நித்திய பிதா

Home » நித்திய பிதா

நித்திய பிதா

தேவரீர் சகலத்தையும் செய்ய வல்லவர்; நீர் செய்ய நினைத்தது தடைபடாது என்பதை அறிந்திருக்கிறேன். (யோபு 42:2) இந்த வார்த்தைகளை யோபு தனது பிரச்சனைகள் மாறி இரண்டத்தனையான ஆசீர்வாதங்களைப் பெற்றுக்கொண்ட பின் சொன்னாரா? அல்லது இன்னும் ஓட்டை வைத்து தன்னைச் சுரண்டிக்கொண்டு சாம்பலில் உட்கார்ந்திருந்தபோது சொன்னாரா? பிரச்சனைகள் எல்லாம் மாறியபின்பு அல்ல, மாறும் முன்னரே, இன்னலின் ஆழத்தில் உழன்று கொண்டிருந்தபோதுதான் மேற்கண்ட விசுவாச அறிக்கையைச சொன்னார்

தேவரீர் சகலத்தையும் செய்ய வல்லவர்; நீர் செய்ய நினைத்தது தடைபடாது என்பதை அறிந்திருக்கிறேன் என்பதில் இந்த “அறிந்திருக்கிறேன்” என்ற வார்த்தைதான் நாம் முக்கியமாக கவனிக்க வேண்டியது. சத்தியத்தையும் “அறிவீர்கள்” நீங்கள் “அறிந்த” அந்த சத்தியம் உங்களை விடுதலையாக்கும். (யோவான் 8:32)

நாம் எதை அறிந்திருக்கிறோமோ அதுதான் நமக்கு விடுதலை கொடுக்கக்கூடியதாக இருக்கிறது. இந்த “அறிதல்” தான் நமது வாழ்க்கையில் அனுபவத்தைக் கொடுக்கக்கூடிய காரணியாக இருக்கிறது. நீங்கள் புரிந்துகொண்டதைத்தான் உங்கள் வாழ்க்கையில் செயல்படுத்த முடியும். எனவேதான், என்னத்தைச் சம்பாதித்தாலும் புத்தியை – அதாவது- புரிதலைச் சம்பாதித்துக்கொள் என்று சாலமோன் ஞானி நமக்கு அறிவுரையாகச் சொல்கிறார்.

நாம் முதலில் வேதவார்த்தையைக் கேட்க வேண்டும், கேட்டதைப் புரிந்துகொள்ள வேண்டும், புரிந்துகொண்டதை விசுவாசிக்க வேண்டும், அந்த விசுவாசத்தை அறிக்கை செய்ய வேண்டும் அப்போது நாம் எதைக் கேட்டோமோ, எதை விசுவாசித்தோமோ அது செயலாக்கம் பெறும். பக்தனாகிய யோபு தேவனைப் புரிந்துகொண்டபடியினால்தான் அவரால் தனது சூழ்நிலை மாறும் முன்னரே இவ்விதமாய் விசுவச அறிக்கை செய்ய முடிந்தது.

யோபுவின் அறிக்கையானது தேவன் வல்லமையுள்ளவர், தனக்கு நன்மை செய்யும் நோக்கமுள்ளவர், அந்த நோக்கத்தைச் செய்துமுடிக்கும் ஆளுமையுள்ளவர் என்ற மூன்று நம்பிக்கைகளை உள்ளடக்கியதாக இருந்தது. எபிரேயர் 10:23- இல் சொல்லப்பட்டதுபோல வாக்குப்பண்ணின தேவன் உண்மையுள்ளவர் என்று அறிந்தபடியால் யோபு தனது நம்பிக்கையை அறிக்கையிடுகிறதில் அசைவில்லாமல் உறுதியாய் இருந்தார்.

நாம் அறிக்கையில் உறுதியாக இருக்க வேண்டும், தேவனோ அதை நிறைவேற்றுவதில் உண்மையுள்ளவராக இருக்கிறார். நம்முடைய அறிக்கைக்கு அவரைக் குறித்த அறிவுதான் அஸ்திபாரமாக இருக்கிறது.

