மனிதனுடைய இருதயத்துக்குள் இயல்பாகவே கீழ்ப்படியாமை எனும் பாவம் ஒட்டிக் கொண்டிருக்கிறது. அதனால்தான் அப்போஸ்தலனாகிய பவுல் “நன்மை செய்ய வேண்டும் என்கிற விருப்பம் என்னிடத்திலிருக்கிறது, நன்மைசெய்வதோ என்னிடத்திலில்லை. ஆதலால் நான் விரும்புகிற நன்மையைச் செய்யாமல், விரும்பாத தீமையையே செய்கிறேன் (ரோமர் 7:18,19) என்று சொல்லுகிறார். தனக்குள் கிரியை செய்யும் கீழ்ப்படியாமை எனும் ஜென்ம சுபாவத்தின் பயங்கர வல்லமையை உணர்ந்தவராக “நிர்ப்பந்தமான மனுஷன் நான்! இந்த மரணசரீரத்தினின்று யார் என்னை விடுதலையாக்குவார்?” என்று சொல்லுவதைக் பார்க்கிறோம்.
இந்த மரண சரீரத்திலிருந்து எது என்னை விடுதலையாக்கும் என்று சொல்லாமல் யார் என்னை விடுதலையாக்குவார் என்று சொல்வதைக் கவனியுங்கள். அந்த விடுதலையை கர்த்தராகிய இயேசு கிறிஸ்துதான் நமக்கு தரமுடியும் என்ற சத்தியத்தை உணர்ந்தவராக அடுத்த அதிகாரமாகிய ரோமர் 8:2- இல் “கிறிஸ்து இயேசுவினாலே ஜீவனுடைய ஆவியின் பிரமாணம் என்னைப் பாவம் மரணம் என்பவைகளின் பிரமாணத்தினின்று விடுதலையாக்கிற்றே” என்று வெற்றி முழக்கமிடுகிறார்.
நீ நன்மைசெய்தால் மேன்மை இல்லையோ? என்று கர்த்தர் காயீனை நோக்கி ஆதியாகமம் 4:7- இல் சொல்வதைக் காண்கிறோம். நன்மை செய்தால் மேன்மை, பாவம் செய்தால் சாபம் என்பது எல்லா மனிதர்களுக்கும் தெரிந்தாலும் பாவம் செய்யாமல் இருக்க பெலன் இல்லை என்பதே இங்கு பிரச்சனையாக இருக்கிறது. ஆனாலும் இந்தப் பிரச்சனை கல்வாரி பர்வதத்தில் கர்த்தராகிய இயேசுவின் சிலுவை மரணத்தினால் தீர்க்கப்பட்டிருக்கிறது. அது எப்படித் தீர்க்கப்பட்டது என்பதைத்தான் இந்தச் செய்தியில் ஆராயவிருக்கிறோம்.
கீழ்ப்படியாமை சாபத்துக்கு நேராக நடத்துமானால் கீழ்ப்படிதல் ஆசீர்வாதத்துக்கு நேராக நடத்துகிறது. ஆனால் நமக்கு கீழ்ப்படிய பெலன் தேவை. அவரால் அன்றி ஒன்றையும் செய்ய நம்மால் முடியாது. நமது கீழ்ப்படியாமையின் விளைவுகளையெல்லாம் அவர் ஏற்றுக்கொண்டு, அவர் சிலுவையில் கீழ்ப்படிந்ததன் விளைவுகளை நமக்கு கொடுக்கிறவராய் இருக்கிறார். ஒரு மனிதன் இரட்சிக்கப்பட்டு, ஞானஸ்நானம் பெற்ற பின்னரும் பாவம் செய்ய முடியும் என்பது நிதர்சனம் என்றாலும் பாவம் செய்யாமல் இருக்கும் பெலனை கர்த்தராகிய இயேசு நமக்கு அருளுகிறவராக இருக்கிறார்.
அந்த பெலன் நமக்கு எப்படி வருகிறது என்றால் “பரிசுத்தஆவி உங்களிடத்தில் வரும்போது நீங்கள் பெலனடைந்து, எருசலேமிலும், யூதேயா முழுவதிலும், சமாரியாவிலும், பூமியின் கடைசிபரியந்தமும், எனக்குச் சாட்சிகளாயிருப்பீர்கள் (அப்போஸ்தலர் 1:8) என்று வேத வசனம் சொல்லுகிறபடி நமக்கு அருளப்பட்ட பரிசுத்த ஆவியானவர் மூலம் நமக்கு அந்த பெலன் வருகிறது. அந்த பெலனை நாம் விசுவாசத்தின் மூலம் பெற்றுக்கொள்கிறோம்.
நாம் பாவம் செய்யாமல் தேவனுக்குக் கீழ்ப்படிந்தவர்களாக வாழ நமக்கு பரிசுத்த ஆவியானவர் தரும் பெலனை நாம் விசுவாசத்தின் மூலம் பெற்றுக்கொள்கிறோம் என்ற சத்தியத்துக்கு ஆதாரமாக கீழ்க்கண்ட வசனம் இருக்கிறது:
மரத்திலே தூக்கப்பட்ட எவனும் சபிக்கப்பட்டவன் என்று எழுதியிருக்கிறபடி, கிறிஸ்து நமக்காகச் சாபமாகி, நியாயப்பிரமாணத்தின் சாபத்திற்கு நம்மை நீங்கலாக்கி மீட்டுக்கொண்டார். ஆபிரகாமுக்கு உண்டான ஆசீர்வாதம் கிறிஸ்து இயேசுவினால் புறஜாதிகளுக்கு வரும்படியாகவும், ஆவியைக்குறித்துச் சொல்லப்பட்ட வாக்குத்தத்தத்தை நாம் விசுவாசத்தினாலே பெறும்படியாகவும் இப்படியாயிற்று. (கலாத்தியர் 3:13,14)
நம்முடைய பிரச்சனைகள் அனைத்தும் அவருடைய பர்வதத்தில் பார்த்துக்கொள்ளப்படும் என்ற சத்தியத்தை நாம் தியானித்து வருகிறோம் அல்லவா? மனிதனுடைய பிரதான பிரச்சனையாகிய பாவத்தை முறித்து, அதன் விளைவுகள் நம்மேல் வராமல் தடுத்து, நாம் ஆசீர்வாதத்தின் மேல் ஆசீர்வாதத்தைப் பெற்றவர்களாக கடந்து செல்ல அவர் தமது ஆவியானவரை நமக்கு அருளச்செய்து அவர் தரும் பெலனை விசுவாசத்தின் மூலம் பெற்று நாளுக்கு நாள் உள்ளான மனிதனில் பெலனடைந்து கிறிஸ்துவுக்கு ஒப்பான பூரண புருஷர்களாக மாற அவரே நமக்கு அருள் செய்கிறவராக இருக்கிறார்.
ஆம், பரிசுத்த ஆவியானவர் தரும் பெலனால் நாம் செய்ய வேண்டியதை செய்து, செய்யக்கூடாததை செய்யாமல் இருந்து செய்கையில் பாக்கியவானாக இருக்க அவரே நமக்கு உதவி செய்திருக்கிறார்.
செய்தி: பாஸ்டர் சார்லஸ் ஃபின்னி அருமைநாயகம்
செய்தியின் காணொளி இணைப்பு: https://youtu.be/WU5_pAIsDzY