விண்ணப்பம்செய்ய மனஉறுதி

Home » விண்ணப்பம்செய்ய மனஉறுதி

விண்ணப்பம்செய்ய மனஉறுதி

நீங்கள் உங்கள் கையை மடக்கி அதில் தலையை வைத்து வெகுநேரம் படுத்து உறங்கினீர்களானால் அந்தக் கை மரத்துப்போகும். மீண்டும் அந்தக் கைக்கு இரத்த ஓட்டம் பாயும் வரை அது உணர்வற்றிருக்கும். ‘நீங்கள் எதைப் பயன்படுத்தவில்லையோ அதை இழந்துபோவீர்கள்’ என்ற ஒரு சொல்வழக்கு உண்டு. அதேபோலதான் நாம் ஆவிக்குரிய நிர்விசாரத்தோடு வெகுகாலமாக வாழ்ந்து கொண்டிருப்போமானால் நம்முடைய வாழ்க்கை சாலமோன் கண்ட சோம்பேறியின் நிலம் போல ஆகிவிடும்.

சோம்பேறியின் வயலையும், மதியீனனுடைய திராட்சத்தோட்டத்தையும் கடந்துபோனேன். இதோ, அதெல்லாம் முள்ளுக் காடாயிருந்தது; நிலத்தின் முகத்தைக் காஞ்சொறி மூடினது; அதின் கற்சுவர் இடிந்து கிடந்தது. (நீதிமொழிகள் 24:30,31)

நம்முடைய வாழ்வில் சோம்பலில்லாமல் விசுவாசத்தைப் பயிற்சி செய்கிறவர்களாகக் காணப்பட வேண்டும். விசுவாசப் பயிற்சியின் ஒரு அங்கமே ஜெபமாகும். எப்போதும் விசுவாசமுள்ள ஜெபம் ஏறெடுக்கப்படும் வாழ்க்கை உயிரோட்டமுள்ளதாகக் காணப்படும். அப்படிப்பட்ட விசுவாசமுள்ள ஜெபத்தை நாம் ஏறெடுக்க வேண்டுமானால் நமக்கு வசனத்தைக் குறித்த ஒரு மனத்தெளிவு வேண்டும். வேதத்தில் எழுதியிருக்கிறதைப் புரிந்து, எழுதியிருக்கிறபடி ஜெபிக்கும்போது ஜெபத்தில் ஒரு மனத்தெளிவு ஏற்படும். தேவன் அதை நிச்சயமாக நிறைவேற்றுவார்.

விசுவாசமும் அதில் மனவுறுதியும் இருந்தால் பொறுமை நிச்சயம் நம்மில் கிரியை செய்யும். உம்மை உறுதியாய்ப் பற்றிக்கொண்ட மனதையுடையவன் உம்மையே நம்பியிருக்கிறபடியால், நீர் அவனைப் பூரண சமாதானத்துடன் காத்துக்கொள்வீர் என்று ஏசாயா 26:3 சொல்லுகிறது. அந்த உறுதியாய்ப் பற்றிக்கொள்ளும் மனது 2 பேதுரு 1:16- இல் சொல்லப்படுவதுபோல அதிக உறுதியான தீர்க்கதரிசனம் நமக்கு இருக்கிறது என்ற திடநம்பிக்கையின் பலனாக வருகிறது.

பாலும் தேனும் ஓடுகிற கானான் தேசத்தை உனக்குக் கொடுப்பேன் என்று கர்த்தர் ஆபிரகாமுக்குக் கொடுத்த வாக்குத்தத்தம் பல நூற்றாண்டுகள் கழித்து யோசுவாவின் காலத்தில் நிறைவேறுகிறது. அந்த வாக்குத்தத்தத்தின் முன்ருசியை மட்டுமே முற்பிதாக்கள் அனுபவித்தார்கள் ஏனையோர் அதை தூரத்தில் கண்டு பற்றிக்கொண்டார்கள். யோசேப்புக்கும் அந்த வாக்குத்தத்தைக் குறித்த திடநம்பிக்கை இருந்ததால் தனது எலும்புகளை கர்த்தர் கொடுக்கும் தேசத்தில் அடக்கம் செய்ய வேண்டும் என்று விரும்பினார்.

