அவனது துக்கத்தையெல்லாம் மறக்கப்பண்ணினார் அதை நினைவுகூர்ந்துதான் அவன் தனது மூத்த மகனுக்கு மனாசே என்று பெயரிட்டான். அவன் சிறுமைப்பட்டிருந்த தேசத்தில் தேவன் அவனைப் பலுகப்பண்ணினார், அதை நினைவுகூர்ந்து அவன் தனது இளைய மகனுக்கு எப்பிராயீன் என்று பெயரிட்டான். அடிமையாய் இருந்த அவனை தேவன் பார்வோனுக்கு தகப்பனாகவும், தேசத்தின் அதிபதியாகவும் உயர்த்தினார். தீமையாகத் தொடங்கின அனைத்தையும் நன்மையாக முடியப்பண்ணினார்.

ஆகவே பிரியமானவர்களே, காரியங்கள் எதிராய் தோன்றும்போது, சுற்றிலும் இருளாக சூழும்போது உங்களை அழைத்த கர்த்தரை நம்பி அவரைச் சார்ந்துகொள்ளுங்கள். அவர் சகலத்தையும் நன்மையாக முடியப்பண்ணுவார். நிச்சயமாகவே முடிவு உண்டு உங்கள் நம்பிக்கை வீண்போகாது. (நீதிமொழிகள் 23:18) ஆமேன்!

செய்தி: பாஸ்டர் சார்லஸ் அருமைநாயகம்

செய்தியின் காணொளி இணைப்பு: https://youtu.be/y3z7kD3m2Xo

>