தேவனைக் குறித்த நமது புரிதல் எப்படிப்பட்டதாக இருக்கிறது? அவர் சர்வவல்லமையுள்ளவர் என்று நாம் யாவரும் அறிந்திருக்கிறோம். வெறுமனே அவர் வல்லமையுள்ளவர் என்பதை மாத்திரம் அறிந்திருப்பது நமது வாழ்வில் எந்த மாற்றத்தையும் கொண்டுவராது. ஏனெனில் கடவுள் என்பவர் சர்வவல்லவர் என்ற பொதுஅறிவு உலகத்தில் உள்ள எல்லோருக்கும் இருக்கிறது.

ஆனால், அந்தச் சர்வவல்லமையுள்ள தேவன் என்மீது கிருபையாகவும் இருக்கிறார் என்ற அறிவுதான் அவரது சர்வவல்லமையை நமது வாழ்வில் விளங்கச் செய்யும் திறவுகோலாக இருக்கிறது.

ஆ, கர்த்தராகிய ஆண்டவரே, இதோ, தேவரீர் உம்முடைய மகாபலத்தினாலும், நீட்டப்பட்ட உம்முடைய புயத்தினாலும், வானத்தையும் பூமியையும் உண்டாக்கினீர்; உம்மாலே செய்யக்கூடாத அதிசயமான காரியம் ஒன்றுமில்லை. ஆயிரம் தலைமுறைகளுக்கும் கிருபை செய்கிறவரும்… (எரேமியா 32:17-19)

ஆம், அவர் சர்வவல்லவர் மட்டுமல்ல. அவர் கிருபையில் ஐசுவரியமுள்ளவர், நம்மை நேசிக்கிற நல்ல தேவன் என்கிற அறிவு வேண்டும். தீர்க்கதரிசியாகிய ஏசாயா இன்னும் ஒருபடி மேலே போய்:

நமக்கு ஒரு பாலகன் பிறந்தார்; நமக்கு ஒரு குமாரன் கொடுக்கப்பட்டார்; கர்த்தத்துவம் அவர் தோளின்மேலிருக்கும்; அவர் நாமம் அதிசயமானவர், ஆலோசனைக்கர்த்தா, வல்லமையுள்ள தேவன், நித்திய பிதா, சமாதானப்பிரபு என்னப்படும் (ஏசாயா 9:6) என்று முழங்குகிறார்.

அவர் வல்லமையுள்ள தேவன் மட்டுமல்ல, கர்த்தத்துவத்தை தோளில் சுமந்த ஏக சக்ராதிபதி மட்டுமல்ல, அவர் நமக்கு “நித்திய பிதா” என்று அவரை நமக்கு அறிமுகம் செய்கிறார்.

இவ்வுலகப்பிரகாரமான பிதாக்கள்கூட நம்மைக் கைவிடக்கூடும், இவரோ நித்தியப்பிதாவாக இருக்கிறார். நம்மை ஒருபோதும் கைவிடாதவர்.

கர்த்தராகிய இயேசுவுக்கு வானத்திலும் பூமியிலும் சகல அதிகாரங்களும் இருக்கிறது. அந்த அதிகாரத்தை அவர் நமது நன்மைக்காக செயல்படுத்த விருப்பமுள்ளவராக இருக்கிறார். அவர் நமது கண்ணீரைக் காண்கிறவர் மட்டுமல்ல, நம்மீது உள்ள அன்பினால் நம்மோடு சேர்ந்து கண்ணீர் சிந்துகிறவர் மட்டுமல்ல, நமது கண்ணீரைக் களிப்பாக மாற்றவும் வல்லவர் என்பதை விசுவாசித்து அதை அறிக்கை செய்வோமாக! அப்போது நம் வாழ்க்கை தலைகீழாக மாறும். திறக்காதிருந்த கதவுகள் திறக்கும், வனாந்திரம் வயல்வெளியாகும். காரிருள் பேரொளியாக விடியும். ஆமென்!

செய்தி: பாஸ்டர் சார்லஸ் ஃபின்னி அருமைநாயகம்

செய்தியின் காணொளி இணைப்பு: https://youtu.be/nebqiKqzz08

>