நான் நட்டேன், அப்பொல்லோ நீர்ப்பாய்ச்சினான், தேவனே விளையச் செய்தார். அப்படியிருக்க, நடுகிறவனாலும், நீர்ப்பாய்ச்சுகிறவனாலும் ஒன்றும் இல்லை, விளையச்செய்கிற தேவனாலே எல்லாம் ஆகும் என்று பவுல் 1 கொரிந்தியர் 3:6,7 வசனங்களில் கூறுகிறார். இந்தக் கடுமையான நோய்த்தொற்றின் காரணமாக உலகமே முடங்கிக் கிடக்கும் சூழலில் என்னால் எப்படி கனிகொடுக்க முடியும் என்று நாம் எண்ணலாம். ஆனால் மேற்கண்ட வசனம் சொல்லுகிறடி தேவனே நம்முடைய பிரயாசங்களுக்கான பலனை விளையச்செய்கிறவராக இருக்கிறார் என்பதை நாம் விசுவாசிக்க வேண்டும்.
அவர் இயற்கையான சூழலில் மட்டும் அல்ல, தேவைப்பட்டால் இயற்கைக்கு அப்பாற்பட்ட சூழல்களிலும் கூட விளையச்செய்கிற தேவனாக இருக்கிறார். ஆரோனின் வெறும் கோலை துளிர்க்கச் செய்து, பூக்கச்செய்து கனிக்கொடுக்கப் பண்ணின தேவன் அவர். உலகமே பஞ்சத்தில் உழன்ற காலத்திலும்கூட தம்முடைய தாசனாகிய ஈசாக்கு விதைத்த விதைகளுக்கு நூறு மடங்கு பலன் தந்தவர்.
ஆகவே, நாமல்ல தேவனே விளையச்செய்கிறவர் என்கிற அறிவு நமக்கு இருக்க வேண்டும். தேவன் எப்படி அதை செயல்படுத்துகிறார் என்பதை நாம் பார்ப்போம். ஏசாயா 55:10 வசனங்கள சொல்லுகிறது, “மாரியும் உறைந்த மழையும் வானத்திலிருந்து இறங்கி, அவ்விடத்துக்குத் திரும்பாமல் பூமியை நனைத்து, அதில் முளை கிளம்பி விளையும்படிச்செய்து, விதைக்கிறவனுக்கு விதையையும், புசிக்கிறவனுக்கு ஆகாரத்தையும் கொடுக்கிறது எப்படியோ, அப்படியே என் வாயிலிருந்து புறப்படும் வசனமும் இருக்கும்; அது வெறுமையாய் என்னிடத்திற்குத் திரும்பாமல், அது நான் விரும்புகிறதைச்செய்து, நான் அதை அனுப்பின காரியமாகும்படி வாய்க்கும்”.
ஆம், அத்தனையும் வேதவசனத்தால் சாத்தியம். அவரது அழிவில்லாத வித்தாகிய வசனம் அளவிடமுடியாத அறுவடையை அளிக்க வல்லதாக இருக்கிறது. அவர் தமது ஆத்தும வருத்தத்தின் பலனைக் கண்டு திருப்தியாவார் என்று ஏசாயா 53:13 சொல்லுகிறது. அப்படிப்பட்ட தேவன் நமது ஆத்தும வருத்தங்களை விழலுக்கு இறைத்த நீராக வீணாக விடுவாரோ? நிச்சயம் விடமாட்டார். நம்முடைய பிரயாசங்கள் நிச்சயமாக வீணாகாது. நம்மைத் திருப்தியடையச் செய்கிறவர் நம்மோடிருக்கிறார்.
அவர் நமக்கு பலன் அளிக்கிறவராக இருக்கிறபடியால் நாம் பலன் கொடுக்கிறவர்களாக இருக்கிறோம். நம்முடைய விசுவாசத்தில் உறுதிப்பட வேண்டும். நம்முடைய ஜெபங்களுக்கு பதில் தராமல் இருப்பதில்லை. சில நேரங்களில் நாம் நினைத்ததுபோல சம்பவங்கள் நடவாதபடியால் நம்முடைய ஜெபம் கேட்கப்படவில்லை என்ற தவறான முடிவுக்கு வரக்கூடாது. அவர் அவசரப்படுகிறவரும் அல்ல, தாமதிக்கிறவரும் அல்ல. நவர் நம்மை மறந்துவிடுகிறவர் அல்ல, அவர் நம் நினைவாகவே இருக்கிறார். சரியான நேரத்தில் இடைப்பட்டு அற்புதமான பலனைத் தருவார்.
அப்போஸ்தலனாகிய யாக்கோபு நமக்கு பக்தனாகிய யோபுவின் வாழ்வை நினைவுபடுத்தி அதிலிருந்து நாம் ஒரு காரியத்தைக் கற்றுக்கொள்ள வேண்டும் என்று விரும்புகிறார். இதோ, பொறுமையாயிருக்கிறவர்களைப் பாக்கியவான்களென்கிறோமே! யோபின் பொறுமையைக்குறித்துக் கேள்விப்பட்டிருக்கிறீர்கள்; கர்த்தருடைய செயலின் முடிவையும் கண்டிருக்கிறீர்கள்; கர்த்தர் மிகுந்த உருக்கமும் இரக்கமுமுள்ளவராயிருக்கிறாரே. (யாக்கோபு 5:11)
ஆம், யோபு தேவன் தனக்கு பதில் தருவாரென்று அவர்மீது நம்பிக்கையாய் இருந்தார், அந்த நம்பிக்கையில் உறுதியாகவும் பொறுமையாகவும் இருந்தார். என் கால்கள் அவர் அடிகளைப் பற்றிப்பிடித்தது; அவருடைய நெறியைவிட்டு நான் சாயாமல் அதைக் கைக்கொண்டேன். அவர் உதடுகளின் கற்பனைகளை விட்டு நான் பின்வாங்குவதில்லை; அவருடைய வாயின் வார்த்தைகளை எனக்கு வேண்டிய ஆகாரத்தைப் பார்க்கிலும் அதிகமாய்க் காத்துக்கொண்டேன்.
கர்த்தருடைய செய்கையின் முடிவை யோபு புத்தகத்தின் இறுதி அதிகாரங்கள் நமக்குத் தெரிவிக்கின்றன. யோபு தான் இழந்த அத்தனையையும் இரண்டத்தனையாய் பெற்றுக்கொண்டார் என்று நாம் வாசிக்கிறோம். ஆகவே பிரியமானவர்களே. தேவன் நிச்சயமாகவே நம்முடைய வாழ்வில் விரைவில் இடைப்படுவார். செயலாற்றுவார், நம்மை அற்புதங்களைக் காணச்செய்வார், அதுவரை இடைப்பட்ட காலங்களை நாம் இளைப்பாறுதலுக்கும், ஆயத்தமாகுதலுக்கும் ஏதுவாக பயனுள்ள வகையில் செலவிடுவோமாக! ஆமேன்.
செய்தி: பாஸ்டர் சார்லஸ் அருமைநாயகம்