நீ விசுவாசமும் நல்மனசாட்சியும் உடையவனாய் இரு என்று பவும் தீமோத்தேயுவுக்கு அறிவுரை கூறுகிறார். (1 தீமோத்தேயு 1:18) நல்மனசாட்சி என்றால் என்ன? தேவனுடைய பார்வையில் எது நல்லது எது கெட்டது என்கிற தெளிவையுடைய மனசாட்சியே நல்மனசாட்சியாகும். அது இயேசுவின் இரத்தம் கொண்டு கழுவப்பட்ட மனசாட்சியாகவும், நல்வார்த்தை கொண்டு நிரப்பப்பட்ட மனசாட்சியாகவும் இருகிறது.
இந்த நல்மனச்சாட்சியைச் சிலர் தள்ளிவிட்டு, விசுவாசமாகிய கப்பலைச் சேதப்படுத்தினார்கள் என்று பவுல் அடுத்த வசனத்தில் எச்சரிக்கிறார். நல்மனசாட்சி கறைபடும்போது விசுவாசமாகிய கப்பல் சேதப்படுகிறது. நல்மனசாட்சி எப்படி கறைபடுகிறது? அதற்கும் பவுலே 1 கொரிந்தியர் 8:6- இல் ஒரு பதிலைத் தருகிறார். இங்கு விக்கிரகங்களுக்குப் படைக்கப்பட்டதை புசிக்கிற விஷயத்தைக் குறித்து பேசும் பவுல், அவர்களுடைய மனசாட்சி பலவீனமாக இருப்பதால் அசுசிப்படுகிறது என்கிறார். மனசாட்சி பலவீனமாக இருக்க தேவனைக்குறித்த அறிவு குறைவாக இருப்பது ஒரு காரணமாகும். தேவனைக்குறித்த அறிவு காரணமாயிருப்பது மட்டுமல்லாமல் மனிதர் பார்வைக்கு ஞானமாய்த் தோன்றும் கட்டுக்கதைகளுக்கு செவிகொடுக்கும்போதும் மனசாட்சி அசுத்தமடைகிறது என்று தீத்து 1:15 சொல்லுகிறது.
பழைய ஏற்பாட்டில் தேவன் இஸ்ரவேல் மக்களுக்கு பலிமுறைமைகளை ஏற்படுத்தித் தந்தார். அதன் உட்பொருளோ கிறிஸ்துவைப் பற்றினது. ஆனால் ஒரு மனிதன் அந்த உட்பொருளை புரிந்துகொள்ளாமல் சடங்கை மாத்திரம் செய்வானானால் அந்தப் பலிகளும், சடங்குகளும் அவன் ஒரு பாவி என்ற குற்றமனசாட்சியை மட்டுமே தருமேயல்லாமல், கிறிஸ்துவே எனது பாவத்துக்கு நிவாரணமாக இருக்கிறார் என்ற உணர்வு இருக்காது. அங்கே வெறும் குற்றஉணர்வு மாத்திரமே மிஞ்சி அது முன்னேற்றப்பாதைக்கு ஒரு தடைக்கல்லாக அமைந்துவிடும். எனவேதான் திருவிருந்து எனும் சாக்கிரமந்து கர்த்தர் நமக்கு சிலுவையில் உண்டுபண்ணி வைத்த நிவாரணத்தை நினைவுகூரச் செய்வதாக இருக்கிறது.
விசுவாசமும் நல்மனசாட்சியும் உடைய ஒருவனுக்கு அவனைச் குறித்து சொல்லப்பட்ட தீர்க்கதரிசனங்கள் அத்தனையும் கடுமையான போராட்டங்களின் மத்தியிலும் நிறைவேறியே தீரும். அதற்கான பெலனையும், ஆலோசனைகளையும் தேவன் அவனது நல்மனசாட்சியில் அருளிக்கொண்டே இருக்கிறார். ஆம், தேவன் நல்மனசாட்சியுடன்தான் பேசுகிறார். எனவேதான் மனசாட்சியின் உள்ளடக்கம் மிக, முக முக்கியமானது. நாம் அவர் பேசுவதைப் புரிந்து, எனக்காக என்ன திட்டம் வைத்திருக்கிறார் என்பதை அறிந்து, அந்தத் திட்டத்துக்கு எதிராக உள்ள காரியங்களை முறியடித்து, அவர் நமக்கு வைத்திருக்கிற ஆசீர்வாதங்களை அனுபவமாக்கிக் கொள்ள முடியும்.
சங்கீதம் 119:128, சங்கீதம் 19:7, சங்கீதம் 119:11, நீதிமொழிகள் 2:1,2, நீதிமொழிகள் 6:21 ஆகிய வசனங்கள் சொல்லும் பொதுவான காரியம் கர்த்தருடைய வார்த்தை குறைவற்றதும் அது நமது ஆத்துமாவை உயிர்ப்பிக்கக் கூடியதுமாக (restore) இருக்கிறது. அந்த வார்த்தைகளை முக்கியப்படுத்தி, அதை இருதயத்தில் பத்திரப்படுத்தி, தியானிக்கும்போது அது நம்மைக் காப்பாற்றி, நமக்கு நல்மனசாட்சியைத் தந்து நம்மை விசுவாசத்தில் வல்லவர்களாக்கி, வெற்றிநடை போடச்செய்யும்.
செய்தி: பாஸ்டர் சார்லஸ் அருமைநாயகம்
செய்தியின் காணொளி இணைப்பு: https://youtu.be/nUnKGuQOX_M