இந்த உலகில் நம்மை சாத்தான் குற்றம்சாட்டுகிறவனாக இருக்கிறான். நாம் தவறு செய்யும்போது பிரமாணம் நமது தவறை நமக்குச் சுட்டிக்காட்டுகிறது, மனிதர்கள் சிலவேளைகளில் நம்மைக் குற்றப்படுத்தக் கூடும். ஆனால் 1 யோவான் 3:20 “நம்முடைய இருதயமே நம்மைக் குற்றவாளிகளாகத் தீர்க்குமானால்…” என்று சொல்லுகிறது. ஆம், நமது சொந்த இருதயமே நம்மைக் குற்றவாளியாகத் தீர்க்கும் என்று வேதம் சொல்லுகிறது. அப்படி நமது இருதயமே நம்மைக் குற்றப்படுத்தும்போது அதை நாம் எப்படி எதிர்கொள்வது. அதை அணுக வேண்டிய சரியான வழியையும், அதை அணுகக்கூடாத விதத்தில் அணுகிய மனிதர்களைக் குறித்த உதாரணங்களையும் நாம் வேதத்தில் இருந்து பார்ப்போம்.
ஆதியாகமம் 3- ஆம் அதிகாரத்தில் தேவன் விலக்கின கனியைப் புசித்த ஆதாமும் ஏவாளும் தேவ சமுகத்தை விட்டு ஓடி ஒளிந்து கொண்டனர். ஆதாம் “என்னுடனே இருக்கும்படி தேவரீர் தந்த ஸ்திரீயானவள் அவ்விருட்சத்தின் கனியை எனக்குக் கொடுத்தாள், நான் புசித்தேன்” என்று தேவன்மீதே பழிபோடுகிறான். (ஆதியாகமம் 3:12) ஒரு மனிதனை மனசாட்சி வதைக்கும்போது அவன் தனது பாவத்தை மற்றவர்கள் கண்களுக்கு மறைக்க முயலுகிறான், அல்லது தானே ஒளிந்துகொள்ளுகிறான், அல்லது தனது செயலை நியாயப்படுத்தி வாதிடுகிறான், அல்லது அடுத்தவர்கள்மீது பழிசாட்டுகிறான். இதுபோன்ற எந்த செயல்களாலும் குற்றம் நிவர்த்தியாகப் போவதில்லை.
மத்தேயு 26:75- இல் கர்த்தராகிய இயேசுவை மறுதலித்ததால் பேதுருவின் மனசாட்சி அவனை வாதிக்கிறது. அவன் வெளியே போய் மனங்கசந்து அழுதான் என்று வேதம் சொல்லுகிறது. மனங்கசந்து அழுதது அவனது நல்ல மனதைக் காட்டுகிறது, ஆனாலும் அழுவதால் மட்டும் குற்றம் நிவர்த்தியாகப் போவதில்லை.
அப்போஸ்தலர் நடபடிகள் 7- ஆம் அதிகாரத்தில் ஸ்தேவான் பிரசங்கத்தைக் கேட்ட யூதர்கள் தங்கள் மனசாட்சியில் வாதிக்கப்பட்டார்கள். அவர்களின் எதிர்வினை எப்படியிருந்தது என்பதை வேதம் கீழ்கண்டவாறு விவரிக்கிறது. “அவர்கள் உரத்தசத்தமாய்க் கூக்குரலிட்டுத் தங்கள் காதுகளை அடைத்துக்கொண்டு, ஒருமனப்பட்டு அவன்மேல் பாய்ந்து, அவனை நகரத்துக்குப் புறம்பே தள்ளி அவனைக் கல்லெறிந்தார்கள். (அப்போஸ்தலர் 7:57,58) யாருடைய பேச்சு நமது மனசாட்சியைத் தட்டி எழுப்புகிறதோ அவர்களுடைய குரள்வளையை நெறித்து அவர்களைப் பேசவிடாமல் செய்வது மனிதர்கள் ஆற்றும் இன்னொருவிதமான எதிர்வினை. இதனாலும் குற்றம் நிவர்த்தியாகப் போவதில்லை.
