கர்த்தருடைய வார்த்தையானது நமக்கு மனமகிழ்ச்சியைத் தருவதாக இருக்கிறது. அந்த மனமகிழ்ச்சி மூன்று விதங்களில் நம்மை வந்து அடைகிறது. முதலாவதாக தேவனுடைய வார்த்தையை ஏற்றுக்கொள்ளும்போது ஒரு மனமகிழ்ச்சி நமக்கு ஏற்படுகிறது. அதாவது சத்தியத்துக்கு சரியான பிரதிமொழி கொடுக்கும்போது சத்தியத்தினால் வருகிற சந்தோஷம் நம்மை ஆட்கொள்ளக்கூடியதாக இருக்கிறது. இதைத்தான் உம்முடைய வார்த்தைகள் கிடைத்தவுடனே அவைகளை உட்கொண்டேன்; உம்முடைய வார்த்தைகள் எனக்குச் சந்தோஷமும், என் இருதயத்துக்கு மகிழ்ச்சியுமாயிருந்தது என்று எரேமியா 15:16ல் எரேமியா தீர்க்கதரிசி சொல்லுகிறார்.
உணவைக்குறித்ததான சரியான அணுகுமுறைதான் வயிற்றில் பசியை ஏற்படுத்துக்கூடியதாக இருக்கிறது. கீரைபோன்ற ஆரோக்கியமான உணவுவகைகளை நாம் பிள்ளைகளுக்கு கொஞ்சம் கொஞ்சமாகக் கொடுத்து அதன் ருசிக்கு அவர்களைப் பழக்கப்படுத்துகிறோம். அதுபோலவே களங்கமில்லாத ஞானப்பாலாகிய வேதவார்த்தையில் பழகப் பழக அது நமக்கு மகிழ்ச்சியைத் தருவதாக இருக்கிறது. தெசலோனிக்கேயரைப்போல தேவவசனத்தை தேவவசனமாகவே ஏற்றுக்கொள்ளும்போது அது நமக்குள் நிச்சயம் பெலன் செய்வதாக இருக்கிறது.
தாசனாகிய தாவீது கர்த்தருடைய வார்தைகளை மிகவும் நேசித்தபடியால் அதைப் பெற்றுக்கொள்வதைக்குறித்த அவரது அணுகுமுறை அருமையானதாக இருந்தது. உம்முடைய கற்பனைகளை நான் வாஞ்சிக்கிறபடியால், என் வாயை ஆவென்று திறந்து அவைகளுக்கு ஏங்குகிறேன் என்று சங்கீதம் 119:131ல் பாடியிருக்கிறார்.
இரண்டாவதாக மனந்திரும்புதலுக்கும் மனமகிழ்ச்சிக்கும் நிறைய சம்பந்தமிருக்கிறது. ஆதித்திருச்சபை உருவான நாளில் பேதுருவின் பிரசங்கத்தைக் கேட்ட ஜனங்கள் இருதயத்தில் குத்தப்பட்டு மனந்திரும்புதல் அடைந்தார்கள். அந்த மனந்திரும்புதல் மனமகிழ்ச்சிக்கு நேராக அவர்களை நடத்தினதை அப்போஸ்தலர் இரண்டாம் அதிகாரத்தின் கடைசி சில வசனங்களில் நாம் காணலாம்.
மூன்றாவதாக மனம் புதிதாகுதல் நம்மை மனமகிழ்ச்சிக்கு நேராக நடத்துகிறது. மனந்திரும்புதலின் அடுத்தகட்டம் மனம் புதிதாகுதல் ஆகும். நெகெமியா 8- ஆம் அதிகாரத்தில் துக்கப்பட்டவர்களாக தேவவசனத்தைக் கேட்கத் தொடங்கிய மக்கள் அந்த வசனம் அவர்களில் கிரியைசெய்ததன் விளைவாக அவர்கள் மனங்கள் புதிதாக்கப்பட்டு, அந்த துக்கமானது சந்தோஷமான கொண்டாட்டமாக மாறியதை அந்த அதிகாரத்தில் நாம் வாசிக்கலாம்.
ஆக, வசனத்தை ஏற்றுக்கொள்ளுதலில் நமது அணுகுமுறை மாறும்பொழுது, அந்த வசனம் நமக்குள் நுழைந்து பெலன் செய்து, நம்மை புதிதாக்கி, நமக்கு நித்திய மகிழ்ச்சியை ஏற்படுத்துவதாக இருக்கிறது.
செய்தி: பாஸ்டர் சார்லஸ் அருமைநாயகம்
செய்தியின் காணொளி இணைப்பு: https://youtu.be/VUAPJa8k6UA