விசுவாசம் கேள்வியினாலே வருகிறது என்றும் கேள்வி தேவனுடைய வசனத்தினால் வருகிறதென்றும் நாம் அறிந்திருக்கிறோம். அந்த விசுவாசமானது அறிக்கையாக மாறி கடைசியில் கிரியையில் நிறைவுபெறுகிறது. நமக்குள் பக்திவிருத்தி ஏற்பட்டிருக்கிறது என்பதன் அடையாளம் இதுதான். வசனத்தை கருத்தாய் கேட்டு கேட்ட வசனத்துக்கு நம்மை ஒப்புக்கொடுத்தல் என்பது விருத்தியடைவதில் உள்ள ஒரு முக்கியமான படிநிலையாகும்.
இங்கே விசுவாசம் ஒரு மிக முக்கியப பங்கை வகிக்கிறது. சுவிசேஷம் அவர்களுக்கு அறிவிக்கப்பட்டதுபோல நமக்கும் அறிவிக்கப்பட்டது; கேட்டவர்கள் விசுவாசமில்லாமல் கேட்டபடியினால், அவர்கள் கேட்ட வசனம் அவர்களுக்குப் பிரயோஜனப்படவில்லை என்று எபிரேயர் 4:2 சொல்லுகிறது. இதிலிருந்து பக்திவிருத்தியடைதலில் விசுவாசத்தின் பங்கை நாம் அறியமுடிகிறது.
பக்திவிருத்தியடைதலில் தேவகிருபையின் பங்கும் சமஅளவு முக்கியமானது. வசனத்தைக் கேட்டுக்கொண்டிருந்தவர்களின் இருதயத்தைத் திறந்து கேட்ட வசனத்துக்கு தங்களை ஒப்புக்கொடுக்கவும், பரிசுத்த ஆவியினால் நிறையப்படவும் தேவன் அவர்களுக்கு தாமே இறங்கிவந்து உதவின கிருபையை நம்மால் அப்போஸ்தலர் நடபடிகளின் புத்தகத்தில் பல இடங்களில் வாசிக்கமுடியும்.
விதைக்கும் போது தண்ணீர் ஊற்றி செடியை வளர்த்தது மட்டுமல்லாமல் அது மரமாகி கனிதரத் தொடங்கியபோதும் அதே அக்கறையோடு மரத்துக்குத் தண்ணீர் ஊற்றி பராமரிக்கும் ஒரு நல்ல தோட்டக்காரரைப் போல தேவன் நமக்கு தமது கிருபையாகிய தண்ணீரை நமக்குத் தவறாமல் தந்து நம்மை வளர்த்தெடுக்கிறார்.
பக்திவிருத்தியடைதலில் நமது பங்கு நமது ஒப்புக்கொடுத்தலில்தான் இருக்கிறது. கீழ்ப்படிதலே பக்திவிருத்தியை உண்டாக்குகிறது, அதேபோல பக்திவிருத்தியடையும் போது நமது கீழ்ப்படிதலும் விருத்தியாகிறது. இதைக் குறிக்கும் விதத்தில்தான் உள்ளவனுக்கு கூடக் கொடுக்கப்படும் என்று நமது ஆண்டவர் சொல்லியிருக்கிறார்.
பக்திவிருத்தியின் இன்னொரு அடையாளம் நமக்குள் வளரும் வசனம் பலங்கொண்டு மேற்கொள்ளக்கூடியதாக இருக்கிறது. இவ்வளவு பலமாய்க் கர்த்தருடைய வசனம் விருத்தியடைந்து மேற்கொண்டது என்று அப்போஸ்தலர் 19:20 சொல்லுகிறது. நமக்கு முரணான புறச்சூழல்களையும், நமக்கு தடையாக நமக்குள்ளே உள்ள பயம், சந்தேகம், கவலை போன்ற உணர்வுகளையும் அது மேற்கொண்டு நாம் ஆவியில் வளர நமக்கு உதவி செய்கிறது.
நாம் பக்தனாகிய நெகெமியாவைப்போல வசனத்தை ஆராயவும், ஆராய்ந்தபின் அதன்படி செய்யவும், செய்தபின் அதை உபதேசம் பண்ணவும் கர்த்தரே நமக்கு அருள் செய்வாராக. நம்மிலே பக்தி விருத்தியடைவதாக, அறிவு பெருகுவதாக, அறிவு பெருகுவதற்கு ஏற்றதாக அர்ப்பணம் பெருகுவதாக, புரிந்துகொள்ளுவதற்கேற்ப கீழ்ப்படிதல் பெருகுவதாக, நம் வாழ்க்கை கனிநிறைந்த வாழ்க்கையாக மாறுவதாக!
செய்தி: பாஸ்டர் சார்லஸ் அருமைநாயகம்
செய்தியின் காணொளி இணைப்பு: https://youtu.be/2BYPFFTXoyc