2 நாளாகமம் 16:9- இல் யூதாவின் ராஜாவாகிய ஆசா ஒரு தீர்க்கதரிசியினால் தான் செய்த ஒரு தவறுக்காக கண்டிக்கப்படுகிறான். அதற்குப் பிறகு அவனுக்குள் ஒரு முரட்டுப் பிடிவாதம் ஏற்படுகிறது. அவன் வறட்டு வைராக்கியம் பிடித்தவனாக தேவ சமுகத்துக்கு வருவதையே தவிர்க்கத் தொடங்குகிறான். “ஆசா அரசாண்ட முப்பத்தொன்பதாம் வருஷத்திலே தன் கால்களில் வியாதிகண்டு, அவன் நோவு மிகவும் உக்கிரமாயிருந்தது; அவன் தன் வியாதியிலும் கர்த்தரை அல்ல, பரிகாரிகளையே தேடினான் (2 நாளாகமம் 16:12) என்று வேதம் கூறுகிறது. அவன் கடினமான வியாதிப்படுக்கையிலும் கர்த்தரிடத்தில் திரும்பாத அளவுக்கு வைராகியமுள்ளவனாக இருந்தான். இதுபோன்ற வைராக்கியங்கள் நமது குற்றம் நிவர்த்தியாக நமக்கு உதவாது.
யோனா தீர்க்கதரிசியின் சரித்திரத்தை நாம் அனைவரும் அறிந்திருக்கிறோம். தேவன் அவரது தவறைச் சுட்டிக்காட்டி நீ எரிச்சலாய் இருக்கிறது நல்லதோ என்று கேட்டபோது நான் மரண பரியந்தம் எரிச்சலாய் இருக்கிறது நல்லதுதான் என்று யோனா மறுமொழி சொன்னான். இப்படி எரிச்சலாக இருப்பது நமக்குள் பிசாசானவன் கிரியை செய்ய இடங்கொடுத்துவிடும். எனவேதான் சூரியன் அஸ்தமிக்கும் முன்னே உங்கள் எரிச்சல் தணியக்கடவது என்று வேதம் சொல்லுகிறது. நமது குற்றம் சுட்டிக்காட்டப்படும்போது நாம் எரிச்சலடைவதால் நமது குற்றம் நிவர்த்தியாகப் போவதில்லை.
மத்தேயு 27:4,5 வசனங்கள் யூதாஸின் தற்கொலை நிகழ்வை பதிவு செய்திருக்கிறது. கர்த்தராகிய இயேசுவைக் காட்டிக்கொடுத்ததால் இருதயத்தில் குத்தப்பட்டு யூதாஸ் தற்கொலை செய்துகொண்டான். இந்த முடிவினால் அவர் உயிரை மாய்த்துக்கொள்ள முடியுமே தவிர அவனது குற்றம் நிவர்த்தியாகாது, அது அவனது ஆத்துமாவைத் தொடர்ந்து கொண்டேதானிருக்கும்.
கடைசியாக ஒரு நல்ல உதாரணத்தைப் பார்த்து முடிக்கலாம். 2 சாமுவேல் 24:10- இல் ஜனங்களைத் தொகையிடும்படி தாவீது செய்த செயல் தேவகோபத்தில் முடிந்தது. அதனால் தனது இருதயத்தில் குத்தப்பட்ட தாவீது உண்மையாய் தேவனிடத்தில் மனந்திரும்பி மன்னிப்புக் கோருகிறான். தனது பாவத்தை மறைக்காமல் அதை அவன் அறிக்கையிடுவதை நாம் வாசிக்க முடிகிறது. இதுதான் அந்தப் பாவத்தை நிவர்த்தியாக்கும் வழி ஆகும்.
பெந்தேகொஸ்தே நாளில் ஜனங்கள் அப்போஸ்தலனாகிய பேதுருவின் பிரசங்கத்தை கேட்டு இருதயத்தில் குத்தப்பட்டு, தங்கள் பாவத்தை அறிக்கை செய்து தேவனிடத்தில் திரும்பினார்கள் என்று வேதத்தில் வாசிக்கிறோம். ஆம், நமது தேவனிடத்தில் திரளான மீட்பு உண்டு. நமது பாவத்தை என்று அறிக்கையிடுகிறோமோ அன்றே அப்போதே தேவன் நம்மை விடுவித்து, குற்ற மனசாட்சியை நீக்கி நம்மை மகிழ்விக்கிறார்.
செய்தி: பாஸ்டர் சார்லஸ் ஃபின்னி அருமைநாயகம்
செய்தியின் காணொளி இணைப்பு: https://youtu.be/XZGrdaJzMak