இஸ்ரவேல் தேசத்தில் கொடிய பஞ்சம் உண்டானதால் மோவாப் தேசத்துக்குப் பிழைக்கப்போய் அங்கே தனது கணவனையும், இரு மகன்களையும் இழந்து தனிமைப்பட்ட நகோமியின் சூழல் இன்று நம்மில் பலருக்கும் பொருந்துகிறது. “என்னை நகோமி என்று அழைக்காதீர்கள், மாராள் என்றழையுங்கள்” என்று நகோமி சொன்னதை நாம் வேதத்தில் வாசிக்கிறோம். வெறுமை, சிறுமை, மனக்கிலேசம் ஆகியவற்றை மனதில் சுமந்த நகோமி அப்படிச் சொன்னதில் ஆச்சரியமில்லை. ஏனெனில் அவள் முற்றிலும் கசப்பினால் நிறைந்தவளாயிருந்தாள்.
இஸ்ரவேலில் ஏற்பட்ட கொடிய பஞ்சம் போலவே இன்று சர்வதேசத்தையும் இருளில் வைத்திருக்கும் கொடிய கொள்ளைநோயின் காலத்தில் வாழும் நம்மால் நகோமியின் நிலையைப் புரிந்துகொள்ள முடிகிறது. இதே போன்ற சூழலில் தாசனாகிய தாவீதும், சங்கீதத்தை எழுதிய ஏனைய சங்கீதக்காரர்களும் பலமுறை கடந்து சென்றதை நாம் வேதத்தில் வாசிக்க முடிகிறது.
வலதுபுறமாய்க் கண்ணோக்கிப்பாரும், என்னை அறிவார் ஒருவரும் இல்லை; எனக்கு அடைக்கலம் இல்லாமற்போயிற்று; என் ஆத்துமாவை விசாரிப்பார் ஒருவரும் இல்லை. (சங்கீதம் 142:4) என்மேல் நோக்கமாகி, எனக்கு இரங்கும்; நான் தனித்தவனும் சிறுமைப்படுகிறவனுமாயிருக்கிறேன். (சங்கீதம் 25:16)
தனிமையில் இப்படிப்பட்ட எண்ணங்கள் வரும், அதிலும் தேவனே நமக்கு எதிரியாகிவிட்டதுபோல தோன்றும். ஆனாலும் கர்த்தர் நம் பட்சத்தில் இருந்து நம்மை ஆதரிக்கிறவர். அவர் ஒருநாளும் நம்மைக் கைவிடுகிறவர் அல்ல. இப்படிப்பட்ட சூழலில் இருப்பவர்களுக்கு கொடுக்கப்படும் தேவனுடைய வார்த்தை என்னவென்றால்:
உன் செய்கைக்குத்தக்க பலனைக் கர்த்தர் உனக்குக் கட்டளையிடுவாராக; இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தருடைய செட்டைகளின்கீழ் அடைக்கலமாய் வந்த உனக்கு அவராலே நிறைவான பலன் கிடைப்பதாக என்றான். (ரூத் 2:12)
ஆம், எப்பேற்பட்ட கடினமான பாதையிலும் நாம் செய்ய வேண்டிய மகத்தான காரியம், கர்த்தரை நம்பி, அவரை மட்டும் சார்ந்துகொள்வது மட்டுமே. காரணம் அவர் தம்மை நம்பினவர்களுக்கு நன்மை செய்கிறவராகவே இருக்கிறர். இழப்பு, தனிமை இவைகளின் மத்தியில் பொருளாதார நெருக்கடிகளும் நம்மை வதைக்கக்கூடும். ஆனாலும் வார்த்தை சொல்லுகிறது “இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தருடைய செட்டைகளின்கீழ் அடைக்கலமாய் வந்த உனக்கு அவராலே நிறைவான பலன் கிடைப்பதாக” நாம் இந்த வார்த்தையை விசுவாசித்து அதையே அறிக்கை செய்ய வேண்டும். அப்போது அறிக்கையின் விளைவாக வெளிவரும் செயல்களெல்லாம் ஆசீர்வாதமாக மாறும்.
சூழ்நிலைகள் மோசமாய் இருக்கையில் அவரை நம்பும் நமக்கு அவரே நமக்கு பெலனும், தஞ்சமும், அடைக்கலமும், நிழலுமாய் இருக்கிறார். கொடூரமானவர்களின் சீறல் மதிலை மோதியடிக்கிற பெருவெள்ளத்தைப்போல் இருக்கையில், நீர் ஏழைக்குப் பெலனும், நெருக்கப்படுகிற எளியவனுக்குத் திடனும், பெருவெள்ளத்துக்குத் தப்பும் அடைக்கலமும், வெயிலுக்கு ஒதுங்கும் நிழலுமானீர். (ஏசாயா 25:4)
செய்தி: பாஸ்டர் சார்லஸ் அருமைநாயகம்
செய்தியின் காணொளி இணைப்பு: https://youtu.be/0m99WX8AxQ0