வெறுமனே புலம்புவது மட்டும் ஜெபம் அல்ல, ஜெயதொனியோடு முழங்குவதும் ஜெபம்தான்…
ஒரு ஜெபம் எப்போது வெற்றி முழக்கமாகும் என்பதை அறிவோமா?
“நான் பெற்றுக்கொண்டாயிற்று” என்ற முழு நிச்சயதோடு இருக்கும்போது நமது ஜெபங்கள் வெற்றுப் புலம்பல்களாக இல்லாமல் வெற்றி முழக்கங்களாக மாறிவிடும். வேதத்தின் தேவனையும், தேவனுடைய வேதத்தையும் முழுமையாக புரிந்துகொள்ளப், புரிந்துகொள்ள விசுவாசத்தின் முழுநிச்சயம் நமக்குள் தானாய் ஊற்றெடுத்துப் பெருகிவிடும்.
ஆம், புரிந்து கொண்டவன்தான் விசுவாசிக்க முடியும், விசுவாசம் என்பது புரிந்து கொண்டதால் கண் திறக்கப்பட்டவர்களின் நம்பிக்கையேயொழிய, அது கண்மூடித்தனமான நம்பிக்கை அல்ல. அதனால்தான் அப்போஸ்தலனாகிய பவுல் சபைக்குப் பிரகாசமான மனக்கண்களைக் கொடுக்கும்படியாக எபேசியர் 1:17-19 ல் வசனங்களில் ஜெபிக்கிறார்.
இன்று அநேகருடைய வாழ்க்கையில் மாற்றம் இல்லை. ஏன் மாற்றமில்லையென்றால் அவர்கள் விசுவாசிக்கவில்லை! ஏன் விசுவாசிக்கவில்லையென்றால் ஒரு விசுவாசி எதைப் புரிந்துகொள்ள வேண்டுமோ அதை அவர்கள் புரிந்துகொள்ளவில்லை! என்பதுதான் நிதரிசனமான உண்மை.
தேவன் எப்படி நமது வாழ்வில் இடைப்பட்டு நமது வாழ்க்கையை மாற்றுகிறார் என்பதை நாம் புரிந்துகொண்டோமானால் அதுவே ஆசிர்வாதத்தின் துவக்கம். நம்மைக் குறித்து எப்போதும் சிறந்த திட்டத்தையே தேவன் வைத்திருக்கிறார், இதுவோ ஒரு மாறாத உண்மை! தேவன் சகலத்தையும் கிரமத்தோடும் ஒழுங்கோடும் செய்யக்கூடியவராகையால் அவர் சகலத்தையும் குறித்து ஒரு வடிவத்தை ஏற்கனவே தனது மனதில் வைத்திருக்கிறார். உங்கள் குடும்பத்தை, சபையை, தொழிலை, திறமைகளைக் குறித்து ஒரு வடிவம் தேவனிடம் ஏற்கனவே உண்டு.
தேவன் வைத்திருக்கும் அந்த நல்ல திட்டத்தின் வடிவம் அவரது வார்த்தையில் பொறிக்கப்பட்டிருக்கிறது. அந்த வார்த்தையைக் கேட்டு அதை விசுவாசிக்கும்போது தேவத்திட்டம் நமது வாழ்வில் நிறைவேறுவதற்கான திறவுகோல் நம் கைகளில் கிடைக்கிறது.
அந்தத் திறவுகோல்தான் என்ன?
“விசுவாசமுள்ள விண்ணப்பம்” என்பதுதான் அந்தத் திறவுகோல், அதாவது வாக்குத்ததங்களை விண்ணப்பங்களாக மாற்றும் ஜெபம்தான் நமக்கு அற்புதங்களைக் கொண்டுவரும் ஜெபம். நம்மைக் குறித்த நலமான திட்டம் தேவனுடைய வார்த்தைக்குள் (Promise) இருக்கிறது, அந்த வார்த்தையை கேட்கும்போது நமக்குள் விருப்பம் (Passion) உண்டாகிறது, தேவன் வைத்திருக்கும் வடிவமும் அதன் மேல் ஏற்படும் விருப்பமும் ஒன்றுக்கொன்று பின்னிப் பிணைந்தவை. அந்த விருப்பத்தின் விளைவாக விண்ணப்பம் (Prayer) வருகிறது, அந்த விண்ணப்பத்தின் விளைவாக நமது வாழ்வில் குறிக்கப்பட்ட அந்த தேவத்திட்டம் நம்மில் நிறைவேறுகிறது.
