ஒரு நபர் வெளியிலிருந்து தன்னுடைய வீட்டுக்குள் நுழைந்தாராம். முற்றிலும் இருளாக இருந்த அவரது வீட்டுக்குள் இருந்து ஒரு விநோத ஒலி கேட்டுக் கொண்டே இருந்ததாம். அந்த ஒலியை தனது வீட்டுக்குள் இருந்து எழுப்புவது யாரென்று அவருக்குத் தெரியவில்லை. கேட்பதற்கு அது சிங்கத்தின் உறுமல் போல இருந்திருக்கிறது. பயத்துடன் அவர் அந்த இருட்டு அறைக்குள் நுழையும் போது தெய்வாதீனமாக தடைபட்டிருந்த மின்சாரம் வந்து விளக்கெரிய, அங்கு கீழே இருந்த மெகாபோன் அருகில் நின்று கொண்டு ஒரு எலி எழுப்பிய ஒலிதான் அந்த விநோத ஒலி என்று கண்டு கொண்டாராம்.
என்ன நடக்கிறது என்று புரியாமல் கலங்கும் வேளையில் திடீரென்று வந்த வெளிச்சம் எப்படி அந்த மனிதருக்கு இருந்த பயத்தை மாற்றியதோ அதேபோல நாமும இருளுக்குள் நின்று கலங்கிக் கொண்டிருக்கும் வேளைகளில் தேவன் தமது வெளிச்சத்தை அனுப்பி நம் கண்களைத் தெளிவிக்கிறார்.
உமது வெளிச்சத்தையும் உமது சத்தியத்தையும் அனுப்பியருளும்; அவைகள் என்னை நடத்தி, உமது பரிசுத்த பர்வதத்திற்கும் உமது வாசஸ்தலங்களுக்கும் என்னைக் கொண்டுபோவதாக என்று சங்கீதம் 43:3- இல் பக்தன் பாடுகிறார். ஆம், அவருடைய வசனம்தான் நமக்கு வெளிச்சத்தைக் கொண்டுவருகிறது. எனவேதான் உம்முடைய வசனத்தின் பிரசித்தம் வெளிச்சம் தந்து, பேதைகளை உணர்வுள்ளவர்களாக்கும் என்று சங்கீதம் 119: 130- இல் சங்கீதக்காரன் பாடுகிறார்.
அவர் உபத்திரவப்படுகிறவர்களின் புலம்பலை அற்பமாக எண்ணாத தேவன், அவர்களது பிரச்சனைகள் மற்ற மனிதர்களுக்கு அற்பமாகத் தோன்றினாலும் தேவனோ முகம் சுழிக்காமல் அவர்களுக்கு உதவி செய்யக்கூடியவர். நாம் பெற்ற நன்மைக்கு நன்றி சொல்லுகிறோமோ இல்லையோ அவர் நமக்கு நன்மை செய்வதற்கு தவறுவதேயில்லை. எனவே நாம் வைத்துக்கொண்டு கொடுக்காமல் இருக்கும் மனிதர்களை நினைத்து கலங்கிக்கொண்டிருப்பதைப் பார்க்கிலும், நமக்குக் கொடுப்பதற்காகவே வைத்துக்கொண்டிருக்கும் கர்த்தரை அண்டிக்கொள்வது நலம்.
அவர் எல்ரோயி, நம்மைக் காண்கிற தேவன். நமது தாயின் கருவில் நாம் உருவேற்படாமல் இருந்த அந்த நிலையிலிந்து நாம் அவரை நித்தியத்தில் முகமுகமாய் தரிசிக்கும் நாள்வரை நம்மீது வைத்த தம்முடைய கண்களை நம்மைவிட்டுத் திருப்பாமல் நம்மீது நோக்கமாக இருந்து நம்மை ஆதரிக்கிற தேவன்.
அப்படிப்பட்ட தேவனை நாம் அண்டிக்கொள்ளுகிறபோது அவர் நமது சூழ்நிலைகளை அறிந்து தமது வசனத்தை அனுப்பி நமக்கு பிரசித்தம் வெளிச்சம் தந்து நம்மை விடுவித்துக் காக்கிறார். சூழ்நிலைகளுக்கேற்ற, அதே நேரத்தில் அந்த சூழ்நிலைகளை வெல்லும் ஜெயகீதங்களை நமது நாவில் அருளுகிறார். எனவேதான் நீர் எனக்கு மறைவிடமாயிருக்கிறீர்; என்னை நீர் இக்கட்டுக்கு விலக்கிக்காத்து, இரட்சணியப் பாடல்கள் என்னைச் சூழ்ந்துகொள்ளும்படி செய்வீர் என்று சங்கீதக்காரன் சங்கீதம் 32:7- இல் பாடுகிறார்.
அப்போஸ்தலனாகிய பவுல் கொரிந்தியருக்கு எழுதின இரண்டாம் நிருபத்தில் வேத வசனத்தை “அறிவாகிய ஒளி” என்று குறிப்பிடுகிறார். அந்த அறிவாகிய ஒளியை நாம் பெற்றுக்கொள்ளும்போது அது மகத்துவமான வல்லமையாக மாறி நம்மை வழிநடத்துகிறது என்று அந்த வேதபகுதியில் வாசிக்கிறோம். (2 கொரிந்தியர் 4:6,7) ஆம், அந்த அறிவாகிய ஒளி உங்களுக்குள் நுழைந்து உங்களுக்கு பிரகாசமான மனக்கண்களைக் கொடுத்து, உங்களைப் பிரகாசிப்பிப்பதாக! ஆமேன்.
செய்தி: பாஸ்டர் சார்லஸ் ஃபின்னி அருமைநாயகம்.
செய்தியின் காணொளி இணைப்பு: https://youtu.be/pH8jD5s72K8