நாம் பணத்தை ஏன் சேமித்து வைக்கும் பழக்கத்தைக் கொண்டிருக்கிறோம்? அது கஷ்ட காலத்தில் உதவும் என்றுதானே? அதேபோல நம்முடைய இருதயத்தில் தேவனுடைய வார்த்தையைக் திரும்பத் திரும்பக் கேட்டுக் கேடு அதை ஆழ்மனதில் பொக்கிஷ வைப்பாக சேர்த்து வைப்போமானால் சோதனைக் காலத்தில் அந்த வசனம் நமக்குள்ளிருந்து துள்ளிக் குதித்து எழும்பி வந்து நம்மோடு இடைபட்டு நமக்கு உதவி செய்யும். எனவேதான் என் மகனே, நீ என் வார்த்தைகளைக் காத்து, என் கட்டளைகளை உன்னிடத்தில் பத்திரப்படுத்து என்று நீதிமொழிகள் 7:1 சொல்லுகிறது.

வேதாகமத்துக்கு ஒரு சிறப்பான பண்பு உண்டு, அது முன்கண்டு, முன்னறிவிக்கிறது. மேலும் தேவன் விசுவாசத்தினாலே புறஜாதிகளை நீதிமான்களாக்குகிறாரென்று வேதம் முன்னாகக் கண்டு: உனக்குள் சகல ஜாதிகளும் ஆசீர்வதிக்கப்படும் என்று ஆபிரகாமுக்குச் சுவிசேஷமாய் முன்னறிவித்தது என்று கலாத்தியர் 3:8 கூறுகிறது. எனவே நாம் முன்னறிவிக்கப்பட்டவை முற்றிலும் நிறைவேறும் என்று முழுநிச்சயமாக நம்பலாம். ஒரு எளிய உதாரணமாகக் குறிப்பிட வேண்டுமென்றால், வெளிப்படுத்தின விசேஷம்!, வெளிப்படுத்தின விசேஷம் புத்தகமே வேதம் முன்னாகக் கண்டு முன்னறிவித்த ஒன்றுதான்.

ஈசாக்கின் மூலம்தான் உன் சந்ததி விளங்கும் என்று முன்னறிவிக்கப்பட்ட வார்த்தையை ஆபிரகாம் முழுவதும் நம்பினபடியால்தான் தேவன் தன் மகனை திரும்பத் தருவார் என்ற முழுநிச்சயத்தோடு ஈசாக்கை பலிசெலுத்த முனைந்தார்.

கல்லாதவர்களும் உறுதியில்லாதவர்களுமே வேத வாக்கியங்களைப் புரட்டுகிறார்கள் என்று அப்போஸ்தலனாகிய பேதுரு எழுதுகிறார். இதை இன்னும் தெளிவாகச் சொல்லப்போனால் கல்லாதவர்களே உறுதியில்லாதவர்கள் ஆவார்கள். எனவே கொலோசெயர் 2:7 சொல்லுகிறபடி வேத வார்த்தைகளில் போதிக்கப்படுவதால் ஒருவனுக்கு விசுவாசம் உறுதிப்படுகிறது. விசுவாசம் உறுதிப்ப்டும்பொது தேவனிடத்தில் விண்ணப்பிக்க மனத்தெளிவு ஏற்படுகிறது. கர்த்தர்தாமே உங்களை தன்னுடைய வசனத்தினால் திடப்படுத்தி ஆசீர்வதிப்பாராக!.

செய்தி: பாஸ்டர் சார்லஸ் ஃபின்னி அருமைநாயகம்
செய்தியின் காணொளி இணைப்பு: https://youtu.be/8zMfUCO-WeQ

>