வார்த்தை கர்த்தருடையது, அந்த வார்த்தை மீது ஏற்படும் விருப்பம் அவர் தந்தது. அந்த விருப்பத்தோடு விண்ணப்பிக்க நமக்கு ஆவியானவர் துணைபுரிகிறார். ஏனெனில் தேவனே தம்முடைய தயவுள்ள சித்தத்தின்படி விருப்பத்தையும் செய்கையையும் உங்களில் உண்டாக்குகிறவராயிருக்கிறார் (பிலிப்பியர் 2:13) என்பதால், இறுதியில் நம்மில் விசுவாசத்தை துவக்கிய தேவன், அதை செயல்வடிவமாக்கி ஆசீர்வாதமாக பூரணமாக்கியும் வைக்கிறார்.
தேவனுடைய வாக்குத்தத்தத்தின் வடிவம் நமது வாழ்க்கையில் பிரதிபலிக்க வேண்டுமானால், அதை தேவன் தனது பாணியில் செய்துமுடிக்க நாம் நமக்கு நியமித்து வைத்திருக்கும் பாதை வழியாகத்தான் கடந்து செல்ல வேண்டும். அந்தப் பயணம் சற்று கடினமானதாக இருக்கலாம். நாம் கடந்து செல்லும் பாதை நமது விசுவாசத்துக்கு சவால்விடக் கூடியதாக இருக்கலாம். ஆனாலும் தேவனுடைய கைவண்ணம் நம் வாழ்க்கையின் மீது இருந்தால் முடிவு சம்பூரணமானதாகதான் இருக்கும்.
யோசேப்பு கடந்து சென்ற பாதை அதற்கு ஒரு நல்ல உதாரணமாக இருக்கிறது. யோசேப்புபின் அரிக்கட்டு நிமிர்ந்து நிற்க வேண்டும், மற்றவர்களது அரிக்கட்டுகள் யோசேப்பைப் பணிய வேண்டும் என்பதுதான் தேவனுடைய வடிவம். ஆனால் அதன்பின்னர் யோசேப்போ குழியில் வீசப்பட்டார், அடிமையாக விற்கப்பட்டார், சிறைவாசி ஆக்கப்பட்டார். இந்த சூழல்களில் யோசேப்பின் அரிக்கட்டு பணிந்ததாகவே காணப்பட்டது. ஆனால் தேவன் நியமித்த ஒருநாள் வந்தபோது தேவவார்த்தை யோசேப்பின் வாழ்வில் நிறைவேறியது. தேவனுடைய வடிவப்படி யோசேப்பின் அரிக்கட்டு நிமிர்ந்ததாகக் காணப்பட்டாலும் யோசேப்போ தனது உள்ளத்தில் பணிந்த ஆவி எனும் மேலான குணத்தைக் கொண்டிருந்தார். தேவன் தனது திட்டத்தை நமது வாழ்க்கையில் செயல்படுத்த நம்மை சில நேரங்களில் கடினமான பாதைகளின் வழியாக நடத்துவதன் நோக்கம் இதுதான்.
தேவன் நமக்கெனெ வைத்திருக்கும் திட்ட வடிவத்தின்மேல் நாம் கொள்ளும் தெய்வீக விருப்பம் மகிழ்ச்சிகரமான முயற்சிகளுக்கு நேராக நம்மை நடத்துகிறது. தேவன் எந்த நோக்கத்துக்காக நம்மை வடிவமைத்திருக்கிறாரோ அதைக் கண்டறிந்து, அதைச் செய்வோமானால் நம்மைவிட திருப்தியான நபர் உலகில் வேறு யாரும் இருக்க முடியாது.
ஒருவேளை திட்டத்தை சரியாக புரிந்திருந்தும் அதற்கென எடுக்கும் முயற்சிகள் மகிழ்ச்சியளிக்கவில்லையென்றால் திட்டத்தில் பிரச்சனை ஏதுமில்லை, நமது செயல்முறைகளை சற்று மாற்றிக்கொண்டால் அனைத்தும் சரியாகிவிடும்.
நம் தேவன் ஆலோசனையில் ஆச்சரியமானவர், அவர் சகலத்தையும் முன்யோசனையோடுதான் உருவாக்கி வைத்திருக்கிறார். எனவே உங்கள் நம்பிக்கையை அவர்மீது முழுவதுமாக வைத்து அவரது வழிகளைச் சார்ந்துகொள்ளும்போது உங்கள் வாழ்க்கைப் பயணம் இன்பகரமானதாக அமையும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.
போதகர் சார்லஸ் ஃபின்னி அருமைநாயகம்
செய்தியின் காணொளி இணைப்பு: https://youtu.be/poCBw7rhGLQ