விண்ணப்பம்செய்ய… மனதைரியம்

Home » விண்ணப்பம்செய்ய… மனதைரியம்

விண்ணப்பம்செய்ய… மனதைரியம்

நீங்கள் ஒரு குறிப்பிட்ட இடத்தை நோக்கிச் செல்லுகிறீர்கள் என்றால் அந்த இடம் எங்கிருக்கிறது என்று தெளிவாக உங்களுக்குத் தெரிந்தால்தான் நீங்கள் அங்கு நேரத்தோடு சென்று சேர முடியும். முகவரி தெரியாமல் சுற்றி அலைந்து கொண்டே இருந்தால் நேரம்தான் வீணாகும்.

அதுபோலத்தான் ஒரு விண்ணப்பத்தை நீங்கள் தேவனிடம் வைக்க வேண்டுமானால் அந்த விண்ணப்பத்தை நிறைவேற்றக்கூடிய சித்தம் அவருக்கு இருக்கிறதா என்பதைக் குறித்த உறுதி உங்களுக்கு இருந்தால்தான் விசுவாசத்தோடும் தைரியத்தோடும் அந்த விண்ணப்பத்தை அவரிடம் நீங்கள் வைக்க முடியும்.

தேவனுக்கு சித்தத்தை அறியாமல் ஏறெடுக்கப்படும் ஜெபங்கள் கால விரையத்தில்தான் முடிவடையும். “நாட்கள் பொல்லாதவைகளானதால் காலத்தைப் பிரயோஜனப் படுத்திக்கொள்ளுங்கள். ஆகவே நீங்கள் மதியற்றவர்களாயிராமல், கர்த்தருடைய சித்தம் இன்னதென்று உணர்ந்துகொள்ளுங்கள்” என்று பவுல் எபேசியருக்கு எழுதுகிறார். (எபேசியர் 5:16,17)

உதாரணத்துக்கு நாம் வியாதி நீங்கி சுகமடைவது தேவனுடைய பரிபூரண சித்தம் என்பதால் அதைக் குறித்து நாம் அவரிடம் தைரியமாக விண்ணப்பிக்கலாம். “சித்தமுண்டு, சுத்தமாகு” (மத்தேயு 8:3) என்பதே அவருடைய சித்தமாக இருக்கிறது.

சரி, அப்படியானால் தேவசித்தத்தை அறிந்து விண்ணப்பிப்பது எப்படி என்பதைப் பார்க்கலாம்:

தேவ சித்தத்தை தேவவார்த்தையின் மூலமாகத்தான் நாம் அறிந்துகொள்ள முடியும். அதற்கு நாம் வசனத்தை கேட்க அல்லது வாசிக்க வேண்டும். “சத்தியத்தையும் அறிவீர்கள், சத்தியம் உங்களை விடுதலையாக்கும்” (யோவான் 8:32) என்றே வார்த்தை சொல்லுகிறது. இங்கே “அறிதல்” என்பதுதான் பிரதானமாக வருகிறது. தம் விருப்பமாக அவர் என்ன சொல்லியிருக்கிறார் என்பதை அறிந்தால்தான் நம் ஜெபங்கள் அதற்கு இசைந்திருக்கமுடியும்.

அடுத்ததாக அந்த அறிந்த வசனத்தைக் குறித்த சரியான “புரிதல்” நமக்கு இருக்க வேண்டும். ஆவியானவராகிய தேவன் இங்கே அதற்கு நமக்கு உதவி செய்கிறார். அந்தப் புரிதல் ஏற்பட்டவுடன் அந்தப் புரிதலின் அடிப்படையில் ஜெபிக்கக்கூடிய ஞானத்தை நமக்கு ஆவியானவரே தருகிறார். அப்போது நீங்கள் வேண்டிக்கொண்டது எதுவோ அது உங்களுக்கு அருளப்படுவதோடு, வாழ்க்கையில் தேவசித்தம் செய்தோம் என்ற பரம திருப்தியும் உங்களுக்கு ஏற்படும். தேவனே உங்களுக்கு வசனத்தின் மூலம் தமது சித்தத்தை வெளிப்படுத்துகிறார். அவரே அதை நிறைவேற்றுகிறார், அதன் மூலம் மகிமைப்படுகிறார்.

சில நேரங்களில் நீங்கள் விண்ணப்பித்துவிட்டுக் காத்திருக்கும்போது நீங்கள் எதிர்பார்த்த மாதிரியான பதில் தேவனிடமிருந்து வராமல் போகலாம். ஒரு காரியத்துக்காக நாம் ஜெபித்து நாம் நினைத்த பிரகாரம் கர்த்தர் செய்யாவிட்டால் பிசாசு வார்த்தையின் மேல் நமக்கு சந்தேகத்தைக் கொண்டுவருவான். நான் நினைத்த விதமா அவர் செய்யாவிட்டாலும், தாம் நினைத்தபிரகாரம் அவர் செய்வார். நம்முடைய நினைவுகளைவிட அவருடைய நினைவுகள் உயர்ந்தது என்ற நிச்சயம் நமக்கு வேண்டும்.

உதாரணத்துக்கு ஒரு வியாதி சுகமாக வேண்டும் என்று ஜெபிக்கிறோம் என்று வைத்துக் கொள்வோம். சில நேரங்களில் சுகமாவது தாமதமானாலும், என் கிருபை உனக்குப் போதும் என்று அவர் சொல்லிவிட்டாலும். அவர் சுகமாக்க மாட்டார் என்று ஒட்டுமொத்தமாக முடிவு செய்துவிடக்கூடாது. நாம் சத்தியத்தின் அடிப்படையில்தான் ஜெபிக்க வேண்டும், நமது அனுபவத்தின் அடிப்படையில் ஜெபிக்கக்கூடாது. அதேபோல், வாழ்க்கையில் கிடைக்கும் வித்தியாசமான அனுபவங்களின் அடிப்படையிலும் ஜெபிக்கக்கூடாது. தேவனுடைய மாறாத சத்தியத்தின் அடிப்படையில்தான் ஜெபிக்கக் கற்றுக்கொள்ள வேண்டும். “சித்தமுண்டு சுத்தமாகு” என்பதே அவருடைய மாறாத சத்தியமாக இருக்கிறது.

இதுதான் தேவசித்தம் என்று அறிந்துகொண்டால் தைரியமாக, மனத்தெளிவுடன், உரிமையோடுகூட நாம் அந்த விஷயத்தை தேவனிடம் கேட்கலாம். அப்படிப்பட்ட அறிதலையும், புரிதலையும், விண்ணப்பிக்கிறதற்கான ஞானத்தையும், தைரியத்தையும் அவரே நமக்குத் தந்தருள்வாராக!

செய்தி: பாஸ்டர். சார்லஸ் ஃபின்னி அருமைநாயகம்
செய்திக்கான காணொளி இணைப்பு: https://youtu.be/STFSNQ7rW5k

>