இந்தச் சவாலான காலங்களுக்கு முன்பு உலகம் மிகவும் வேகமாக இயங்கிக் கொண்டிருந்தது. கடந்த இரண்டு வருடங்களாக உலகம் வீட்டுக்குள்ளேயே முடங்கிக் கிடக்கிறது. நான் நினைத்த நேரத்தில் நினைத்தவைகளை செய்ய முடிவதில்லை. நமது பொறுமை சோதிக்கப்படும் காலத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். பொறுமை என்பது அறுகிவரும் இன்றைய காலங்களில் விசுவாசிகளாகிய நமக்கு அதன் மகத்துவத்தை விளங்கப்பண்ண தேவன் விரும்புகிறார்.
தேவபிள்ளைகளுக்கு ஒரு ஆசீர்வாதம் வாக்களிக்கப்படுவதும், நாம் அதை எதிர்பார்த்து காத்திருப்பதும் ஆவிக்குரிய வாழ்வில் இயல்பானதுதான். நமக்கு ஒரு ஆசீர்வாதம் வாக்களிக்கப்பட்டால் பொதுவாக நமது கவனம் முழுவதும் அந்த ஆசீர்வாதத்தின் மீதே குவிந்துவிடுகிறது. அது தவறல்ல, ஆனால் அந்த ஆசீர்வாதத்தை வாக்களித்த கர்த்தர் அந்த வாக்குத்தத்தம் நம்மில் நிறைவேறும் முன்பதாக நம்மிடத்தில் குமாரனுடைய சாயல் வெளிப்பட வேண்டும், நமக்குள் தெய்வீக மாற்றங்கள் ஏற்படவேண்டும் என்பதில் அதிக கவனமாகவும் நோக்கமாகவும் இருக்கிறார்.
நாம் அந்த ஆசீர்வாதம் கிடைகும்வரை வேண்டா வெறுப்பான பொறுமையோடு இருக்க வேண்டும் என்பதல்ல, நாம் கிறிஸ்துவின் பொறுமையை கற்றும், பெற்றும் கொள்ளவேண்டுமென்று தேவன் விரும்புகிறார். “கர்த்தர் உங்கள் இருதயங்களை தேவனைப்பற்றும் அன்புக்கும் கிறிஸ்துவின் பொறுமைக்கும் நேராய் நடத்துவாராக” என்று 2 தெசலோனிக்கேயர் 3:5 சொல்லுகிறது. ஆம், தேவன் நமது கரங்களைப் பிடித்து கிறிஸ்து எந்தப் பாதையில் போய் சாதித்தாரோ, அதே பாதையில் நம்மை நடத்துகிறார்.
அதற்கு ஒத்த இன்னொரு வசன ஆதாரத்தையும் காண்போம். பொறுமையையும் ஆறுதலையும் அளிக்கும் தேவன், கிறிஸ்து இயேசுவினுடைய மாதிரியின்படியே, நீங்கள் ஏகசிந்தையுள்ளவர்களாயிருக்கும்படி உங்களுக்கு அநுக்கிரகஞ்செய்வாராக. (ரோமர் 15:6) கிறிஸ்துவின் மாதிரி என்று இங்கு பவுல் குறிப்பிடுவது என்ன? பொறுமையாய் காத்திருக்கும்போது கிறிஸ்துவுக்குள் என்ன மனமிருந்ததோ, என்ன திடமும் உறுதியும் இருந்ததோ அதையே நாமும் பெற்றுக்கொண்டு அவரைப்போலவே காத்திருந்து பெற்றுக்கொள்ள வேண்டும் என்று தேவன் விரும்புகிறார். இதன் மூலம் நாம் ஆவிக்குரிய முதிர்ச்சியைக் கற்றுக்கொள்கிறோம்.
இதை நாம் எப்படிப் பெற்றுக்கொள்வது?
அப்போஸ்தலர் 2:40 மற்றும் 14:22 ஆகிய வசனங்கள் வேத வார்த்தையின் மூலமாகத்தான் நாம் இதைப் பெற்றுக்கொள்ள முடியும் என்று சாட்சி பகருகின்றன. அதாவது வசனத்தைக் கொண்டு புத்தி சொல்லுவதன் மூலம் ஒருவரை நாம் திடப்படுத்தி இந்த அனுபவத்துக்குள் நடத்த முடியும் என்று இந்த வசனங்களில் பார்க்கிறோம். இதற்கு நல்ல உதாரணமாக தாவீது தளர்ந்து போயிருந்த நிலையில் யோனத்தான் அவனை கர்த்தருக்குள் திடப்படுத்தியதை நாம் நினைவுகூரலாம். புத்தி சொல்லுதல் என்றால் ஒருவரை வேத வசனத்தைக் கொண்டு உற்சாகப்படுத்துவதும், தைரியப்படுத்துவதும் ஆகும்.
கொலோசேயர் 1:11 நம்மை சந்தோஷத்தோடு கூடிய பொறுமையோடு இருக்கும்படி புத்தி சொல்லுகிறது. ஆம், துக்கத்தோடும் சஞ்சலத்தோடும் கூடிய பொறுமையை தேவன் நம்மிடத்தில் எதிர்பார்க்கவில்லை. அவர் சந்தோஷத்தோடு கூடிய பொறுமையை நமக்குத் தர விரும்புகிறார். ஏனெனில் பிலிப்பியர் 1:5 இல் சொல்லப்பட்டதுபோல ஆரம்பித்த அவரே முடிக்கவும் வல்லவராய் இருக்கிறபடியால் காத்திருப்பின் காலங்களில் நாம் கலக்கமடையவும், சஞ்சலப்படவும் தேவையில்லை. நமக்கு ஒரு திட நம்பிக்கை இருக்கிறது. எனவே நாம் பொறுத்திருக்கும் காலம் சந்தோஷம் நிறைந்த காலமாக இருக்க முடியும். விதையை அளிக்கிற அவரே விளையச் செய்யவும் வல்லவர். அவர் மூலைக்கல் மட்டுமல்ல தலைக்கல்லாகவும் இருக்கிறார் எனவே நாம் கலங்க வேண்டியதில்லை.
இப்படி கிறிஸ்துவின் பொறுமையை நாம் பெற்றுக்கொண்டு அதில் நிலைத்திருக்கும்போது ஆரம்பம் அற்பமாய் இருந்தாலும், முடிவு சம்பூரணமாய் இருக்கும். காத்திருந்த நேரத்தில் நாமும் தெய்வீக சுபாவத்தில் வளர்ந்து கனி கொடுக்கிறவர்களாகவும் மாறியிருப்போம். எத்தனை மகிமை! எவ்வளவு ஞானமும், அன்புமுள்ள தேவன் நம்முடைய தேவன்!!
செய்தி: பாஸ்டர் சார்லஸ் அருமைநாயகம்
செய்தியின் காணொளி இணைப்பு: https://youtu.be/ARGLQNifqwg