பர்வதத்தில் பார்த்துக்கொள்ளப்படும் – நல்ல இருதயம் நற்பலன்

Home » பர்வதத்தில் பார்த்துக்கொள்ளப்படும் – நல்ல இருதயம் நற்பலன்

பர்வதத்தில் பார்த்துக்கொள்ளப்படும் – நல்ல இருதயம் நற்பலன்

நல்ல நிலத்தில் விதைக்கப்பட்டவர்கள் வசனத்தைக் கேட்டு, அதை உண்மையும் நன்மையுமான இருதயத்திலே காத்துப் பொறுமையுடனே பலன் கொடுக்கிறவர்களாய் இருக்கிறார்கள் என்று லூக்கா 8:15- இல் கர்த்தராகிய இயேசு கிறிஸ்து சொல்லுகிறார். அதாவது நமது இருதயம் நிலத்துடன் ஒப்பிடப்படுகிறது. நமது இருதயத்தை நாம் நல்ல நிலமாகக் காத்துக்கொள்ள வேண்டியது அவசியம். அதனால்தான் எல்லா காவலோடும் உன் இருதயத்தைக் காத்துக்கொள் என்று சாலொமோன் ஞானி சொல்லுகிறார். (நீதிமொழிகள் 4:23)

நமது இருதயத்தை நல்ல நிலமாக நாம் காத்துக் கொள்ளக்கூடாத படிக்கு மூன்று காரியங்கள் நமக்கு சவாலாக இருக்கின்றன. அவை என்ன என்பதை லூக்கா 8:14 சொல்லுகிறது. “முள்ளுள்ள இடங்களில் விதைக்கப்பட்டவர்கள் வசனத்தைக் கேட்கிறவர்களாய் இருக்கிறார்கள்; கேட்டவுடனே போய், பிரபஞ்சத்திற் குரிய கவலைகளினாலும், ஐசுவரியத்தினாலும், சிற்றின்பங்களினாலும், நெருக்கப்பட்டு பலன் கொடாதிருக்கிறார்கள்”.

உலக முறைமைகளைப் பின்பற்றுவதினால் வரும் கவலைகளும், கர்த்தரை ஆதாராமாகக் கொள்ளாமல் தனது ஐசுவரியத்தை ஆதாரமாகக் கொள்வதால் வரும் பிரச்சனைகளும், பிற காரியங்களைக் குறித்த இச்சையினால் ஏற்படும் அக்கறையின்மையும் நமக்கு தடைக்கற்களாக மாறி, நாம் வாழ்வில் வெற்றிநடை போடக்கூடாதபடிக்கு நமக்கு மூச்சுத்திணறலை ஏற்படுத்தி, நமது வாழ்வை கனியற்றதாக மாற்றிவிடுகின்றன.

மேற்கண்ட காரியங்கள் சுயத்தை மையப்படுத்துவதும், சாத்தானுடைய ஆளுகைக்குக் கீழானதுமாக இருப்பதால் இவற்றைப் பின்பற்றிப் போகிறவர்களுக்கு சஞ்சலமே மிஞ்சுகிறது. இவைகளின் வேராக இருக்கும் கண்களின் இச்சை, மாம்சத்தின் இச்சை, ஜீவனத்தின் பெருமை ஆகிய சுபாவங்கள் அழிவுக்குரியதும், நம்மை அழிக்கிறதுமாக இருக்கிறது.

ஆனால் நாம் கர்த்தரை மையமாகக் கொண்டு வாழும்பொழுது, அவரே நமக்கு பங்காக மாறி நமது பந்தயத்தை அவர் வெற்றிகரமானதாக முடித்து வைக்கிறார். எனவே நாம் இந்த நிலையற்ற ஐசுவரியத்தின்மேல் நம்பிக்கை வையாமல், நாம் அனுபவிக்கிறதற்குச் சகலவித நன்மைகளையும் நமக்குச் சம்பூரணமாய்க் கொடுக்கிற ஜீவனுள்ள தேவன்மேல் நம்பிக்கை வைக்கும்படியாக அழைக்கப்பட்டிருக்கிறோம்.

இவ்விதமாகக் கர்த்தரை மையமாகக் கொண்ட இருதயம் அவரது நல்ல வார்த்தையினால் நிறைந்திருப்பதால் அது நல்ல இருதயமாக இருக்கிறது. இப்படிப்பட்டவர்களது வாழ்க்கை முறைமை இந்த உலகத்துக்கு உட்பட்டவர்களின் வாழ்க்கை முறையிலிருந்து முற்றிலும் வேறுபட்டதாக இருக்கிறது. இவர்கள் தங்கள் தேவனையே நோக்கிப்பார்த்து பிரகாசமடைகிறவர்களாக இருக்கிறார்கள்

உலகத்திலும், உலகத்தில் உள்ளவைகளிலும் அன்புகூராதிருங்கள் என்று யோவான் நமக்கு புத்தி சொல்லி இருக்கிறார். (1 யோவான் 2:15) நாம் முதலாவது தேவனுடைய இராஜ்ஜியத்தையும், அவருடைய நீதியையும் தேடும்பொழுது அவரே நமக்காக யாவையும் செய்துமுடிக்கிறவராக இருக்கிறார். நாம் நமது பிரச்சனைகளை கர்த்தரிடத்தில் சொல்லும்பொழுது அவர் நமக்கு அக்கறையுடன் செவிசாய்ப்பது மட்டுமன்றி, நமக்கு புரியும்விதத்தில் பதில் அளித்து நம்மை வழிநடத்துகிறவராகவும் இருக்கிறார். கர்த்தருக்கே மகிமை உண்டாவதாக!

செய்தி: பாஸ்டர் சார்லஸ் அருமைநாயகம்

செய்தியின் காணொளி இணைப்பு: https://youtu.be/Tv42B57_cr0

>