பரிசுத்த ஆவிக்குள் ஜெபம் பண்ணி – பாகம் 3

Home » பரிசுத்த ஆவிக்குள் ஜெபம் பண்ணி – பாகம் 3

பரிசுத்த ஆவிக்குள் ஜெபம் பண்ணி – பாகம் 3

கையில் வெண்ணையை வைத்துக் கொண்டு நெய்க்கு அலைந்த கதையாக என்று தமிழ்நாட்டில் ஒரு பழமொழி இருக்கிறது. அதாவது ஒரு பொருளை உருவாக்கும் முறைமை தெரியாதவர்கள் அந்தப் பொருளுக்காக அலைந்து திரிய வேண்டியிருக்கும் என்பதுதான் இதன் கருத்து.

ஆசீர்வாதங்களும், அற்புதங்களும் நமக்கு வரும் முறைமையை அறியாதபோது இங்கும் அங்கும் தேடி அலைய வேண்டிய பரிதாப நிலைக்கு உள்ளாகிறோம். நமக்கு கிடைக்க வேண்டிய அத்தனை ஆசீர்வாதங்களும் நமக்கு கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவால் சிலுவையில் ஏற்கனவே சுதந்தரிக்கப்பட்டு விட்டது. அந்த ஒட்டுமொத்த ஆசீர்வாதங்களும் இரட்சிப்பின் வழியாக நமக்கு உரிமையாக்கப்பட்டு இருக்கிறது. இரட்சிப்பின் வழியாக நமக்கு உரிமையாக உள்ள அந்த ஆசீர்வாதங்களை வார்த்தையின் மீது உள்ள விசுவாசத்தினால் நாம் சுதந்தரித்துக் கொள்கிறோம்.

இரட்சிப்பினால் கிடைத்த அந்த “ஒட்டுமொத்த ஆசீர்வாதம்” என்ற சுதந்திரத்தை நம்முடைய வாழ்வில் கொண்டுவந்து சேர்க்கும் “ஆவி” (1 பேதுரு 1:23), “வார்த்தை” (தீத்து 3:5) என்ற இரு முக்கியக் காரணிகளை நாம் வேதத்தில் கண்டுக்கொள்ள முடியும். வேறுவழியாக இதை விவரிக்க முயன்றால் நமக்கு ஆசீர்வாதம் கிறிஸ்து இயேசுவின் மூலமாக வருகிறது. அந்த ஆசீர்வாதங்களுக்கு அச்சாரமாக உள்ள வாக்குத்தத்தங்களை செயல்படுத்த ஆவியானவர் நமக்குள் இருந்து வசனத்தின் மூலம் நம்மை வழிநடத்துகிறார்.

சரி, ஆவியானவரும் வேண்டும் வார்த்தையும் வேண்டும். இங்கே ஜெபத்துக்கான வேலை என்ன என்று கேட்போமானால், நாம் வார்த்தையில் உறுதிப்பட்டவர்களாக பரிசுத்த ஆவிக்குள் ஜெபம் பண்ணும்போது அந்த வார்த்தை நமது வாழ்வில் செயலாக்கம் பெறுகிறது.

இங்கே இன்னொரு முக்கிய காரியத்தையும் நாம் கவனிக்க வேண்டும். கிறிஸ்துவின் மூலம் வரும் ஆசீர்வாதங்களை நாம் வார்த்தையின் மேலுள்ள விசுவாசத்தினால் பரிசுத்த ஆவிக்குள் விண்ணப்பம் பண்ணி பெற்றுக்கொள்ள முடியும். ஆனால் அந்த ஆசீர்வாதம் நம்மிடத்தில் வந்து சேர விடாமல் தடைசெய்யவோ, தாமதிக்கவோ செய்யும் சக்தி ஒன்று இவ்வுலகில் செயல்பட்டுக்கொண்டிருக்கிறது என்பதை பவுல் எபேசியருக்கு எழுதின நிருபம் 6-ஆம் அதிகாரத்தில் வாசிக்கலாம்.

நம்முடைய சத்துருவாகிய பிசாசானவன் தனது தந்திரங்கள் மூலமாகவும், நமக்கு கொண்டுவரும் போராட்டங்கள் மூலமாகவும், தீங்கு நாட்களை நமக்கு கொண்டு வருவதன் மூலமாகவும் ஒரு மும்முனைத் தாக்குதலை நம்மீது தொடுக்கிறான். ஆனால் இந்த மும்முனைத் தாக்குதலையும் நாம் தேவன் அருளின ஆவியின் மூலமாகவும் வார்த்தையின் மூலமாகவும்தான் ஜெயிக்கிறோம்.

பிசாசானவன் நம்மை எந்தக் கோணத்தில் தாக்கினாலும் அவனது அக்கினியாஸ்திரங்களையெல்லாம் அவித்துப்போடத்தக்க விசுவாசமாகிய கேடகத்தையும், ஆவியின் பட்டையமாகிய வசனத்தையும் நமக்குத் தந்து ஆவியானவர் நமது சார்பில் யுத்தம் செய்வதால் வெற்றி நமக்கே முன்குறிக்கப்பட்டிருக்கிறது.

எனவே வார்த்தையில் நம்மை ஸ்திரப்படுத்திக்கொண்டு, அது தரும் விசுவாச அறிக்கையைக் கொண்டு நாம் பரிசுத்த ஆவியில் ஜெபம் பண்ணுவோமாக! பரிசுத்த ஆவிக்குள் ஜெபிப்பது என்றால் வார்த்தையைக் கொண்டு ஜெபிப்பது என்பதுதான் அர்த்தம். கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக!

செய்தி: பாஸ்டர் சார்லஸ் ஃபின்னி அருமைநாயகம்

செய்தியின் காணொளி இணைப்பு: https://youtu.be/kn8-pOtxgM0

>