பரிசுத்த ஆவிக்குள் ஜெபம் பண்ணி-1

Home » பரிசுத்த ஆவிக்குள் ஜெபம் பண்ணி-1

பரிசுத்த ஆவிக்குள் ஜெபம் பண்ணி-1

கர்த்தருடைய வார்த்தையானது நமக்குள் விசுவாசத்தை உருவாக்குகிறது, அந்த விசுவாசம் சரியான விதத்தில் தேவ சித்தத்தின்படி நாம் விண்ணப்பிக்க உதவுகிறது, அந்த விண்ணப்பம் நமது வாழ்க்கை முறையை பரிபூரண ஆசீர்வாதமுடையதாக மாற்றுகிறது.

இந்த சக்கரம் உங்கள் வாழ்வில் சுழல வேண்டுமானால் அதன் அச்சாணியாகிய வார்த்தையை நீங்கள் முதலாவதாக உட்கொள்ள வேண்டும். நாம் எதைச் செய்தாலும் அதைச் செய்ய வேண்டிய பிரகாரமாகச் செய்வதற்கு கிறிஸ்துவின் வசனம் நமது இருதயங்களில் சம்பூரணமாக சகல ஞானத்தோடும் வாசம் செய்ய வேண்டும். அதன் மூலம்தான் நாம் கனி நிறைந்த வாழ்க்கை வாழ முடியும். நாம் கனி நிறைந்த வாழ்க்கை வாழ அவர் நமக்கு விதை(வசனம்) நிறைந்த இருதயத்தைத் தருகிறார்.

நம்முடைய தேவன் குழப்பத்தின் தேவனாக இராமல் தெளிவின் தேவனாக இருக்கிறார். ஒரு மருந்துக் கடை முழுவதும் சுகமளிக்கும் மருந்துகளால் நிறைந்திருந்தாலும் ஒரு நோயாளிக்கு எந்த நேரத்தில் எந்த மருந்து வேண்டுமோ அந்த நேரத்தில் அந்த மருந்தை எழுதித்தரும் மருத்துவர் ஒருவர் வேண்டும். அதேபோல வேதம் முழுவதும் தீர்வுகளால் நிறைந்திருந்தாலும் நமக்கான வசனத்தை நமக்குச் சுட்டிக்காட்டி அதை செயல்படுத்த உதவி செய்யும் ஆவியானவரின் ஒத்தாசை நமக்கு வேண்டும்.

ஆவியானவர் வசனமின்றி செயல்பட மாட்டார். அதேபோல ஆவியானவர் இல்லாமல் நமக்கு வசனத்திலிருந்து வெளிச்சமும் கிடைக்காது. எனவே ஆவியானவரையும் வசனத்தையும் பிரிக்க முடியாது. வார்த்தையினால் நிரப்பபடுவதே ஆவியால் நிரப்பப்படுவது, ஆவியினால் நடத்தப்படுவதென்பது வார்த்தையினால் நடத்தப்படுவதேயாகும். ஆவியானவரே நமக்கு வசனத்தைக் குறித்த அறிவு, விவேகம், ஞானம் இவற்றைத் தந்து நம்மை வழிநடத்துகிறவர்.

சரி, அறிவு, புரிதல், ஞானம் இவைகள் மூன்றுக்கும் என்ன வித்தியாசம்?

நான் ஒரு 500 ரூபாய் நோட்டை உங்களுக்குக் காட்டி இது என்ன என்று கேட்டால் நீங்கள் இது ஒரு 500 ரூபாய் நோட்டு என்று சொல்லுகிறீர்கள், இது அறிவு. இதை எதற்குப் பயன்படுத்துவது என்று கேட்டால் இதைக் கொண்டு பொருட்கள் வாங்க முடியும் என்று நீங்கள் சொன்னால் அது புரிதல். அதாவது அந்த 500 ரூபாய் எதற்குப் பயன்படுகிறது என்பதை நீங்கள் புரிந்து வைத்திருக்கிறீர்கள். நான் மறுபடியும் உங்களை ஒரு கேள்வி கேட்கிறேன். இந்த 500 ரூபாயை வைத்து நீங்கள் என்ன செய்யப் போகிறீர்கள். இந்தக் கேள்விக்கு உங்களிடம் குழப்பமில்லாத, தெளிவான பதில் இருக்குமானால் அதுதான் ஞானம்.

அதே போலத்தான் வேதத்தை கர்த்தருடைய வார்த்தை என்று அறிந்திருக்கிறீர்கள், அது நமக்கு ஆசீர்வாதத்தைக் கொண்டுவரும் என்று புரிந்தும் வைத்திருக்கிறீர்கள். ஆனால் எப்படி உங்களுடைய வாழ்வில் அப்பியாசப் படுத்துவது என்று நீங்கள் அறிந்திருப்பீர்களானால் அதுதான் ஞானம். அந்த ஞானத்தை நமக்குத் தருகிறவர் ஆவியானவர்.

அவர் வசனத்தைக் கொண்டு நம்மை தெய்வீக திசைக்கு நேராக நடத்துவார், குழப்பமான நேரங்களில் வசனத்திலிருந்து நமக்குத் தேவையான காரியங்களை வெளிப்படுத்துவார், அதை இரண்டு மூன்று சாட்சிகளாலே உறுதிப்படுத்துவார். இங்கு சாட்சிகள் என்பது நபர்களையல்ல, ஒரு வசனத்தை உறுதிப்படுத்தும் மேலும் இரண்டு வசனங்களைக் குறிக்கிறது, அதுமட்டுமன்றி ஆவியானவர் வேதத்திலிருந்து அவர் நம்முடைய சூழ்நிலைக்கேற்ற வசனங்களை நினைப்பூட்டுவார். அதன் மூலம் நாம் ஞானமுள்ளவர்களாக இந்த பூமியில் நடந்து கொள்ள முடியும்.

இப்படியாக வசனத்தின் நிறைவையும், ஆவியின் நிறைவையும் கொண்டு தேவனுடைய ஆசீர்வாதத்தின் நிறைவுக்கு நேராக நடத்தி நாம் நாடின துறைமுகத்தில் நம்மைக் கொண்டுவந்து சேர்க்கிறார். அவருக்கே மகிமையுண்டாவதாக!

செய்தி: பாஸ்டர் சார்லஸ் ஃபின்னி அருமைநாயகம்

செய்தியின் காணொளி இணைப்பு: https://youtu.be/YtZjJxqJQPY

>