பரிசுத்த ஆவிக்குள் ஜெபம் பண்ணி – பாகம் 4 (ஆவியின் பட்டயம்)

Home » பரிசுத்த ஆவிக்குள் ஜெபம் பண்ணி – பாகம் 4 (ஆவியின் பட்டயம்)

பரிசுத்த ஆவிக்குள் ஜெபம் பண்ணி – பாகம் 4 (ஆவியின் பட்டயம்)

உனக்கு விரோதமாய் உருவாக்கப்படும் எந்த ஆயுதமும் வாய்க்காதேபோம்; உனக்கு விரோதமாய் நியாயத்தில் எழும்பும் எந்த நாவையும் நீ குற்றப்படுத்துவாய்; இது கர்த்தருடைய ஊழியக்காரரின் சுதந்தரமும் என்னால் உண்டான அவர்களுடைய நீதியுமாய் இருக்கிறது என்று கர்த்தர் சொல்லுகிறார் என்று ஏசாயா 54:17- ஆம் வசனம் சொல்லுகிறது.

நமக்கு விரோதமாக பிசாசானவன் உருவாக்கும் ஆயுதங்கள் அவனுடைய வார்த்தைகள்தான். அவனது வார்த்தைகள் எங்கேயோ அங்கே சந்தேகமும், இருமனமும், பிரிவினையும் காணப்படுகிறது. நம்முடைய சத்துரு நமக்கு சோர்வை உண்டுபண்ணி நாம் சோர்ந்திருக்கும் நேரத்தில் நமது மனதுக்குள் சந்தேகத்தைக் கிளப்புகிறான்.

பிசாசு நமது இருதயத்துக்குள் தனது வார்த்தைகளைப் போட்டு அதன்மூலம் நம்மை சந்தேகத்துக்குள்ளும் அவிசுவாசத்துக்குள்ளும் நடத்துவது மட்டுமல்ல, அவன் பிற மனிதர்களின் வார்த்தைகள் வழியாகவும் நம்மைத் தாக்குகிறான். நீதிமொழிகள் 12:18 பட்டயக் குத்துக்கள் போல காயப்படுத்தும் பேச்சுக்களை பேசும் மனிதர்களைப் பற்றி குறிப்பிடுகிறது. சங்கீதம் 55:21 இன்னொரு தரப்பு மனிதர்களை நமக்கு அடையாளம் காட்டுகிறது. அவர்கள் வார்த்தைகள் இனிமையாகவும் மிருதுவாகவும் இருக்கும் ஆனால் அதற்குள் உருவின பட்டயம் போல வன்மம் இருக்கும். அதாவது விஷத்துக்கு இனிப்புப் பூச்சு பூசி கொடுப்பது போல. சங்கீதம் 64:4 கசப்பான வார்த்தைகளைப் பேசும் மனிதர்களைப் பற்றிப் பேசுகிறது. இப்படி பலதரப்பட்ட மனிதர்களை நாம் அனுதினமும் கடந்துவர வேண்டியது இருக்கிறது. நமக்கு விரோதமாக அவர்களுடைய வார்த்தைகளாகிய ஆயுதங்கள் எதுவும் வாய்க்காது என்றும், நமக்கு விரோதமாக நியாயத்தில் எழும்பும் எந்த நாவையும் நாம் குற்றப்படுத்துவோம் என்றும் தேவனுடைய வாக்குத்தத்தம் கூறுகிறது.

நமக்கு விரோதமாக பிசாசு உருவாக்கும் ஆயுதங்களையும், நமக்கு விரோதமாக நியாயத்தில் எழும்பும் நாவுகளையும் நாம் எப்படி மேற்கொள்வோம் என்றால் தேவனுடைய வார்த்தையாகிய ஆவியின் பட்டயத்தைக் கொண்டுதான் அவைகளை நாம் மேற்கொள்வோம். ஏனெனில் கர்த்தருடைய பட்டயமாகிய வசனம் எந்த பட்டையத்தையும் விடக் கூர்மையானது. அது எந்த ஆயுதத்தையும் மேற்கொள்ளும் உச்சபட்ச வல்லமையும், அதிகாரமுமுள்ள ஆயுதம் ஆகும்.

எங்களுடைய போராயுதங்கள் மாம்சத்துக்கேற்றவைகளாயிராமல், அரண்களை நிர்மூலமாக்குகிறதற்கு தேவபலமுள்ளவைகளாய் இருக்கிறது என்று 2 கொரிந்தியர் 10:4 சொல்லுகிறது. பிசாசு உண்டாக்கியிருக்கும் அரண்கள் நமது சிந்தையில் அவனது பொய்களினால் கட்டப்பட்ட அரண்கள் ஆகும். அந்த அரண்கள் நம்முடைய வாழ்வை கனியற்றதாக்கி, நமக்கான ஆசீர்வாதங்களை நாம் பெற்றுக்கொள்ளக்கூடாதபடி அது தடைகளை ஏற்படுத்தக்கூடியதாக இருக்கிறது. நம்முடைய சத்துரு ஒரு பொய்யை திரும்பத் திரும்பச் சொல்வதன் மூலம் அதை உண்மையென நம்பவைத்து அதை நமது மனதில் ஒரு அரணாக எழுப்பிவிடுகிறான். அந்த அரண்களை உடைத்து நொறுக்கும் சர்வ வல்லமை பொருந்தியதாக் தேவனுடைய வார்த்தை இருக்கிறது. நாம் தேவனுடைய வார்த்தையை இருதயத்தில் விசுவாசித்து நாவினால் அறிக்கை பண்ணுவதன் மூலம் அந்த அரண்களைத் தவிடுபொடியாக்குகிறோம்.

தேவனுடைய வார்த்தையானது நமக்கு அதிகாரத்தைத் தருவதாகவும் இருக்கிறது. பரலோகராஜ்யத்தின் திறவுகோல்களை நான் உனக்குத் தருவேன்; பூலோகத்திலே நீ கட்டுகிறது எதுவோ அது பரலோகத்திலும் கட்டப்பட்டிருக்கும், பூலோகத்திலே நீ கட்டவிழ்ப்பது எதுவோ அது பரலோகத்திலும் கட்டவிழ்க்கப்பட்டிருக்கும் என்று மத்தேயு 16:19- இல் கர்த்தராகிய இயேசுகிறிஸ்து வாக்குப் பண்ணியிருக்கிறார். ஆம், தேவனுடைய வார்த்தையைப் பயன்படுத்தி பரலோகம் எதை அனுமதித்திருக்கிறதோ அதை பூமியில் அனுமதிக்கவும், பரலோகம் எதற்கு அனுமதி மறுத்திருக்கிறதோ அதற்கு பூமியில் அனுமதி மறுக்கவும் நமக்கு அதிகாரம் கொடுக்கப்பட்டிருக்கிறது.

இப்படிப்பட்ட சர்வ வல்லமையும் அதிகாரமுமுள்ள தேவ வார்த்தை நமக்கு ஆயுதமாகக் கொடுக்கப்பட்டிருக்கிறபடியால் நீதியினால் ஸ்திரப்பட்டிருப்போம், கொடுமைக்குத் தூரமாவோம், பயமில்லாதிருப்போம், திகிலுக்குத் தூரமாவோம், அது நம்மை அணுகுவதில்லை. (ஏசாயா 54:14)

செய்தி: பாஸ்டர் சார்லஸ் ஃபின்னி அருமைநாயகம்

செய்தியின் காணொளி இணைப்பு: https://youtu.be/vMusXhoA0x4

>