கர்த்தராகிய தேவன் அவருடைய பிள்ளைகளாகிய நமக்கு ஆறுதல் அளித்து, ஆரோக்கியம் அளித்து, ஆதிநிலைக்கு நம்மைத் திரும்பப்பண்ணுகிற தேவனாக இருக்கிறார். அவர்கள் வழிகளை நான் பார்த்து, அவர்களைக் குணமாக்குவேன்; அவர்களை நடத்தி, திரும்பவும் அவர்களுக்கும், அவர்களிலே துக்கப்படுகிறவர்களுக்கும் ஆறுதல் அளிப்பேன். தூரமாய் இருக்கிறவர்களுக்கும், சமீபமாய் இருக்கிறவர்களுக்கும் சமாதானம் சமாதானம் என்று கூறும் உதடுகளின் பலனைச் சிருஷ்டிக்கிறேன்; அவர்களைக் குணமாக்குவேன் என்று ஏசாயா 57:18,19 வசனங்கள் கூறுகின்றன.
அவர் ஏன் நமக்கு ஆறுதலும், ஆரோக்கியமும் அளித்து ஆதிநிலைக்கு நம்மைத் திரும்பப்பண்ணுகிறாரென்றால் என்ன நோக்கத்துக்காக நம்மை சிருஷ்டித்து இந்த பூமியில் வைத்தாரோ அந்த நோக்கத்தை தொடர்ந்து நம்மில் நிறைவேற்றும்படி அப்படிச் செய்கிறார். உதாரணத்துக்கும் முடமான ஒருவருடைய காலை ஒரு மருத்துவர் குணமாக்குகிறாரென்றால் அதற்கு என்ன நோக்கமாக இருக்க முடியும்? கால் எந்த நோக்கத்துக்காக மனிதனுக்குக் கொடுக்கப்பட்டதோ அந்த நோக்கம் மறுபடியும் நிறைவேறுவதற்காகத்தான் என்பதை நம்மால் புரிந்துகொள்ள முடியும். அப்படியே தேவன் நம்மை குணமாக்குவதன் நோக்கமும் நம்மைக் குறித்த அவருடைய அநாதி தீர்மானத்தை நிறைவேற்றத்தான்.
தேவனுக்கு Plan-B என்பது ஒருபோதும் கிடையாது. அவர் நோக்கங்களை மாற்றுகிறவரல்ல, மாறாக நோக்கங்களை நிறைவேற்றுவதற்கு இருக்கும் தடைகளை மாற்றுகிறவர். எனவேதான் அவர் நம்மோடு கூடவே இருந்து நம்மை குணமாக்குகிறார். கூடவே என்றால் எவ்வளவு அருகாமையில் என்ற கேள்வி நமக்குள் எழலாம். நாம் கிறிஸ்துவுக்குள்ளும், பரிசுத்த ஆவியானவர் நமக்குள்ளும் இருப்பதை வேதம் தெள்ளத்தெளிவாகக் காட்டுகிறது. இதிலிருந்தே அந்த ‘அருகாமை’ என்பது எத்தகைய நெருக்கம் என்பதை நாம் அறிந்து கொள்ளலாம்.
தேவன் ஒருவனைத் தள்ளிவிடுவாரென்று சொன்னால் அவனைத் தூக்கிவிடுவது என்பது யாராலும் முடியாது. எனவேதான் அவர் யாரையும் புறக்கணிப்பதோ தள்ளிவிடுவதோ இல்லை. அவர் யாருக்கும் தூரமானவர் அல்ல, தம்மை உண்மையாய் தேடுகிற யாவருக்கும் அவர் சமீபமாய் இருக்கிறார். அவர் நம்மை உருவாக்குவதற்காகவே உடனிருக்கிறவர். மனிதர்கள் ஒருவேளை நம்மைத் தூக்கி எறிந்துவிடலாம். ஆனால் கர்த்தர் நம்மைக் கடந்துபோகிறவர் அல்ல. அவர் உடைக்கப்பட்டதை எடுத்து அற்புதமாக வனைந்து உருவாக்குகிற தேவனாக இருக்கிறார்.
தேவன் யாருக்கு இதைச் செய்கிறார்? வேதம் அவரை நமது மேய்ப்பர் என்றும், நம்மை அவரது கைக்குள்ளான ஆடுகள் என்றும் வருணிக்கிறது. எனவே அவர் நம்மைத்தான் ஆறுதல்படுத்தி, காயம்கட்டி, ஆதிநிலைக்கு திரும்பச் செய்கிறார். நம்மைத்தான் அமர்ந்த தண்ணீர்களண்டையில் இளைப்பாறப்பண்ணுகிறார். “என் ஆடுகளை நான் மேய்த்து, அவைகளை நான் மடக்குவேன் என்று கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறார். நான் காணாமற்போனதைத்தேடி துரத்துண்டதைத் திரும்பக்கொண்டுவந்து, எலும்பு முறிந்ததைக் காயங்கட்டி, நசல்கொண்டதைத் திடப்படுத்துவேன்” என்று கர்த்தர் சொல்லுவதாக எசேக்கியேல் 34:15,16 வசனங்கள் கூறுகின்றன.
அவர் மேற்பூச்சாய் சுகமாக்குகிறவர் அல்ல, முற்றுமுடிய குணமாக்கி, பிரச்சனையின் வேரைத் தேடிப்பிடித்து அழிக்கிறார். அவர் நமக்கு நிரந்தர சுகத்தையும், தீர்வையும் அளித்து நம்மை தொடர்ந்து நமக்கு நியமிக்கப்பட்ட பாதையில் நாம் மகிழ்ச்சியோடு ஓடும்படி கிருபை செய்கிறவராக இருக்கிறார். அல்லேலூயா!
செய்தி: பாஸ்டர் சார்லஸ் அருமைநாயகம்
செய்தியின் காணொளி இணைப்பு: https://youtu.be/JKTy-ikDBI4